குஜராத், இமாச்சல பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜகவிற்கு முதலில் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். இமாச்சலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாஜக.  இன்னொரு புறம்,  பல  ஆண்டுகளாகத்  தொடர்ந்து குஜராத்தில் ஆட்சி நடத்தி வரும் அக்கட்சி, இம்முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இரண்டு வெற்றிகளுக்கும் நம் வாழ்த்துகள்!

எனினும், குஜராத்தில் பாஜகவிற்குக் கொண்டாடத்தக்க வெற்றி கிடைத்துவிடவில்லை. அதைப்போல அங்கு காங்கிரசுக்கு மிகவும் சோர்ந்து போகத்தக்க தோல்வியும் கிடைத்துவிடவில்லை.

குஜராத் தேர்தல் புள்ளி  விவரங்களைக் கவனித்தால், பாஜக இத்தேர்தலில் தேய்ந்திருப்பதையும், காங்கிரஸ் வளர்ந்திருப்பதையும் அறிய முடிகிறது.  2007 முதல், குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப்  பார்க்கலாம்:-

வருடம் பாஜக காங்கிரஸ்

2007 -117 59

2012 115 61

2017 99 77

இதனைக் காட்டிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தெரிகின்றது. அத்தேர்தலில், பாஜக அனைத்து (26) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சட்டசபை வாரியாகக் கணக்கெடுத்தால், 182 தொகுதிகளில், 165 தொகுதிகள் பாஜகவை முன்னிறுத்தின. மோடி உட்பட மூவர் ஐந்து லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றிருந்தனர். எல்.கே.அத்வானி, 4.80 லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் வென்றிருந்தார்.

இப்போது எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது. பல இடங்களில், மிகக் குறைந்த வாக்குகள் வேறுபாட்டில், தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றுள்ளனர். மோடியின் தலைக்கு வந்த ஆபத்து,  அவர் தலைப்பாகையுடன் போயிருக்கிறது. 150 இடங்களில் வெற்றிபெறுவோம் என்றார் அமித்ஷா. 100 இடங்களைக் கூடப் பெற முடியவில்லை. பாகிஸ்தானுடன் காங்கிரசுக்குத் தொடர்பு என்றார் மோடி. எதுவும் எடுபடவில்லை.

பொருளாதார அடிப்படையில் குஜராத் எப்போதும்  வளமான மாநிலம்   என்பதை அறிவோம்.

ஆனால் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி ஆகியவை அங்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. நாடு முழுவதும், நில விற்பனைத் தொழில், கட்டுமானத் தொழில் ஆகியவை மோடி அரசின் நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அது குஜராத்தில் சற்றுக் கூடுதல் என்றே கூற வேண்டும். அதுவே குஜராத் மக்களின் மனமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

தங்கள் மாநிலத்துக்காரர் பிரதமராக இருக்கும் வேளையில் அவரைத் தோற்கடித்துவிடக் கூடாது என்ற எண்ணம் அங்கு பலரிடம் இருந்திருக்கக்கூடும். அதுவே அவர்களை இந்த அளவேனும் வெற்றி பெற உதவியுள்ளது.

எப்படியிருந்தாலும், குஜராத்தில் பாஜகவிற்குக் கிடைத்திருப்பது வெற்றியன்று, வீழ்ச்சியின்  தொடக்கமே!