பாரதிய ஜனதாகட்சியை அவ்வளவு எளிதாக நினைத்துவிடக் கூடாது.

அது நாசிசத்தின் நகல். பாசிசத்தின் மறுவடிவம், அதன் தாய்வீடு இந்துமகாசபை.

அகிலபாரதிய இந்துமகாசபா 1906ஆம் ஆண்டு ‘முஸ்லீம் லீக்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதைக் காரணம் காட்டி 1915ஆம் ஆண்டு அமிர்தசரசில் மதன்மோகன் மாளாவியா, லாலா லஜபதிராய் ஆகியோர் தலைமையில் 'அகில பாரதிய இந்து மகா சபா’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள் பார்ப்பனர்கள். 1920ஆம் ஆண்டு விநாயக் தாமோதர் சாவர்க்கார் இதன் தலைவர் ஆனார்.

இந்தச் சபையின் கொள்கையை ஒரே வரியில் சொன்னால் அது ‘இந்து’ தேசியவாதம். இந்து என்ற இச்சொல்லில் பார்ப்பனியமும், இந்து ராஷ்டிரமும் ஒளிந்துகொண்டு இருக்கிறது. இதற்கு அச்சபையின் அதிகாரப் பூர்வபெயர் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’.

அதென்ன, மனிதநேயத்தில் ஒருங்கிணைந்த, ஒருங்கிணையாத மனிதநேயம்?

1949ஆம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நள்ளிரவில், அயோத்தி பாபர் மசூதிக்குள் நுழைந்து கள்ளத் தனமாக பாலராமன் சிலையை வைத்தது இந்துமகாசபா. இதற்கு உடந்தையாக இருந்தவர் அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கே.நாயர்.

இதற்குப் பரிசாக 1967ஆம் ஆண்டு கே.கே.நாயர், ஜனசங்கம் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார். இதை ‘வேலைக்கேற்ற கூலி’ என்பார் அருணன்.

இதுதான் (இந்து&முஸ்லீம் இடையேயான) இவர்கள் சொல்லும் ஒருங்கிணைந்த மனிதநேயமோ! மத மோதலுக்கான இந்து மகாசபையின் கருவிகளுள் இது முக்கியமான ஒன்று.

அடுத்து இந்து மகா சபையினால் உருவாக்கப் பெற்ற இன்னொரு பார்ப்பனிய வலது சாரித் தீவிரவாத அமைப்பு ராஷ்டிரிய சுயம் சேவக் சங்.

ராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆர்.எஸ்.எஸ். என்று மூன்றெழுத்துகளால் அழைக்கப்படும் இந்தச் சங்கத்தை 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் உருவாக்கினார் கேசவ் பாலிராம் ஹெக்டேவர். இவர் இந்துமகாசபையில் பயிற்சிபெற்றவர். 1940 முதல் 1973 வரைமகாதேவ் சதாசிவ கோல்வால்கர் இதன் தலைவராக இருந்துள்ளார்.

இந்த அமைப்பின் கொள்கை இந்துத்துவம். இதற்குள் பார்ப்பனியத்தின் அனைத்து நலன்களும் அடங்கும். வர்ணாசிரமம் உட்பட. ஆனால் இந்த அமைப்பும் சொன்னது ஒருங்கிணைந்த மனிதநேயம் என்று. இதோஅதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேரு, முகமதலி ஜின்னா இருவரும் ஒருமித்த கருத்தில் இருக்கிறார்கள். நவகாளி இந்து&முஸ்லீம் கலவரத்தை ஒட்டி மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

இந்த காரணத்தை முன் வைத்து 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் காந்தியைச் சுட்டு கொன்றான் நாதுராம் கோட்சே. இவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரஉறுப்பினன். ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்திய அரசு தடை செய்தது.

இதற்கான விளக்கத்தை 1948 பிப்ரவரி 4 ஆம் நாள் இந்திய அரசு அறிக்கையாக தந்ததை இணையதளம் இப்படிக் கூறுகிறது :

“ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்கள் நோக்கம் என்று கூறுகிறது. நடைமுறையில் அப்படியில்லாமல் விரும்பத்தகாத பயங்காரவாத நடவடிக்கைகளில் அதன் உறுப்பினர்கள் ஈடுபட்டு உள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல்,சேதப்படுத்தல், கொள்ளையிடல் போன்றசம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவருகிறது” என்று

ஆர்.எஸ்.எஸ்-ஐ ஒருபயங்கரவாத அமைப்பாகவே அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதுதான் இந்துத்துவாவின் ஒருங்கிணைந்தமனிதநேயம்.எப்படி இருக்கிறது?

இந்தியா இந்து நாடு, ராமராஷ்ட்ரம். அதை அடைய அதிகாரம் தேவை. அரசியல் அதிகாரத்தை நோக்கி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஜனசங்கம்.

பாரதிய ஜனசங்

1951 அக்டோபர் 21 ஆம் நாள் சியாமாபிரசாத் முகர்ஜியால், ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி பாரதிய ஜனசங். சியாமாபிரசாத் முகர்ஜி 3 ஆண்டுகள் நேருவின் அமைச்சரவையில் இருந்தவர். இவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தயாரிப்பு என்று ‘ஜனசங்கம்’வரலாற்றை எழுதிய கிரைக் பாக்ஸ்டர் கூறுகிறார். இவர்தான் அடல்விகாரி வாஜ்பேயி, லால்கிஷன் அத்வானி ஆகிய இருவருக்கும் குருநாதர்.

சரி! ஜனசங்கத்தின் கொள்கை என்ன? அதுவே சொல்கிறது “பாரதிய சான்ஸ்கிருதி, மர்யாதா (பார்ப்பனிய தர்மசாஸ்திரங்களின் படி) இந்தியாவைஅரசியல் பொருளாதாரஅடிப்படையில் மாற்றுவது.”அப்பட்டமான வர்ணாசிரமம்.

அக்கட்சியின் உறுப்பினர் படிவத்தின் பின்புறத்தில் “ஒற்றை ஆட்சி முறையை உருவாக்குதல், அகண்ட பாரதத்தை அமைத்தல், பசு பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு” என்று அதன் இலட்சியப் பாதையைப் பதிவு செய்கிறது.

1952 ஆம் ஆண்டிற்கானஅதன் தேர்தல் அறிக்கையில் “ஒரேநாடு”&“ஒரேதேசம்”&“ஒரே கலாச்சாரம்”&“பாரத்வர்ஷம்”என்றபிரகடனம் ஜனசங்கத்தின் முகத்திரையைக் கிழித்துவிடுகிறது.

தமிழ் போன்ற இந்திய மொழிகள் தேவநாகிரி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் வரி, ஒலி வடிவத்தையும், சொல்லாட்சியையும் ஏற்கவேண்டும். இல்லையேல் பிறமொழித் தேசிய இனங்கள் மீது ஒடுக்குமுறைதான் என்பதை“அகில இந்திய மொழியாக மிகவிரைவில் இந்தி ஏற்கப்படச் செய்யக்கட்சி உழைக்கும்”என்ற ஜனசங்கத்தின் அறிக்கை, இன்றையபா.ஜ.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

1977 ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் நிறுவனகாங்கிரஸ், பாரதிய லோக் தளம், சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ‘ஜனதா கட்சி’யாகப் போட்டியிட்டது ஜனசங்கம். வெற்றி பெற்ற ஜனதாகட்சியின் பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவி ஏற்றார். ஜனசங்கத்தின் சார்பில் அந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறைஅமைச்சராக வாஜ் பேயியும், செய்தி ஒலிபரப்பு அமைச்சராக அத்வானியும் பதவி ஏற்றார்கள்.  பின்னர் ஜனதாகட்சி உடைந்தது. ஜனசங்கம் தடுமாறியது. ஜனசங்கத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது.

பாரதிய ஜனதாகட்சி

1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஜ்பேயி தலைமையில் அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-சின் இரண்டாவது அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி.

இக்கட்சியின் உயர்மட்டத் தலைமை ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் வந்த பார்ப்பனவாதிகளிடம் இருக்கும். கீழ்மட்டத் தலைமையும், தொண்டர்களும்தான் ஆர்.எஸ்.எஸ். அல்லாத இந்துக்களிடம் இருக்கும்.

இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் இவ்வமைப்புகளின் வழியாக வந்த பார்ப்பனிய இந்துத்துவக் கொள்கைகள் பா.ஜ.க.விடம் மதவாதமாகவும், சாதியவாதமாகவும் வெறிகொண்ட கொள்கையாக மாறிவிட்டன.

ஒருங்கிணைந்த மனிதநேயம் பேசியவர்கள் 1992 ஆம் ஆண்டு அயோத்தியில், முதல்வர் கல்யாண்சிங் தயவுடன் பாபர் மசூதியை

டிசம்பர் 6ம் நாள் இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்.

இதுகுறித்து லிபரான் குழுவிடம் மன்மோகன்சிங் அளித்த அறிக்கையில், பாபர் மசூதி இடிப்புக்கு முக்கியக் காரணமானவர்கள் வாஜ்பேயி, அத்வானி, கல்யாண்சிங் என்று கூறியிருக்கிறார்.

மனிதநேயம் நொறுங்கி மதக்கலவரத்திற்கு இதுவும் கால்கோளாய் அமைந்தது.

2014-ல் நரேந்திரமோடிபிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து நாடு சுடுகாடாக மாறுவதைப் போலத் தோற்றம் தருகிறது.

பசுவதை தடுப்பு, மாட்டிறைச்சி, சாதியம், சாதி மறுப்புத் திருமணம், சாதி மறுப்புப் பேசுவோர்கள் தாக்கப்படுவதும், நிர்வாணக் கோலத்தில் அடித்துத் துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் சர்வ சாதாரணம் ஆகிவிட்டன.

சாதிக்கு எதிராகவோ, பார்ப்பனியத்திற்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ பேசுபவர்கள் குண்டர் சட்டத்தில் பலியிடப்படுகிறார்கள். மாணவர் வளர்மதியும்  அப்படி ஆக்கப்பட்டவர்தான்.

282 நாடாளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வின் ஆளுமையில் ஏறத்தாழ 70 விழுக்காடு இந்திய நிலப்பரப்பு வந்துவிட்டது என்பது கசப்பான, ஆனால் வலிமையான உண்மை.

உத்திரப்பிரதேசத்தில் 70 குழந்தைகள் இறந்ததைப் பார்த்துக் கவலைப்படாத ராஜ் நாத்சிங், கேரளாவில் ஒரு பா.ஜ.க. தொண்டன் கொலை செய்யப்பட்டதற்குத் துடித்துப் போய் கூப்பாடுபோட்டாரே. கேரளத்தில் கலவரம் உண்டாகி அதன் மூலம் ஆட்சிக்குப் போகவேண்டும் என்ற நோக்கமா அது?

இப்பொழுது அமித்ஷாவுக்கு உறுத்திக் கொண்டு இருப்பது தமிழ்நாடு.

தமக்கு வாக்களிக்காத தமிழகத்தை ‘வறட்டு’ நிலமாக ஆக்க மோடியின் முயற்சி ஒரு பக்கம்; இருந்தாலும், அமித்ஷா பா.ஜ.கவை இங்கே நிலைநிறுத்தப் பார்க்கிறார் மறுபக்கம்.

இதுமுடியுமா? முடியாதா? முடியாது என்று சொல்லமுடியாது.

இது பெரியார் விதைத்த மண். அதனால் தான் பா.ஜ.காவைத் தடுத்துக் கொண்டு இருக்கிறது பெரியாரியம். ஆனால் பா.ஜ.க. தமிழகத்தில் நுழைந்துவிட்டது.

கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், சென்னை போன்ற பகுதிகளில் அதுகால் ஊன்றிவிட்டது. அதற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கவில்லை இதுவரை. இனிமேல் அது பா.ஜ.க.வின் பிடியில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வின் மூலம் கிடைக்க சாத்தியம் ஏற்பட்டு உள்ளது.

தென் மாவட்டத்தில் கிருஷ்ணசாமியின் சாதியம், வடக்கில் பா.ம.க.வின் சாதியம்,மேற்கு மாவட்டங்களில் கொங்கு சாதியம் இவை பா.ஜ.க.விற்குப் பலம் சேர்க்க வாய்ப்பு இல்லை எனச் சொல்ல முடியாது. அதனால்தான் அமித்ஷா துணிச்சலாக வருகிறார்.

அனைத்துத் திராவிடக் கட்சிகள், இயக்கங்கள், இடதுசாரிகம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமியகட்சிகள், அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான முற்போக்கு அமைப்புகள் என்று பா.ஜ.க. எதிர்நிலையாளர்கள் எல்லாம் ஓரணியில் இதுவரை திரளவில்லை. தனித்தனியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தனிமரம் தோப்பாகாது, கரங்கள் இணைந்தால்தான் தோல்விகாணாது.

மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாதது மிகப்பெரும் பலவீனம். காலம் கடந்தபின் கதறிப்பயனில்லை.

தாமரை இலக்கியங்களில் மலரட்டும், ஆட்சி அரசியலில் உதிரட்டும்.

Pin It