(ஹலோ எப்.எம். மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளுக்குத் தோழர் சுபவீ அளித்த நேர்காணல்களிலிருந்து.....)

வினா: கமல்ஹாசன் தமிழக அரசு குறித்துக் கூறியிருப்பதும், அதற்கு எழுந்துள்ள எதிர்வினைகள் குறித்தும்.....?

kamal 226விடை: கமல் சரியாகத்தான் கூறியுள்ளார். தமிழகத்தில் எங்கும் ஊழல் பரவியுள்ளது என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. அது குறித்து அதிமுக அச்சம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. பாஜக ஏன் பதறுகிறது என்பதுதான் புரியவில்லை.

வினா: கமல் அரசியலுக்கு வருவது குறித்து?

விடை : அது அவர் விருப்பம். ஆனால், தமிழக அரசு குறித்துப் பேசும் அவர், இன்றைய மத்திய அரசின் மதவாதப் போக்கு, இந்தியாவின் பன்மைத் தன்மையை அழிக்க முயலும் சர்வாதிகாரம் ஆகியன குறித்தும் பேசியிருக்க வேண்டும்.

வினா: தமிழக அமைச்சர்களின் பதிலகள் எவ்வாறு உள்ளன?

விடை: அமைச்சர்கள் சிலரின் எதிர்வினைகள் தரம் தாழ்ந்தவையாக உள்ளன. குறிப்பாக, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவன், இவன் என்று ஒருமையில் பேசியிருப்பது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததாக இல்லை.

வினா: கமல் முதுகெலும்பு இல்லாதவர் என்று ஹெச். ராஜா சொல்லியிருக்கிறாரே?

விடை: ஹெச். ராஜா என்றைக்கு கண்ணியமாகப் பேசியிருக்கிறார்? தூய்மை பாரதம் திட்டத்துக்கு கமலைத் தூதுவராக மத்திய அரசு நியமித்ததே, அப்போது கமலுக்கு முதுகெலும்பு இருந்ததாமா?

தமிழருவி மணியனின் தவிப்பு

தி இந்து நாளேட்டில் (21.07.17), கமல் கருத்து குறித்துத் தமிழருவி மணியன் கூறியுள்ளார். "ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில், கமல் துணையாக நிற்பது ஏற்புடையதாக இருக்கும். அதிமுக மீது உள்ள கோபத்தைத் தணிப்பதற்கு, திமுகவின் பக்கம் திசை திரும்பிப் போனால், அரசியல் அமைப்பு சீர்கெட்டுள்ளது என்பதற்குச் சரியான அர்த்தம் இல்லாமல் போய்விடும்" என்கிறார் அவர்.

இன்றுவரை தொடங்கப்படாத ஓர் அமைப்புக்குத் துணை நிற்க விடுக்கும் அழைப்பு ஒரு பக்கம் அதிசயம் என்றால், திமுக பக்கம் யாரும் போய்விடக் கூடாது என்னும் அவரின் தவிப்பு மறுபக்கம் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

Pin It