தீபாவளித் திருநாள். எங்கும் கோலாகலம். காலையிலேயே பட்டாசுகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வெடிக்கக் கிளம்பிவிடுவார்கள். தீபாவளி தினம் பெரும் சப்தத்துடன்தான் விடிகிறது. அதற்கு அடுத்த நாள் காலை தெருவெங்கும் பட்டாசு வெடித்த தாள் குப்பைகள் சிதறிக் கிடக்கும்.

பட்டாசும், வெடியும் எரியும் அந்த நிமிட நேரத்தோடு மறைந்து போய் விடுகின்றன. ஆனால் அதற்குப் பின்னுள்ள பயங்கரம் பற்றி அறிந்தால், சற்று பயமாகவே இருக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை ஒன்றின்படி சந்தையில் கிடைக்கும் 95 சதவீத பட்டாசுகள், மத்தாப்புகள் ஒலி, காற்று மாசுபாட்டு விதிமுறைகளை மீறுபவையே.

பட்டாசு வெடிப்பதால் கடுமையான தூசுப் புகை, நைட்ரஸ் ஆக்சைடு, சிறு துகள்கள் வெளியிடப்படுகின்றன. வண்ண வண்ண ஒளியை உமிழும் மத்தாப்புகளும், புஸ்வானங்களும் நச்சுத்தன்மை மிகுந்த கனஉலோகங்களான காரீயம், காட்மியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. அத்துடன் பட்டாசுகளில் சேர்க்கப்படும் ஆர்சனிக், பாதரசம், குரோமியம், இரும்பு ஆக்சைடுகள் எரிக்கப்பட்டவுடன் நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.

குழந்தைகளின் மென்மையான சுவாசப் பாதைகள் பட்டாசுப் புகைக்கு எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அவர்கள் பெரும்பாலும் வாய் வழியாகவே சுவாசிக்கிறார்கள். இது நச்சுக்காற்றை வடிகட்டுவதில்லை. இதனால் சிறு துகள்கள் எளிதில் அவர்களது நுரையீரல்களைச் சென்றடைந்து விடுகின்றன. அவர்களது நுரையீரல்கள் வளரும் தன்மையுடன் இருப்பதால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகளுக்கு பாதிப்புகளில் முதலிடம்.

தீபாவளி தினத்தன்று காதைச் செவிடாக்கும் 120 டெசிபல் ஒலி வெளிப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய கணக்கீடுகள் கூறுகின்றன. பெரும்பாலான பட்டாசுகளின் ஒலி காதை பதம் பார்க்கிறது. பட்டாசு வெடிக்கும்போது எழும் சப்தத்தால் இதயத் துடிப்பும், அட்ரீனலின் சுரப்பும் அதிகரிக்கின்றன. ரத்தக் குழாய் சுருங்குதல், கண் கருவிழி வீங்குதல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தொடர் பட்டாசு சப்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் அச்சமடைகிறார்கள்.

நிம்மதியாகத் தூங்குவது அனைவரது அடிப்படை உரிமை என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இரவு 10 மணிக்கு மேல், காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்துள்ளது. ஆனால் உள்ளூர் காவல்துறையின் அலட்சியத்தால் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் இருந்து குழந்தைத் தொழில் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், வேலையை பிரித்துக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வைத்தே செய்ய வைப்பதால், மறைமுகமாக குழந்தை உழைப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிக மோசமான, ஆபத்தான நிலைகளில் அவர்கள் பணிபுரிகின்றனர்.

எனவே, மேற்கண்ட காரணங்கள் அடிப்படையில் பட்டாசுகளை மறுப்பதன் மூலம் நமது உடல்நலத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்லாம். அதோடு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான செயல்பாடாகவும் இது அமையும்.

- தேவா

(பூவுலகு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை) 

Pin It