கருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 29, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

தேசிய கீதம் ஜன கண மன என்றும், தேசியப் பாடல் வந்தே மாதரம் என்றும் சொல்கின்றனர். வந்தே மாதரம், தேசியப் பாடல் இல்லை, தேசிய ஒற்றுமையைக் குலைக்கும் பாடல்!

pakkim chandra chatterjee19ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதி, 1882 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆனந்த மடம்' என்னும் நாவலில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. அவர் நடத்தி வந்த 'பங்கதர்ஷன்' என்னும் ஏட்டில் 1871 முதல் அவ்வப்போது அவர் எழுதிவந்த தொடர்தான் பிறகு, நூலாக வெளியாயிற்று.

அவர் வாழ்ந்த காலத்திற்கும் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நடைபெற்ற வைஷ்ணவ சந்நியாசிகள் கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல் அது.அதனை ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை ஊக்குவிக்கும் நாவலாக உருவகப்படுத்தினர்.ஆனால் அந்தப் பொய் நெடுநாள் நிலைக்கவில்லை.

அதனை அந்நாவலாசிரியரே மறுத்துவிட்டார்.மறுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.அவர் பிரிட்டிஷ் அரசின் கீழ் அதிகாரியாகப் பணியாற்றியவர்.முதலில் துணை ஆட்சியராகவும், பிறகு துணை நீதிமன்ற நடுவராகவும் (Deputy Magistrate) இருந்தவர். அரசிடம் இருந்து நெருக்கடி வந்தவுடன், பதறிப்போய், இரண்டாவது பதிப்பில் அது மீர் ஜாபர் என்னும் நவாபுக்கு எதிரான நாவல் என்று கூறிவிட்டார். அது மட்டுமின்றி, ஆங்கிலேயர்கள் எப்போதும் நமக்கு நண்பர்கள், முஸ்லிம்கள்தான் நம் எதிரிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வந்தே மாதரம் பாடலே, முஸ்லிம்களை எதிர்த்துப் பாடிச் செல்லும் பாடல்தான். வந்தே மாதரம் என்றால், தாயை வணங்குவோம் என்றல்லவா பொருள் என்றால், ஆம், அதுதான் அதன் பொருள். ஆனால் எந்தத் தாயை என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பாரதத் தாயைக் கூட அன்று, ஜெகதீஸ்வரி, காளி, துர்கை ஆகிய மூன்று வடிவங்கள் கொண்ட இந்துக் கடவுளான தாயைத்தான் அப்பாடல் வணங்குகின்றது. இந்தக் கருத்தினை அந்தப் பாடலுக்கு இசையமைத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார் (The Hindu, 22.06.2015). இதனை எப்படிப் பிற மதத்தினரும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் ஏற்க முடியும்? இது எப்படித் தேசியப் பாடல் ஆகும்?

நாட்டில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அரசு ஏன் இதுபோன்ற சிக்கல்கல்களை முன்னெடுக்கிறது? மக்களின் கவனத்தைத் திசை திருப்பத்தான்!

Pin It

காவியக்காலங்களிலேயே நான் மாதவிலக்கில் ஒற்றை ஆடையில் இருக்கிறேன், -இப்போது அரசவைக்கு வரமுடியாத நிலையிலிருப்பவள் என்று சொன்ன பாஞ்சாலி --ஐந்து அரசகுமாரர்களின் மனைவி --யுகம்யுகமாய் பெண்களை இந்த விலக்குகள் ஏன் தள்ளிவைத்தன என்பது புரியாத புதிர் அல்ல.

ஒருவேளை அந்நாட்களில் கடுமையான வீட்டுப்பணி, -மறுக்கமுடியாத இளம்வயதுக்கணவனிடமிருந்து ஒரு தற்காலிக ஒய்வு ஆகியவற்றிற்காகக்கூட அவர்கள் விலக்கிவைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தட்டில் வைத்துத் தரப்பட்ட உணவு செம்பில் தண்ணீர் என பெரும்பாலும் தென் மாநிலங்களில் சில மாவட்டங்களின் சிற்றூர்களில் இவர்களுக்காகவே கட்டிவைக்கப்பட்ட -குச்சு -எனப்படும் சிறிய அறைவாசம் --பெரும்பாலும் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டதால் ,தன்னை ஒத்த, இதே நிலையில் உள்ள மறறொரு பெண்ணுடன் பேசிக்கொண்டும் ,கதைப்புத்தகம் படித்துக்கொண்டும், மூன்று நாள்களைக் கழித்து விட்டு நான்காம் நாள் தலைக்குக்குளித்து உள்ளே வருவார்கள்.

sanitary napkin

அப்போதெல்லாம் கிராமங்களில் இவர்களின் உதிரப்போக்கு வெளியேகூட சொல்லக்கூடாத விஷயமாகக்கருத்தப்பட்டது.

பழைய புடவைகளைக்கிழித்து, உபயோகப்படுத்துவார்கள் --சரி ?

அவற்றைத்துவைத்து சகோதரர்கள் ,தந்தை போன்ற ஆடவர்கள் கண்ணில் படாமல் எந்த மந்திர சக்தியில் அவர்கள் உலர்த்த முடிந்திருக்கக்கூடும்?

இந்த சமயத்தில்தான், நமது அரசுமருத்துவமனைகள், கீழைநாடுகள் முதலியவற்றின் மூலம் சானிட்டரி நாப்கின்கள் இருப்பது வெளியே தெரிய வந்தது. வசதியானவர்களுக்கே கொஞ்சம் பகட்டு என்று நினைக்கும் அளவில்தான் தொடக்ககால விலை இருந்தது. எனினும் சுத்தம், சுகாதாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சௌகர்யம் காரணமாக பெண்களிடையே இது மிகவும் பிரபலமாகிப்போனது .ஊடகங்களும் மறைமுகமாக விளம்பரம் செய்யத்தொடங்கின .

எனினும், பதின்வயதுப்பெண் குழந்தைகளை முன்னிறுத்தி இவற்றின் அவசியத்தினை நிறுவியதன் பெருமை மறைமுகமாக உலகமயமாக்கலுக்கு உண்டு. -அதற்கு நேர்மாறாக முருகானந்தம் போன்ற விடாமுயற்சியாளர்கள் கிராமப்புறப்பெண்களின் தேவையறிந்து, முயற்சி செய்து, உருவாக்கிய எளியவகை நாப்கின்க்ளுக்கும் இதில் நேரடிப்பங்கு உண்டு. இதன் பாதிப்பை நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.

சுமார் 35 வருடங்களுக்குமுன் என் நண்பர் ஒருவரின் மகன் ஒரு வங்கியின் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமம் ஒன்றின் கிளைக்கு மேலாளாளராகப் பொறுப்பேற்றார். தன் முப்பது வயது மனைவியுடன் வீடுபிடித்து அந்த ஊரில் வங்கிப்பணியினைச் செய்து வந்தார். ஒருநாள் வீட்டின் முன் ஊர்மக்களில் முக்கால்வாசிப்பேர் வந்து நிற்கவே ,இவர் வெளியே வந்து என்ன காரணத்திற்காக, இங்கே வந்திருக்கிறீர்கள், நான் ஏதும் செய்ய வேண்டுமா என்று இயலபாகக்கேட்டார். ஒரு பெண்மணி முன்னே வந்து, உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்களா என்றுகேட்க, குழம்பிப்போன இவர் கோபத்துடன், இல்லை. அதையெல்லாம் ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் என்றார்.அந்தப்பெண்மணி சொன்னதுதான் இவரையும் இவர் மனைவியையும் உறையவைத்த சொற்கள்.

மூன்றுமாதங்களாய், உங்கள் மனைவி வீட்டுவிலக்கு ஆகியிருக்கிறார் .ஆனால் எங்கள் ஊர்வழக்கப்படி -கிராமப்பொதுக்குச்சு வீட்டில் வந்து, கட்டியபுடவையுடன் தங்கவுமில்லை.-நாலாம்நாள் ஊர்க்குளத்தில் முங்கிக்குளிக்கவும் இல்லை.எல்லாம் தீட்டாகிப்போச்சு.ஆடு, மாடு எல்லாம் சீக்காகி விட்டன.மழையே இல்லை.பெரிய குத்தம் ஆகிப்போச்சு.இந்ததீட்டுக்காவது ஒதுங்கிடணும்.இதைச்சொல்லத்தான் நாங்கள் எல்லோருமாக ஒன்றாகவந்தோம் என்றார்களாம்.

மறுநாள் பேருந்தைப்பிடித்து அந்தப்பெண்மணி தன் பிறந்தவீட்டுக்கே போய்விட்டார் என்பதும், நண்பர் 60 வயதான தன் பாட்டியின் உதவியுடன் அந்தக்கிளையில் இரண்டுவருடங்கள் பணிபுரிந்துமாறுதல் பெற்றார் என்பதும் முடிவுரைகள். ஆனால் எனக்குத்தெரிந்து பத்துவருடம் முன்புவரை அந்த ஊர் மாறவே இல்லை என்பதை, 50 வயதைக்கடந்தவர்களே மேலாளர்களாகப்போய் பணிபுரிந்துகொண்டு குடும்பங்களைபிரிந்து வாழ்ந்தனர் என்பதிலிருந்து அறிந்தேன்.

பெண்களின் உடற்கூறு காரணமாக ஏற்படும், இம்மாறுதல்களைத் தற்போதைய சின்னஞ்சிறுமிகள் இயல்பாக எடுத்துக்கொண்டு, விளையாட்டு, பயணம், படிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவதற்கு சானிட்டரி நாப்கின்கள் போன்றவை பெரிய சாளரங்கள் என்றே நாம் இருகை நீட்டிவரவேற்க வேண்டும்.

வரிவிதித்து அவற்றைச் சுமைகளாக்கிவிடக்கூடாது.ஏனெனில், அவற்றிற்கு செலுத்தும் வரிகள், நிஜமாகவே ரத்தக்கறை படிந்தவை.

Pin It

இந்தியாவை பா.ஜ.க.வின் மோடி தலைமையிலான அரசுதான் ஆட்சி செய்கிறது என்பது இந்திய அரசியல் சட்டப்படி சரி.ஆனால் நடைமுறையில் அது பொய்.

பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து, நாடு நாடாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார் மோடி.நாட்டின் பிரதமருக்கு உரிய வேலையை அவர் பார்ப்பதாகத் தெரியவில்லை.

அந்தப் பதவிக்கு உரிய வேலைகளை மிகக்கச்சிதமாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு மோடிக்குப் பின்னால் இருந்து செய்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை பன்முகத்தன்மை கொண்டிருந்த இந்தியாவை இனி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் அதாவது அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம், ராமராஜ்யம் என்று வர்ணாசிரம நாடாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறது.

மாட்டு அரசியல், நீட் தேர்வு, சமஸ்கிருத திணிப்பு-, வந்தே மாதரம் போன்ற பார்ப்பனிய அரசியல் நிலைப்பாடுகளை நிலை நிறுத்த முயலும் அதே வேளையில், மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் படிப்படியாகப் பறிக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ இந்திய மாநிலங்களின் முக்கால் பகுதி பா.ஜ.க.வின் ஆளுமையில் இருக்கின்றது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் உட்படப் பல மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறுகிறது.

தேலுங்கானாவில் தேலுங்கு தேச மாநில ஆட்சி நேரடியாக பா.ஜ.க.வை ஆதரிக்கிறது.

தமிழ்நாடு, ஒடிசா போன்ற பா.ஜ.க.ஆட்சி அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் பா.ஜ.க.விடம் கூனிக்குறுகத் தொடங்கிவிட்டார்கள்.

பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கூட்டணியின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடன் சேரவேமாட்டேன் என்று ‘சத்தியம்’ செய்தவர்.

பிறகு சென்னையில் கலைஞருக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட பா.ஜ.க.வுக்கு வலிக்காமல் பேசினார்.

இன்று பிகார் அமைச்சரவையைக் கவிழ்த்த கையோடு மோடியின் பாராட்டைப் பெற்று, அதே மோடியின் ஆதரவு-டன் அடுத்த சில நாள்களில் முதல்வராகி ‘சலாம்’ போடத் தொடங்கிவிட்டார்.

தேசியப் பாரம்பரியம் கொண்டதாகச் சொல்லப்படும் காங்கிரஸ், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது.

2019ஆம் ஆண்டு கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் என்ன ஆகுமோ தெரியவில்லை.

ஒருவனின் உடலில் காய்ச்சல் இருந்தால் வெளியில் தெரிந்து விடும்.குணமாக்கி விடலாம்.

அதுவே புற்றுநோயாக இருந்தால் அது முற்றி வளர்ந்து உயிரை அழித்து விடும்.

இந்து மதவெறி, இந்துத்துவம், இந்துநாடு என்ற புற்று நோய் தெரிந்தும் - தெரியாமலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?பா.ஜ.க.விற்கு எதிரான அரசியல் களத்தில் எப்படி வலிமை சேர்க்கப் போகிறார்கள் தலைவர்கள்.

இனியும் விழிக்கவில்லை என்றால் மீண்டும் வர்ணாசிரமத்திலிருந்து தப்ப முடியாது இந்தியா.

Pin It

முதன்முதலாகத் தமிழ்நாட்டில் வளர்மதி என்னும் மாணவியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. அறவழியில் போராடுகின்றவர்களைக் கூட இன்று உள்ள பொம்மை அரசு சிறையில் அடைக்கிறது.இதனைக் கண்டித்தும், மாணவி வளர்மதியை விடுதலை செய்யக் கோரியும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில், கல்லூரிகளின் வாயில்களில் துண்டறிக்கைகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இப்பணியை நம் தோழர்கள் தொடங்கிவிட்டனர்.

வரும் 2ஆம் தேதி புதன்கிழமை காலை, பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் சுபவீ, தோழர்களுடன் இணைந்து சென்னை, நந்தனம் கலைக்கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கைகளைக் கொடுப்பார்.

------------

ஜெர்மனியில் பெரியார்!

தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கோட்பாடுகள் உலகு தழுவியவை. அதனால்தான் இன்று அவர் புகழ் உலகெங்கும் பரவிக் கொண்டுள்ளது.அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரை இன்னும் தமிழ்நாட்டில் சிலர் தாக்கி எழுதியும், பேசியும் வருகின்றனர்.அதுவும் அவர் கொள்கைகளின் வலிமையைத்தான் காட்டுகிறது. அதே நேரம் அவர் கருத்துகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்படுவதுடன், பல நாடுகளிலும் அவர் தொடர்பான விழாக்கள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

2017 ஜூலை இறுதியில் மூன்று நாள்கள், ஜெர்மனி நாட்டில், பெரியார் அனைத்துலக மையம் சார்பில், பெரியார் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.தமிழர்களுக்குப் பெருமை, பெருமிதத்தைச் சேர்த்துள்ளார் பெரியார்.

ஜெர்மன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், உடன் சென்றுள்ள கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி, ஒளிவண்ணன் ஆகியோருக்கும் நம் மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!

அம்மாநாட்டில் பங்கேற்று கட்டுரை படிக்க இருக்கும், நம் பேரவையின் இலக்கிய அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் லதாராணி பூங்காவனத்திற்குப் பேரவைத் தோழர்கள் அனைவரின் வாழ்த்துகளும் உரியன.

Pin It