இந்தியாவை பா.ஜ.க.வின் மோடி தலைமையிலான அரசுதான் ஆட்சி செய்கிறது என்பது இந்திய அரசியல் சட்டப்படி சரி.ஆனால் நடைமுறையில் அது பொய்.

பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து, நாடு நாடாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார் மோடி.நாட்டின் பிரதமருக்கு உரிய வேலையை அவர் பார்ப்பதாகத் தெரியவில்லை.

அந்தப் பதவிக்கு உரிய வேலைகளை மிகக்கச்சிதமாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு மோடிக்குப் பின்னால் இருந்து செய்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை பன்முகத்தன்மை கொண்டிருந்த இந்தியாவை இனி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் அதாவது அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம், ராமராஜ்யம் என்று வர்ணாசிரம நாடாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறது.

மாட்டு அரசியல், நீட் தேர்வு, சமஸ்கிருத திணிப்பு-, வந்தே மாதரம் போன்ற பார்ப்பனிய அரசியல் நிலைப்பாடுகளை நிலை நிறுத்த முயலும் அதே வேளையில், மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் படிப்படியாகப் பறிக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ இந்திய மாநிலங்களின் முக்கால் பகுதி பா.ஜ.க.வின் ஆளுமையில் இருக்கின்றது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் உட்படப் பல மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறுகிறது.

தேலுங்கானாவில் தேலுங்கு தேச மாநில ஆட்சி நேரடியாக பா.ஜ.க.வை ஆதரிக்கிறது.

தமிழ்நாடு, ஒடிசா போன்ற பா.ஜ.க.ஆட்சி அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் பா.ஜ.க.விடம் கூனிக்குறுகத் தொடங்கிவிட்டார்கள்.

பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கூட்டணியின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடன் சேரவேமாட்டேன் என்று ‘சத்தியம்’ செய்தவர்.

பிறகு சென்னையில் கலைஞருக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட பா.ஜ.க.வுக்கு வலிக்காமல் பேசினார்.

இன்று பிகார் அமைச்சரவையைக் கவிழ்த்த கையோடு மோடியின் பாராட்டைப் பெற்று, அதே மோடியின் ஆதரவு-டன் அடுத்த சில நாள்களில் முதல்வராகி ‘சலாம்’ போடத் தொடங்கிவிட்டார்.

தேசியப் பாரம்பரியம் கொண்டதாகச் சொல்லப்படும் காங்கிரஸ், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது.

2019ஆம் ஆண்டு கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் என்ன ஆகுமோ தெரியவில்லை.

ஒருவனின் உடலில் காய்ச்சல் இருந்தால் வெளியில் தெரிந்து விடும்.குணமாக்கி விடலாம்.

அதுவே புற்றுநோயாக இருந்தால் அது முற்றி வளர்ந்து உயிரை அழித்து விடும்.

இந்து மதவெறி, இந்துத்துவம், இந்துநாடு என்ற புற்று நோய் தெரிந்தும் - தெரியாமலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?பா.ஜ.க.விற்கு எதிரான அரசியல் களத்தில் எப்படி வலிமை சேர்க்கப் போகிறார்கள் தலைவர்கள்.

இனியும் விழிக்கவில்லை என்றால் மீண்டும் வர்ணாசிரமத்திலிருந்து தப்ப முடியாது இந்தியா.

Pin It