மாநிலங்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது, மோடியின் காவி பா.ஜ.க. அரசு.

29.12.2017 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவாலால் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட ‘தேசிய மருத்துவ ஆணைய’ மசோதா, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1933ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட ‘இந்திய மருத்துவ ஆணையம், 1956இல் திருத்தங்கள் செய்யப்பட்டு இதுவரை சரியாகவே இயங்கி வருகிறது.

ஆனால் மோடி அரசின் நிதி ஆயோக் என்ற அமைப்பின் பரிந்துரையை ஏற்று, பழமை வாய்ந்த இந்திய மருத்துவ ஆணையத்தைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முயல்கிறது. இந்த ஆணையத்திற்கு உறுப்பினர்கள் ஐவரும் , அரசு சாரா உறுப்பினர்கள் 12 பேரும் நியமன உறுப்பினர்கள் என்கிறது மசோதா.

அதாவது மருத்துவ ஆணையத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மருத்துவர்கள் இல்லாமல், பா.ஜ.க & ஆர்.எஸ்.எஸ். போன்ற காவிகளை நியமிக்க இருக்கிறார்கள் என்பது இங்கே இலை, காய் மறைவு.

இது கல்வியில் காவியைப் புகுத்தும் அப்பட்டமான ஒரு சார்பு மத அடையாளம்.

ஏற்கனவே வணிக மயமாகிக் கொண்டிருக்கும் மருத்துவத் துறையும் மருத்துவக் கல்வியும் தனியார் பெரு நிறுவனங்களின் கைகளில் சிக்கவைக்க இது வழிவகை செய்யும்.

பிற நாட்டு மருத்துவர்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவைகள் நேரடியாக நுழைவதைத் தடுத்துக்கொண்டிருக்கும் இந்திய மருத்துவ ஆணையத்தை கலைத்துவிட்டு, அவைகளில் ஆதிக்கத்திற்கு வழிவகை செய்யவே இந்த தேசிய மருத்துவ ஆணையம்.

நீட் தேர்வின் மூலம் ஏழைக் கிராமப்புற மாணவர்கள் எப்படி மருத்துவக் கனவைப் பறிகொடுத்தார்களோ அப்படித்தான் இந்த தேசிய மருத்துவ ஆணையமும் ஏற்படுத்தும்.

அத்துடன் பல்வேறு வழிகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்துவரும் மோடி அரசின் இந்தத் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால், மாநிலங்களின் மருத்துவக் கல்வி மருத்துவத் துறை உரிமைகள் போன்றவைகள் அனைத்தும் மாநில அரசுகளின் பிடியில் இருந்து மத்திய அரசின் கீழ் பறிபோகும், எதிர்காலத்தில்.

தமிழக ஆளுநர் கோவை, கன்னியாகுமரி என்று மாவட்டங்களுக்குச் சென்று இல்லாத குப்பைகளை, இருப்பதைப் போலப் போட்டுக்காட்டி கூட்டுவதும், மக்களின் மனுக்கள் வாங்குவதும், மாநில உரிமைகள் மீது தலையிடும் செயல்.

இதை மாநில எடப்பாடி அரசு கூனிக்குறுகி பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக ஆளும் கட்சிக்கு மக்களின் உரிமை, மாநில உரிமை பற்றியெல்லாம் கவலையே இல்லை.

பழம்பெரும் நிறுவனமான இந்திய மருத்துவ ஆணையத்தைக் கலைப்பதற்கும், தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கும் எதிராக எதிர்க்கட்சிகள் எழுச்சியுடன் போராடுகின்றன, அ.தி-.மு.க.வைத் தவிர.

பா.ஜ.க. அரசின் இத்தகைய தலை கனத்த அதிகார ஆணவத்தைக் கடுமையாக எதிர்த்துப்போராட, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டால்,

பாசிசம் வீழும், ஜனநாயகம் தழைக்கும்