1965ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது மாணவர்களால். அப்படியொரு கொந்தளிப்பு இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்றையப் போராட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நடந்தது. மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் மனம் போன போக்கில் நடந்த ஆட்சி அது. விவசாயிகளின் வறுமையை கணக்கில் கொள்ளாத அன்றைய முதல்வர் பக்தவச்சலம், அவர்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னார். இது ஒன்று போதும் அன்றைய அலங்கோல ஆட்சிக்கு.

போதாக் குறைக்கு இந்திதான் ஆட்சி மொழி என்று சொன்னது மத்திய காங்கிரஸ் அரசு. களம் கண்டார்கள் மாணவர்கள். அந்தக் கொந்தளிப்பு 1967ஆம் ஆண்டில் ஆட்சியை மாற்றிக் காட்டியது. தி.மு.க. தலைமையில் அமைந்தது தமிழக அரசு.

இன்று தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது மாணவர்களால்.

மோசடி வாக்குறுதிகளால் ஆட்சியைப் பிடித்தார் பா.ஜ.க.வின் மோடி.

பெயருக்குப் பிரதமர் அவர். ஆனால், உலகம் சுற்றும் வேலையை அவருக்குக் கொடுத்துவிட்டு ஆட்சியைப் பார்த்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்.

ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே இந்தியா என்று ஒரே இந்து தத்துவத்தை திணித்துக் கொண்டிருக்கிறது இன்றைய மத்திய பா.ஜ.க. மோடி அரசு.

மாட்டுக் கறி சாப்பிட்டால் அடி, உதை, கொலை.

சனநாயக அடிப்படையில் மாற்றுக் கருத்து சொன்னால் அங்கே நிகழ்வது வன்முறை.

இந்துத்துவ வெறிக்கு எதிராக சனநாயகம் பேசினால் அவர்கள் அறிஞர்களானாலும் சரி, எழுத்தாளர்களானாலும் சரி, பத்திரிக்கையாளர்களானாலும் சரி கொலைதான்.

பெயருக்கு மோடி கண்டிப்பார், எதுவும் செய்ய மாட்டார்.

ஏழை மக்களுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொன்ன மோடி - ரேசன் கடைக்கு மூடு விழா நடத்தி, எரிவாயு மானியத்தை நீக்கி அதே ஏழைகளை நடுத்தெருவில் நிறுத்தினார்.

எல்லாவற்றையும் விட தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பா.ஜ.க., புறக்கடை வழியாக நுழைந்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வைக் கைப்பாவையாக்கித் தமிழகத்தின் குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.வின் பினாமியான அ.தி.மு.க.வுக்கு, அதன் அணிகளுக்குள்ளான சண்டையே முதன்மையாகி விட்டது. அது மக்களுக்கான அரசாக இல்லை.

மக்கள் வாழ்க்கைக்காகப் போராடுகிறார்கள். மாணவர்கள் கல்விக்காகப் போராடுகிறார்கள். அரசு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், போன்றவர்களின் போராட்டகளும் தொடர்கின்றன.

குரங்கு கைப் பூ மாலையான தமிழகத்தின் இந்த நிலை மாறக் காலம் கனிந்துவிட்டது.

பண்பாட்டு மக்கள் தொடர்பகம் எடுத்த வாக்கெடுப்புப் புள்ளி விவரம் சொல்கிறது இந்த ஆட்சி நீடிக்காது என்று. அடுத்த ஆட்சி தி.மு.க. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறது அந்த கணிப்பு.

இதுதான் மக்களின் மனநிலை. காலம் கனிந்துவிட்டது, உதய சூரியன் உதிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

Pin It