வந்த வேலையை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டு விட்டார் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

அவரின் (ஆளுநர்) வேலையைத் தொடர்வதற்கு தமிழகம் வந்துவிட்டார் அடுத்த ஆளுநராக, பன்வாரிலால் புரோகித்.

ஒரு சிறிய அறிமுகம் -

பன்வாரிலால் புரோகித் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

இரண்டு முறை காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஒரு தடவை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

1991இல் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற பிடிப்பில், பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.

2003ஆம் ஆண்டு விதர்ப்பா ராஜ்ய கட்சியைத் தொடங்கினார்.

மீண்டும் பா.ஜ.க.வின் ஆதரவாளராகி 2006ஆம் ஆண்டு அசாம் கவர்னராகி, இப்பொழுது தமிழக ஆளுநராக வந்திருக்கிறார்.

மிக முக்கிய செய்தி, அவர் பல்வேறு கட்சிகளில் தாவியவர் மட்டுமல்ல, பா.ஜ.க. - காங்கிரஸ் கட்சிகளில் மாறிமாறி பதவி சுகம் கண்டவர். இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர் என்பது குறிக்கத்தக்கது.

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் டி.டி.வி.தினகரன் அணியின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் -

தகுதி நீக்கம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றத்தின் தடுப்பாணை -

முதல்வரை, அமைச்சரவையை மாற்ற வேண்டும் என்று முன்னாள் ஆளுநரிடம் தினகரன் கொடுத்த, மனு குறித்த இவரின் நிலை -

அமைச்சரவையில் பெரும்பான்மை இல்லாமை குறித்து எடுக்க வேண்டிய முடிவு -

தமிழக காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் கொடுக்க இருக்கும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியல் -

தமிழகப் பல்கலைக் கழகங்கழகங்களின் முறைகேடுகள் குறித்த நடவடிக்கைகள், என்று பெரும் சவால்கள் புதிய ஆளுநரை எதிர்க்கொண்டு இருக்கின்றன.

நடுநிலையோடு செயல்படுவார் ஆளுநர் என்று தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து எதிர் கட்சிகளும் நம்புகின்றனர்.

அப்படித்தான் வித்தியாசாகர் செயல்படுவார் என்று நம்பினார்கள், நடந்ததோ வேறு.

தமிழகத்தில் இலைக்குப் பின்னால் இருந்து, பா.ஜ.க.வின் ஆளுமைக்கு மறைமுகக் காரணமாக இருந்தார் முன்னாள் ஆளுநர் என்கிறார்கள் மக்கள்.   

ராவ் - ஆர்.எஸ்.எஸ்.காரர். லால் - ஆர்.எஸ்.எஸ்.காரர். இதுதான் உறுத்தலாக இருக்கிறது.    

Pin It