தொகுப்பாசிரியர் : குயில்தாசன்

வெளியீடு : அற்புதம் குயில்தாசன், பேரறிவாளன் இல்லம்,

11,கே.கே.தங்கவேல் தெரு, சோலையார்ப் பேட்டை,

வேலூர் - 635 851(9445105527). விலை : ரூ.100/-

63 சான்றோர்கள் திருக்குறளால் பட்டுணர்ந்த, அறிந்த செய்திகளைக் கட்டுரையாக்கி நயம்படச் சொல்லியிருக்கிறார்கள். 63 கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் குயில்தாசன். இந்நூலை வெளியிட்டிருப்பவர் அற்புதம் குயில்தாசன்.

“கடவுள் வாழ்த்து என்று குறளில் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதே என்றால், வள்ளுவர் தமது குறளில் எங்கேயாவது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? ஆனால்,சில நற்பண்பு கொண்ட மகனை வழிபடுக என்று கூறியிருக்கிறார். வழிபடு என்றால் பின்பற்றி நட என்பதுதானே” - 1948 இல் தந்தை பெரியாரின் இந்தக் கருத்துடன் நூல் தொடங்குகிறது என்பது இந்நூலின் செழுமைக்கு முதல் சான்று.

பாவேந்தர் பாரதிதாசனார், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், சமூகநீதிப் பெரியார் வே.ஆனைமுத்து போன்றவர்களின் அழுத்தமான கருத்துகள், நாயன்மார்கள் - சைவர்களின் பாடல் கருத்துகள், மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் போன்ற குறள் உரையாசிரியர்களின் விளக்கங்கள் என இவைகளை உள்ளடக்கி வந்துள்ள அருமையான நூல் இது.

ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ என்று கவிஞர் காசி ஆனந்தன் கூறும் போதும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற குறளை மேற்கோள்காட்டி, பால், இயல், அதிகாரம் என்று குறள் இருக்கும் இடத்தை வைத்துப் பொருள் கூறும் புதிய தெளிவைப் பேரா. சுப. வீரபாண்டியன் கூறும் போதும், ‘தீயள வன்றித் தெரியான்’ என்ற குறளை எடுத்து, தீ என்பது உணவின் கலோரி, இதன் அளவு மிகுந்தால் நோயால் துன்பம் விளையும் மரணம் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தை மருத்துவர் ச. மல்லிகேசன் கூறும்போதும் வியக்காமல் இருக்க முடியவில்லை. குறளில் எதுதான் இல்லை என்பதற்கு இந்நூல் சான்று. அனைத்துக் கட்டுரைகளும், தனித்தனிக் கோணம், தனித்தனிப்பார்வை, தனித்தனியாகச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமையப் பெற்றுள்ளன. ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாக இந்நூல் அமையப் பெற்றிருக்கிறது.