சங்க இலக்கியப் புனைகளுக்குப் பின்னால் செயல்படும் அந்தரங்க அரசியல் என்பது வீரயுகக் காலத்தின் தேவைக்கேற்ப புற இலக்கியதில் மனித உடலைக் கொண்டாடுவதும், உடைமைச் சமூகத்தின் தேவைக்கேற்ப அக இலக்கியத்தில் உடலை ஒடுக்க முயலுவதும் தானெனப்படுகிறது. உடலை ஒடுக்குவதற்கேற்ற சொல்லாடலைக் (discourse) கட்டமைப்பதைத் தவிர, ஒருத்திக்கு ஒருவன் என்ற ‘குடும்ப அமைப்பை’ வடிவமைக்க வேறு வழி ஏதும் இல்லை என்பது வெளிப்படை. இந்தக் குடும்ப வடிவமைப்பு என்ற வரலாற்று நிகழ்வில் இருந்து பெறப்பட்டதுதான் ஆண் து பெண் என்ற பாலின உறவுமுறை. இந்த உறவுமுறையின் தன்மையை ஆண்நலம் சார்ந்ததாக அமைத்துக்கொள்கிற ‘சொல்லாடல்தான்’சங்க இலக்கியம். இத்தகைய சொல்லாடலைக் குறிஞ்சி நிலத்தைப் பின்புலமாக வைத்துக்கொண்டு கடலலை எழுப்பும் பனித்திரை போல உச்சரித்த மொழியைச் சுற்றிப் பரவும் நுட்பமான தொனிகளை அமைத்துப் பாடுவதில் வல்லவர் எனப் பெயர் பெற்ற கபிலர் எவ்வாறு ‘குறிஞ்சிப்பாட்டில்’ அமைத்துள்ளார் என்பதை விளக்குவதற்கு இக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நிச்சயமென எதுவும் அற்ற வாழ்வு வெளியில், மனித உயிர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உயிர்களுக்கான நிகழ்வுகள், சந்தர்ப்பங்களின் சந்திப்புக்களாகத் தொடர்கின்றன; எதுவும் மனித மூளையின் திட்ட வரையறைக்குள் அடங்கிப் போவதாக இல்லை; “பகுத்தறிவு எனும் பயங்கரம்” எவ்வளவோ முயன்று காரண காரியங்களைக் கற்பிக்கப் படாதபாடு பட்டாயிற்று; ஆனால் எந்தக் கரைக்குள்ளும் அடங்க மறுத்து ஓடுகிறது வாழ்வு வெள்ளம்; குறிஞ்சிப்பாட்டில் இந்தத் தன்மை பதிவாகியுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் பொதுவான அகப்பாடல்களுக்கு இல்லாத கதைக்குணமாக (வ.சுப. தமிழ்க்காதல்) வந்தமைகின்ற நிகழ்வுகள் எல்லாம் எதிர்பாராத சந்தர்ப்ப நிகழ்வுகளாக அமைகின்றன.

எதிர்பாராமல் கிளி கடிந்து வாருங்கள் என அனுப்புகிறார் செவிலி; கிளி கடியும் வேலைப்பாடு நடந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராமல் முரசு அதிர்ந்தன்ன, இன்குரல் ஏற்றோடு மேகம் மழையைக் கொட்டுகிறது; அருவி கண்டு, “தவிர்வு இல் வேட்கை” எழும்புகிறது; எதிர்பாராமல் அருவி ஆட்டம்; சுனைநீர்க் குளியல்; அதைத் தொடர்ந்து நோக்கம் எதுவும் அற்ற பூச்சேகரிப்பு விளையாட்டு; எதையும் சேகரிக்கும், ஆதிமனத்திற்கான விளையாட்டு; வெற்றி / தோல்வி அற்ற போட்டி, பொறாமை அறியா “டாலர், ஈரோ” கலவாத தூய விளையாட்டு; ‘விளையாட்டு விளையாட்டுக்காகவே’ நிகழ்த்தப்படுகிறது. எதிர்பாராமல் களிறுதரு புணர்ச்சி; தொடர்ந்து மெய்யுறு புணர்ச்சி; காதலெனும் கடுநோய்; உய்யா அரும்படர்; எதிர்பாராமல் “நாடு அறிநல்மணம் அயர்கம்” என்ற உறுதிமொழியோடு ‘குடும்பம்’ குறித்த நினைவு; இன்னும் எதிர்பாராமல் இவ்வளவு நடக்கும்போது, இரவுக்குறி நோக்கித் தலைவர் வரும்போது ‘எதிர்பாராமல்’ நடக்க எவ்வளவோ சாத்தியப்பாடுகள் உள்ளனவே என்று எதிர்பாராத எதிர்கால அச்சம்; வாழ்க்கைதான் மனிதர்களை எப்படி நிறுத்தியிருக்கிறது? கபிலர், வாழ்வின் ‘நீர் வழிப்படூஉம்’ தன்மையை அழகாக இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறு எதிலும் நிச்சயமற்ற ‘இயற்கை வெளியில்’ மனிதர்கள் தங்கள் இருப்பிற்கு அர்த்தம் கற்பிக்கிற எத்தனையோ வழிமுறைகளில் ஒன்றுதான் ‘குடும்பம் அமைத்தல்’ என்கிற முயற்சியாகும். இந்த முயற்சியைக் குறிஞ்சிப்பாட்டுப் பதிவு செய்கிறது. இயற்கைப் பெருவெளியில் இயற்கையாகவே நடந்த இயற்கை உடலின் இன்ப விளையாட்டிற்கு, “நேர் இறை முன் கை பற்றி, நுமர் தர, நாடு அறி நல்மனம் அயர்கம்” (கு.பா. 231232) என்றும், “பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில், வசையில் வான்திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது” என்றும் கடவுளை வாழ்த்தி தெள்நீர் குடித்து உறுதி கூறும்போது ‘குடும்பமெனும்’அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய அர்த்தம் கற்பித்தலின் சொல்லாடலில் அமைந்துள்ள ஆணின் அதிகாரக் கட்டமைப்பு குறிஞ்சிப்பாட்டில் இயங்கும் முறையை இனிக் காணலாம். ஆணின் இந்த அதிகாரக் கட்டமைப்பு முயற்சியைத்தான் பெண்ணியலார் ‘பாலின அரசியல்’ எனப் பெயரிட்டழைக்கின்றனர்.

‘பாலின அரசியல்’ என்ற நூலை எழுதியுள்ள கேத் மில்லத் என்பார், ‘தந்தை’ என்ற அடித்தளத்தில் புனையப்பட்டுள்ள ‘குடும்பம்’என்ற கட்டுமானம்தான், ஆணின் அதிகாரம் சார்ந்த ஒரு வாழ்வு முறையை பிறக்கிற குழந்தை மனங்களிலேயே ஆழமாகப் பதிவு செய்துவிடக்கூடிய ‘ஆடுகளமாக’ நின்று செயல்புரிகிறது என்கிறார். குடும்ப அமைப்பில் தந்தையின் அதிகாரக் குரலை, அதிகார மொழியை, அதிகாரச் செயல்பாட்டை, இவைகளுக்கேற்வாறு தாய் என்பவள் பணிந்து பேசுவதை, மொழியற்றவளாய் மௌனமாக அல்லது இமைதீர்ப்பன்ன கண்ணீரோடு நிற்பதைக் ‘குழந்தை’ கவனிக்கிறது; உளவியல் அறிஞர் லக்கான் கூறுவதுபோலக் கண்ணாடிப் பருவத்தைத் தாண்டி (Mirror stage) மொழி உலகத்திற்குள் நுழையும்போதுதான் குழந்தைகளுக்கான “தன்னிலை” (subject) அரும்பத் தொடங்குகிறது.

இவ்வாறு தொடங்குகிற இடத்திலேயே குடும்பமெனும் தளத்தில் “தந்தை” என்கிற அர்த்தப் புனைவிற்கு வந்து சேர்ந்துள்ள “அதிகாரம்” இயற்கையான ஒன்றாகக் குழந்தையின் மன உலகில் பதிவாகிவிடுகிறது; எனவேதான் நவீனப் பெண்கவிஞர் வெண்ணிலா காட்சிப்படுத்துவது போல், ‘கீரை’ என்று வாசலில் குரல் கேட்டால், அம்மாவையும், செய்தித்தாள் என்று குரல் கேட்டால் அப்பாவையும் அழைக்கிற மூளையைக் குழந்தை இளமையிலேயே பெற்றுவிடுகிறது. இவ்வாறு “தந்தை” என்ற ஆண், அதிகாரம் மிக்கவன், தாய்என்ற பெண் தாழ்ந்துபோக வேண்டியவள் என்ற மனத்தயாரிப்பிற்குக் ‘குடும்பம்’ என்ற அமைப்புதான் பெரிதும் துணைபோகிறது. இத்தகைய தன்மைகளைப் பண்பாட்டு நனவிலி ஆவணக்காப்பகம், அல்லது பேசப்படாத ஆவணக் காப்பகம் என அழைக்கிறார் தெரிதா. ஆண் X பெண் உறவில் அமைந்துள்ள ஆணின் அதிகாரத் தளத்தைப் புரிந்துகொள்ள இந்த அணுகுமுறை பெரிய அளவில் பயன்பட்டுள்ளது. இதே ‘தந்தை’ என்ற அர்த்தப் புனைவு குறிஞ்சிப்பாட்டிலும் மிக நுட்பமாகச் செயல்புரிகிறது. குறிஞ்சிப்பாட்டில் ‘தந்தை’ என்ற பாத்திரம் கதை நிகழ்வுகளுக்குள் வரவில்லை; ஆனால் அத்தனை நிகழ்வுகளுக்குள்ளும் ஆழமாகப் புதைந்துகொண்டு வினைபுரிகிற ஆற்றல் மையம் தந்தைதான். பிரதிக்குள் வராமலேயே பிரதிக்கு வெளியே நின்றுகொண்டு, பிரதி முழுவதையும் ஆக்கிரமித்து நிற்பவர் குடும்ப அமைப்பின் மையமான “தந்தைதான்”.

தாய், தந்தையின் அன்பும், எனது குணமாகிய மடனும் ஒருசேரக்கெடும்படி (நீங்கும்படியாக) நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலையும் கடந்து நானும் தலைவனுமாகவே தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்தக் களவு மணத்தை நாமே தாய்க்கு அறிவுறுத்துவோமாயின் அதனால் பழி ஏற்படுமோ? என்று தனது செயல்குறித்துத் தோழியிடம் தலைவி வினவியதாக வரும் பகுதி, குடும்பமெனும் நிறுவனத்தில் “தந்தை” பெறும் அதிகாரத் தளத்தைச் சரியாக விளக்கிவிடுகிறது.

அதிகாரத்துவத்தின் அடிப்படை, அதிகாரத்திற்கு ஆட்படுவர்களிடம் குற்ற உணர்வைக் கட்டமைப்பதில் இருக்கிறது; தன் செய்கையை ஒரு குற்றமாகவே உணர்கிறாள். பழி ஏற்படுமோ என அஞ்சுகிறாள். இந்த உணர்வுதான், இயற்கையாக உடம்பில் ஊறும் ‘காமத்தை’ நோயாக, (விறல் இழை நெகிழ்த்த வீவு அருங்கடுநோய் (கு.பா3)) உயிர் பிழைத்தற்கு அரிய துன்பமாக, (உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் (கு.பா.20)) கலங்கிக் கையறுநிலையில் தேம்புகின்ற “சிறுமையளாக” ஆக்குகின்ற ஒன்றாக உணரச்செய்கிறது. (மானமர் நோக்கம் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் (கு.பா.2627)) “கொடுப்பின் நன்கு உடைமையும் வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது, எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர” (கு.பா.3032) என்ற வரிகளிலும் குற்ற உணர்வு ஏற்படுகிறது. மணியில் செய்த அணி கெடுமாயின் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் கெடுமானால் மீண்டும் நிலைநிறுத்தல் அரிது என்ற உவமையிலும் குற்ற உணர்வு ஏற்படுகிறது.

இந்த அளவிற்கு ஓர் இயற்கை நிகழ்வை வருத்தும் நோயாகத் தலைவி உணர்வதற்கான களமாக அமையும் தந்தையின் அதிகாரத்தைத் தோழி பயன்படுத்தும் உவமை ஒன்று சிறப்பாக வெளிப்படுத்தி விடுகிறது. தந்தையின் குடும்பம் X தலைவி என முரணாக வகுத்து, இரண்டையும் இரண்டு பகைவேந்தர்களாகவும், அவர்களின் சண்டைக்கு நடுவே சந்தி செய்ய நிற்கும் சான்றோராகத் தன்னையும் உருவகப்படுத்தும் தோழியின் மொழியில் குடும்பமென்ற களத்தில் தந்தையின் இடம் எத்தகையது என்பதை அழுத்தமாக விளக்கிவிடுகிறது.

“இகல்மீக் கடவும் இருபெருவேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல” (கு.பா. 2728)

என்பது அந்த உவமை வரிகள். இவ்வாறு கேத் மில்லத் விளங்கும் “தந்தையின்” இடம், ஆணின் அதிகார அமைப்பாக வினைபுரிவதைக் குறிஞ்சிப்பாட்டிலும் பார்க்க முடிகிறது. மற்றொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம். அதாவது தலைவனுக்கு இத்தகைய குற்ற உணர்வோ, குடும்பத்திற்கும் தனக்கும் பழி வந்து சேர்ந்துவிடும் என்றோ, ஒழுக்கச் சிதைவு என்றோ, உணர்வேதும் ஏற்படுவதில்லை மாறாகச் ‘சூழலை’ வெல்லுகிறவனாக வெளிப்படுகிறான். தன் இயற்கைப் புணர்ச்சி குறித்துப் ‘பெருமிதம்’ கொள்கிறவனாகக் காட்சி அளிக்கிறான். இவ்வாறு இருவரும் ஈடுபடும் ஒரே செயல், நனவிலியில் சென்று சேரும் அளவிற்குக் கட்டமைப்பட்டிருக்கும் ஆண்நலம் சார்ந்த பண்பாட்டு நடவடிக்கையின் காரணமாக உணர்வுத்தளத்தில் ஆணுக்கு ஒன்றாகவும், பெண்ணுக்கு வேறொன்றாகவும் வினைபுரிவதைக் காணமுடிகிறது.

மனிதர்களின் இருப்பு, இடம் காலமென்ற இருபெரும் முதல் பொருளால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதிகாரத்தைக் கட்டமைக்கிறவர்கள், தாங்கள் அதிகாரம் செலுத்துபவர்களின் நடமாடும் இடத்தைக், காலத்தை வரையறைக்குள் கொண்டு வருவதில் கவனமாகச் செயல்படுகின்றனர். ‘சிறைச்சாலை’ அதற்குச் சரியான சான்று; கூடவே இந்தியச் சாதிச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் இடமும் சரியான சான்று; கூடவே இந்தியச் சாதிச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நடமாடும் வெளியை வரையறுத்திருப்பதும் நல்ல சான்று. இதே தன்மைதான் ஆண் X பெண் பாலின அரசியலிலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆண்நலம் சார்ந்த சமூகக் கட்டமைப்பில் பெண்ணின் நடமாடும் வெளி வரையறுக்கப் பட்டுள்ளது; தொடர்ந்து கண்காணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. தனது கண்காணிப்பிற்குள்ளேயே இருந்த மகளை, “தினைப்புனம் வரைச்” செல்ல அனுமதிக்கிறாள் செவிலி. “கதிரவன் மறையும் நேரத்திற்குள்” வந்துவிடவேண்டும் என்று காலத்தையும் வரையறைப்படுத்துகிறாள்.

“... புள் ஒப்பி

“எல்பட” வருதியர் என நீ விடுத்தலின் (கு.பா. 3839)

‘நீ விடுத்தலின்’ என்ற வரியும் முன்பே வரும் ‘சினவாதீமோ என்ற சொல்லும் தலைவியின் நடமாடும் வெளியும், காலமும் தந்தை தலைமைசார் குடும்பம் என்ற நிறுவனத்தின் வரையறைக்கும் கண்காணிப்பிற்கும் உட்பட்டவை என்பதைச் சொல்லிவிடுகின்றன. மேலும் மழை வருகையும் அருவி ஆடலும், சுனைநீர் குடைதலும், பூப்பறித்துக் குவித்தலுமாகிய நோக்கம் ஏதும் அற்ற அந்த விளையாட்டு, எல்ல வரையறைக்குள் ஆட்பட்டுக்கிடந்த பெண் உயிரின் எல்லையில்லா விடுதலையின் ஆனந்த வெளிப்பாடாக அமைந்துகிடக்கின்றன. அத்தகைய ஓர் அதீத மனநிலையில்தான், விக்டர் டர்னர் குறிப்பிடும் மீவியல் மனநிலையில்தான் (liminal space) அவள் ‘காதலுக்கு’உள்ளாகிறாள் எனக் கபிலர் காட்டுவது எளிய ஒரு காட்சி அல்ல; மீவியல் இடத்தில் தனிமனிதர்களுக்குள் ஆதிமனநிலை மேலெழுந்து வர வாய்ப்பு கிடைக்கிறது. அந்நிலையில் “காவல், கட்டு, விதி, வழக்கென்றிடும் கயவர் செய்திகள் ஏதும்” அறியாநிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த ஆதிமனநிலையிலிருந்து நனவு நிலைக்குத் திரும்பிவிடும்போதுதான் ‘குடும்பமெனும்’ அதிகாரக் கட்டமைப்பின் உயரம் பயறுமுறுத்துகிறது; எல்லை தாண்டிவிட்டோமோ என்ற குற்ற உணர்வினால் நெருப்பில் வறுபடும் நிலை ஏற்படுகிறது; மேலும் நடமாடும் வெளியைத் தினைப்புனம் வரை அனுமதித்ததுதான் ‘அதிகார மீறலுக்கு’ காரணமாயிற்று என்று அதிகாரத்திற்குக் கற்றுத் தருகிறது குறிஞ்சிப்பாட்டென்று பொருள் கொள்ளவும் பிரதிக்குள் இடம் இருக்கிறது.

இந்த இட வரையறை “இற்செறிப்பாகவும்” இறுகக்கூடியது என்பதையும் குறிஞ்சிப் பாட்டுப் பதிவு செய்துள்ளது. தலைவியின் “மேனி மாற்றம்” கண்டு கட்டுவிச்சி, வேலன் முதலியோரிடம் அதற்கான காரணங்களை வினவியும், பல்வேறு வடிவிலுள்ள கடவுளர்களை வாயால் வாழ்த்தியும், பூவால் தூவியும் உடலால் வணங்கியும் நறுமணப் புகையால் போற்றியும் என எவ்வளவோ செய்தும், தலைவிக்கான நோய் தணியாமை கண்டு மனங்கலங்கி மயக்கம் கொண்டாள் செவிலி என்று ஒரு பக்கத்தையும், சந்தித்த அன்று கொண்ட அன்பில் இருந்து சிறிதும் குறைவில்லாமல் என்றும் இரவுக் குறிக்கு வந்து, ஆனால் காவலர் கடுகினும், நாய் குரைப்பினும், நீ துயில் எழுந்துவிட்டாலும், நிலவு வெளிப்படினும் இவளைச் சந்திக்க முடியாமல் திரும்புகிறான் என மற்றொரு பக்கத்தையும் காட்டும்போது ‘இற்செறிப்பின்’ தன்மையையும் அறிந்துகொள்ள முடிகிறது. தலைவனுக்கு இத்தகைய கால, இட வரையறை எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பல இடர் தரும் இரவும் கூட அவனுக்கு ஆனதாக இருக்கிறது.

அதிகாரம் எப்பொழுதும் மொழியைத் தனக்கானதாக அமைத்துக்கொள்ளுகிறது. ஏற்கனவே சொன்னதுபோல மனிதக்குழந்தை மொழி உலகிற்குள் நுழையும்போதுதான் அதற்கான ‘தன்னிலையே’ உருவாகிறது. எனவே ஒவ்வொரு மனமும் அதனதன் மொழியால் வடிவமைக்கப்படுகிறது என்ற நிலையில் மொழியைக் கைப்பற்றிக்கொள்ளுகிற அரசியல் மனித வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படிக் கைப்பற்றியவர்கள் கட்டமைப்புதான் ‘உண்மைகளாக’ நின்று மனிதர்களை இயக்கும் சக்திகளாக வளர்ச்சி பெறுகின்றன. இந்த மொழி அரசியல் ஆண் து பெண் உறவிலும்செயல்பட்டுள்ளது என்பதைக் குறிஞ்சிப்பாட்டிலும் அறிய முடிகிறது. 261 செய்யுள் வரிகளை உடைய குறிஞ்சிப்பாட்டில், தோழி நெருக்குதல் ஏற்படுத்தியதன் மூலமாக, அவளிடம் அறத்தோடு நிற்கும்போது 12 வரிகள் மட்டுமே பேசுகிறாள். அதுவும் தோழியிடம்தான்.

அதுவும் கையறுநிலை மொழியாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் பிரதி முழுவதும் அமைந்துள்ள ஆணின் மொழி பெருந்தகைமை மிக்கதாக வீரம் செறிந்ததாக அமைந்துள்ளது. நிகழ்வை நடத்தும் மொழியாக ஆண் மொழியும் அதன் விளைவு மொழியாகப் பெண்மொழியும் கட்டமைக்கப்படுகின்றன. ஆண் கையறு கிளவி பேசக்கூடாது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் பேசலாம். தலைவிக்கு உறுதி கூறும் இடத்தில் மட்டும் என்கிறார் தொல்காப்பியர் என்பதும் இந்த இடத்தில் நினைக்கத்தக்கது. யார் யாரிடம் அறத்தோடு நிற்பது என்றுகூட இடம், காலம் போலப் ‘பேச்சும்’ எல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் தலைவி தோழியிடம், தோழி செவிலியிடம், செவிலி நற்றாயிடம், மொழியில் பேசி அறத்தொடு நிற்கலாம். ஆனால் நற்றாய், தன் கணவனிடம் குடும்பத்தின் தந்தையிடம் அல்லது மூத்த ஆண்மகனிடம் மொழிபேசி நிற்கக் கூடாது. குறிப்பினால் மட்டுமே அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறது தொல்காப்பியம். (“தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப”. (கள. 47))

இதுபோலவே தலைவன் X தலைவி சந்திப்பிலும் பெரிதும் மொழியாடுவது தலைவன் மட்டுமே. தலைவியின் ‘பேச்சு’தடை செய்யப்பட்டுள்ளது. ‘காதலை’ வெளிப்படுத்தக்கூட ‘மொழியாடக்கூடாது’என்கிறது தொல்காப்பியம்.

“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை.” (கள.28)

புது மண்பானையில் இட்ட புதுநீர் போலத்தான் குறிப்பாகப் புலப்படுத்த வேண்டும். குறிஞ்சிப்பாட்டிலும் தலைவன் X தலைவி சந்திப்பில் மொழியாடுவதெல்லாம் தலைவனாக மட்டுமே இருக்கிறான். இவள் ‘மயில்’ போல நடுங்கி ஒடுங்குகிறவளாக வார்க்கப்படுகிறாள்.

“நடுங்குளம் எழுந்து நல்லடி தளர்ந்து” (133)
“சூர் உறு மஞ்ஞையின் நடுங்க” (161)
“உரத்திரை, அடும்கரை வாழையின் நடுங்க” (179)
“பெருமதர் மழைக்கண்
ஆகத்து அரிப்பனி உறையப்ப நாளும்
வலைப்படு மஞ்ஞையின் நலம் செலச் சாயஅய்” (249250)

இப்படித்தான் குறிஞ்சிப்பாட்டு; காதல்படும் தலைவியின் நிலையைச் சித்திரிக்கின்றது. தலைவன் பெருமிதம் மிக்கவனாகக் காட்டப்படுகிறான். (107127 வரை) அவனை முருகனாகக் கடவுள் நிலைக்குக் கொண்டு போகிறது பிரதி. பெண் மென்மையானது; ஆண்வலிமையானது என்ற புனைவும் இங்கே காட்டப்படுகிறது. அதற்கேற்ப காளை, விடை என்ற உருவகங்களும் வந்து செல்லுகின்றன. “ஆகான் விடையின் அணிபெற” வந்தான் என்றும் கூறுகிறது.

‘நான் ஒரு பொருளைத் தேடி வந்தேன்’ என்கிறான். பெண்களிடம் பேச்சு இல்லை. ‘நான் தேடி வந்த பொருளைக் குறித்து ஒன்றும் சொல்லாவிட்டாலும், பேசுவார்கள் என்று எதிர்பார்த்து நிற்கிறான். அப்பொழுதும் பேசவில்லை. அந்த நேரம் பார்த்து யானை வருகிறது. யானையைப் புறமோடச் செய்கிறான்; நடுங்குகிற தலைவியை அணைத்து, “அஞ்சல் ஓம்பு, நின் அணிநலம் நுகர்வேன்” எனக்கூறி சுடர் நுதல் நீவி, நீடு நினைக்கிறான்; அப்பொழுதும் பதில் பேச்சில்லை. ‘நின்னோடு குடும்பம் நடத்தி, நீ நடத்தும் விருந்தோம்பலில் விருந்துண்ட மிச்சிலை நின்னோடு உண்டு மகிழ விரும்புகிறேன்’என்று கடவுள் வாழ்த்தி நீர் குடித்து சூள் மொழி கூறுகிறான்; அப்பொழுதும் பேச்சில்லை; ‘உன்னுடைய முன்கையைப் பிடித்து, உன் உறவினர் தர, நாடறி நல்மனம் புரிவேன்; சிலநாள் கலங்கல் ஓம்புமின்’என ஈரமொழிக் கூறுகிறான்; அப்பொழுதும் பேச்சில்லை. இப்படிப் பெண்மொழி மௌனமாக்கப்படுகிறது; உறைய வைக்கப்படுகிறது. இப்படித்தான் ஆண், மொழியைத் தன் வயப்படுத்தி உள்ளான். மணிமேகலை காலத்தில் பேச்சுமொழி X எழுத்துமொழி என்று வரும்போது, பெண் எழுத்து மொழியைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்ற மொழித்தடையை மேற்கொள்ளும் அளவிற்கு மொழியின் மேல் ஆண் அதிகாரம் நிலை நிறுத்தப்படுகிறது.

ஆண் X பெண் பாலின உறவில் குறிப்பிடத்தக்க மற்றொரு புனைவு ஆண் வழங்குகிறவன்; பெண் பெறுகிறவள்; ஆண் விதைக்கிறவன்; பெண் அதை உள்வாங்கி உயிர் கொடுக்கும் நிலம் போன்றவள்; ஆண் வானம் போன்று மேலே இருப்பவன்; பெண் நிலம் போன்று கீழே இருப்பவள்; இத்தகைய புனைவுகள் ஆண் மேலானவள், பெண் தாழ்வானவள் என்கிற மன அமைப்பைக் கட்டுவதற்குப் பெரிதும் பயன்பட்டுள்ளன. குறிஞ்சிப்பாட்டிலும் இப்படியொரு புனைவினைக் கபிலர் நுட்பமாக அமைத்துள்ளார். முருகப் பெருமானுக்கு மறி அறுத்து வெறியாட்டு அயரும் களத்தைப் போன்று கிடந்த அந்த யானை வந்துபோன இடத்தில், அலைகள் மோதமோத அரித்துக்கொண்டே போகும் கரையில் நிற்கும் வாழைமரம் போல நடுங்கும் தலைவியைத் தாங்கி, “அழகிய சிலவான கூந்தலை உடையவளே! தடுமாறாதே! சிறிதும் அஞ்சாதே! யான் நின் அழகின் நலத்தை நுகர்வேன்” என்று சொல்லி அவன்தான் காதலை வழங்குகிறான்; இவள் பெறுகிறாள். இதை ஓர் உள்ளுறை உவமம் மூலமாகவும் குறிப்பாக உணர்த்துகிறது பிரதி. தலைவனின் நாட்டைக் குறித்துப் பேசுவது போலப் பேசி இந்தக் காம விளையாட்டால் ஆணின் மேலாண்மையை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது பிரதி.

தலைவன் நாடு; அங்கே ஒரு பாறை; அதில் மிளகுகள் உதிர்ந்து கிடக்கும் ஒரு சுனை. அந்தச் சுனையில் மேலே இருந்து மாமரத்தில் தானாகப் பழுத்த பழம், வண்டுகளால் கொட்டும் தேன், பலாமரத்தில் இருந்து தானாகப் பழுத்த பழம் ஆகியவை எல்லாம் தானாக விழவே அந்தச் சுனை கள்ளாக ஊறிவிடுகிறது; ஆனால் சுனையில் நீர்தானே கிடக்கும் என்று ஒரு மயில் அதைக் குடித்து விடுகிறது; குடித்துவிட்டுத் தாளம் தவறி ஆடும் கயிறாடு மகள் போல ஆடுகிறது.

இந்தக் குறிப்புரையில் மற்றொன்றும் புலப்படுகிறது. கலவியினால் பெரிதும் ‘ஆட்டத்திற்கு’ உள்ளாவது பெண்ணின் வாழ்க்கையே என்பதும் சொல்லப்படுகிறது. கலவியில் இப்படி என்றால் ‘குடும்பம்’ என்று வரும்போது, பெண் குடும்பத்தின் உடைமைப் பொருளாகச் சொத்தாகப் புனையப்படுகிறாள். எனவே அந்தச் சொத்தை ஊரறிய குடும்பம் தர, இவன் பெறுகிறான்; எனவேதான் “நுமர்தர நாடறி நல்மணம் அயர்கம்” (231232) என்கிறான். இவ்வாறு ஏற்கும் பாத்திரமாகவே பெண் ஆண்மைய வரலாற்றில் நிறுத்தப்பட்டிருக்கிறாள். மனைவி வழங்க, கணவன் பெறுவதாக இருந்தால் அங்கே ஒழுங்கு கெட்டுப்போகும்; தீமை வந்து சேரும்; உடைமைகள் எல்லாம் அழிந்து போகும் என்பதை முன்வைப்பதற்குத்தான், “குறுங்காலுடைய குடிசையில் மான்கண் மனைவி கள்ளை வழங்க, அதை உண்ட கணவன், தன் திணை காக்கும் தொழிலில் இருந்து தவறுகிறான். தினைப்புனத்தை யானை புகுந்து தின்று பெரிதும் அழித்துவிடுகிறது என வரும் காட்சியாகும்” எனச் சொல்லத் தோன்றுகிறது (153157)

இவ்வாறு களவு, கற்பில் முடிவதுதான் அறம்; அந்த அறத்திற்காக கற்பிற்காக உயிரினும் சிறந்த நாணத்தையும் இழக்கலாமென்ற ஒரு பெண்ணின் போராட்டப் பின்னணியை அமைத்துக்கொள்ளும் இந்த அறத்தொடு நிற்றல் துறை மூலமாகப் பாலின உறவில் ஆணின் அதிகாரத்திற்கான சொல்லாடலைக் கட்டமைக்கும் ஆதிக்க அரசியலையே உன்னதமான இலக்கியம் சார்ந்த ஒரு நிகழ்கலையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கபிலர். புனைவுகளின் உற்பத்தியில் தமிழ்மொழி பெற்றிருந்த மேன்மையை நிலைநிறுத்தும் ஒரு பிரதியாகக் குறிஞ்சிப்பாட்டு விளங்குகிறது...

Pin It