தமிழக அரசியல் அமைதியாக, ஆனால் அதி விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை வெளிவரும் நேரத்திற்குள்ளாகவே கூடச் சில மாற்றங்கள் நேர்ந்திருக்கக்கூடும்.

mk stalin திமுக வின் எதிரிகள் அனைவரும் பிரிந்து கிடப்பது நல்லதில்லை என்று பாஜக கருதுகின்றது. சில சமரசத் திட்டங்களை அது முன்வைத்துள்ளது. அதன்படி, பன்னீர்செல்வம் கட்சியின் தலைவராகவும், எடப்பாடி முதல்வராகவும் இருக்க இரு பிரிவினரும் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகின்றதாம். தினகரன் அணியையும் ஏதோ ஒரு விதத்தில் மிரட்டி அல்லது ஆசை காட்டிச் சம்மதிக்க வைத்து விடுவார்கள் என்று செய்தி கசிகிறது.

தமிழ்நாட்டில் திமுக மேலும் மேலும் வலிமை பெற்று வருவதைத் தங்களுக்கான ஆபத்து என்று பாஜக நினைக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு ரஜினியின் அரசியல் நுழைவுதான் சரியான வழி என்று அக்கட்சி உறுதியாக நம்புகின்றது. ஆனால் அது உடனடியாக நடக்கும் என்று கூற முடியாது. கடைசி நேரத்தில் ரஜினி தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டால், அந்தக் கனவு பலிக்காமல் போய்விடவும் வாய்ப்புண்டு. அதனால், அதிமுக வை ஒன்றாகச் சேர்ப்பதுதான் ஒரே வழி என்பது அவர்கள் கருத்து.

அவர்கள் எண்ணப்படி ரஜினி அரசியலுக்கு வந்து, தனிக்கட்சி தொடங்கி தங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டால், அதிமுக கூடாரத்தைக் காலி செய்துவிடலாம். அங்குள்ள தொண்டர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலருக்கும் ஆசைகாட்டி இங்கு இழுத்துவிடலாம்.

இந்த எண்ணத்தில்தான் பலரையும் இப்போது அதுகுறித்துப் பேச விடுகின்றது பாஜக. குருமூர்த்தி போன்றவர்கள் வெளிப்படையாகவே, “ரஜினிதான் தமிழகத்தின் மீட்பர் (விமீssவீணீலீ) என்கிறார். அடுத்த எம்ஜிஆர் அவர்தான் என்கிற அளவுக்கு அவர் நேர்காணல் (டைம்ஸ் ஆப் இந்தியா - 22.06.2017) அமைந்துள்ளது. சில நிபந்தனைகளையும் ரஜினிக்குக் குருமூர்த்தி விதிக்கிறார். ரஜினியிடம் முறையான நிகழ்ச்சி நிரல், முறையான மொழி, முறையான வழிகாட்டல் ஆகிய மூன்றும் இருக்குமானால், அவர் வெற்றி உறுதி என்கிறார். அது என்ன முறையான வழிகாட்டல்? பாஜகவின் வழிகாட்டல்தான்!

அந்த நேர்காணலில் இன்னொரு உண்மையையும் குருமூர்த்தி போட்டு உடைத்திருக்கிறார். நீண்ட நாள்களாக சோ, ரஜினியை வரும்படி வலியுறுத்தத்தினாராம். இவரோ, வெறும் கருத்துரைதான் சொல்கிறாராம். ரஜினியின் ஆன்மிகச் சிந்தனை, பாஜகவிற்கு மிக நெருக்கமானதாம். இவர்கள் எல்லோருக்கும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் ஒரே நோக்கம்தான், அதற்குத்தான் இப்படிச் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகின்றனர்.

தமிழருவி மணியனின் குரலும் அதே நோக்கில்தான் ஒலிக்கின்றது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். திமுக மட்டும் வந்துவிடக்கூடாது. அந்த அடிப்படையில்தானே எல்லோரும் ஒன்று சேர்ந்து சென்ற தேர்தல்களில் விஜயகாந்தை முன்னிறுத்தினார்கள். கிங் ஆவதா கிங் மேக்கர் ஆவதா என்று இவர்கள் எழுப்பிய குழப்பத்தில், இன்று அவர் ஒன்றுமே ஆகாமல் போய்விட்டார். அடுத்து, தங்கள் ஆசைக்கு ரஜினியைப் பலியாக்கத் திட்டமிடுகின்றனர்.

இந்த புத்திசாலிகள் எல்லோரும் ஒன்றை நினைவு வைத்துக் கொள்வது நல்லது. யாரை நீங்கள் அழைத்து வந்தாலும் அல்லது யாரை எல்லாம் நீங்கள் ஒன்று சேர்த்தாலும், திமுக வின் வாக்கு வங்கியிலிருந்து ஒரு வாக்கு கூடச் சிதறாது. எந்தப் பக்கம் ஓடலாம் என்ற சிந்தனை எப்போதும் திமுக தொண்டனுக்குக் கிடையாது.

ரஜனியின் உடல்நலம், வயது, அவருடைய இயல்பான சுபாவம் எதுவுமே பரபரப்பான அரசியலுக்கு ஏற்றதில்லை. “தன்னை அறிதலே” மிகப் பெரிய ஆன்மிகக் கோட்பாடு என்று கூறிக்கொள்வார்கள். அது உண்மையானால், ரஜினி தன்னை அறிவதோடு மட்டுமின்றி, தன்னைக் காத்துக் கொள்வதற்கும் இதுவே சரியான தருணம். அவர் நினைக்கும் ஆன்மிகமும், தனிமையும் வேறு. இவர்கள் காட்டும் சுயநலம் மிக்க ஆன்மிக அரசியல் வேறு!

எத்தனையோ கோட்டைச் சுவர்களை, தடைகளைத் தாண்டி வந்த கழகம் திமு கழகம். இன்று உடைந்து கிடைக்கும் அதிமுக என்னும் குட்டிச் சுவரையும், இன்னமும் தமிழ்நாட்டில் கட்டவேபடாத பாஜக என்னும் வெற்றுத்தரையையும் தாண்டுவதா கடினம்? 

Pin It

modi yoga

ஆர்.எஸ்.எஸ்-இன் முகமுடி பா.ஜ.க.

அதன் ஒவ்வொரு அசைவிலும் மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் இருக்கும்.

இன்று அவர்களிடம் சிக்கிக்கொண்டு இருப்பது ‘யோகா’.

யோகா ஓர் உடற்பயிற்சி. அதற்கு மதம் இல்லை, சாதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது என்கிறார் மோடி.

உண்மையும் அதுதான். யோகா சூத்திரத்தில் கூறப்பட்டுள்ள 1.யமா, 2.நியமா, 3.ஆசனா, 4.பிராணாயமாம், 5.பிரத்யாஹாரா, 6.தாரணா, 7.த்யானம், 8.சமாதி ஆகிய எட்டும் யோகா என்ற பெயரில் இருக்கும் உடற்பயிற்சிகள். இதில் மதச் சிந்தனை இல்லை - பதஞ்சலி வருவதற்கு முன்னர்.

பதஞ்சலியின் யோகா என்பது மதத்திற்குள் இருந்து ஆத்திகமாக வெளிவருகிறது.

அவரின் யோகா குறித்த விளக்கம், கடவுளுடன் இணைந்த சாங்கியமாக மாறுகிறது.

‘‘யோகாவைச் (பதஞ்சலி) சாங்கியத் தத்துவத்தில் நுழைப்பதால் ஆத்தியகர்கள் திருப்தி அடைந்தார்கள்’’ என்கிறார் கார்பே.

கடவுளை ஏற்று கொண்ட பிற்காலச் சாங்கியத்துடன் யோகாவை இணைக்கிறார் பதஞ்சலி.

யுஜ் என்பது யோகம் என்ற சொல்லின் வேர்ச்சொல்.

யுஜ் என்றால் இணைவது என்பது பொருள். இணைவது என்றால் ‘‘ஜீவாத்மாவும்’’ ‘‘பரமாத்மாவும்’’ இணைவதாகும். இதற்கு எல்லையற்ற பரம்பொருளுடன் இணைவது, இரண்டறக்கலப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

அதுமட்டுமல்ல யோக சாத்திரத்தின், இராஜயோகத்தில் யோகா தவிர கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகியவையும் இருக்கின்றன. அவையும் யோகாக்களாம்.

மத்தியில் பா.ஜ.க அரசு வந்தவுடன் யோகாவுக்கு இவ்வளவு பெரிய விளம்பரமும், முக்கியத்துவமும் கொடுப்பதன் நோக்கம் இதுதான்.

யோகாவுக்கு மதம்ச் சாயம் இல்லை என்று சொல்லிக்கொண்டே மக்களிடம் இந்துத்துவ விதைகளை யோகா மூலம் விதைக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கிறது மோடி அரசு.

குறிப்பாகப் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளிடமும் -

கல்லூரி மாணவர்களிடமும் -

இது உடற்பயிற்சி என்ற போர்வையில் இந்துத்துவத்தைக் கொண்டு செல்ல முயல்கிறது இந்த அரசு.

சமண மதத் தலைவர் மகாவீரர் 12 ஆண்டுகள் உடற்பயிற்சி என்ற யோகாவைச் செய்தார்.

சமணம் இந்து மதக் கருத்துகளில் உடன்பட்டது என்பது நோக்கத்தக்கது.

புத்தர் 6 ஆண்டுகள் யோகா என்ற உடற்பயிற்சியைச் செய்தார்.

அப்பொழுது அதில் உள்ள இந்துத்துவச் சிந்தனைகளைக் கண்டறிந்த அவர், இந்த யோகாவால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று சொல்லி, அந்த யோகாவை விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்.

பவுத்தம் இந்து மதத்திற்கு எதிரானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

இப்போது யோகாவை கையில் எடுத்து இருக்கிறார் மோடி. உடற்பயிற்சி என்ற பெயரில் மதத்தைத் திணிப்பதற்காக.

*************************

காவி முகமும் தலித் முகமூடியும்

வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தியிருப்பதாகப் பறை சாற்றிக் கொண்டுள்ளது. அவர் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர் என்பதே உண்மை. தலித் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், கோலி என்னும் சாதியப் பிரிவைச் சேர்ந்தவர். அந்தப் பிரிவு, அம்மாநிலத்தில் அட்டவணைச் சாதியினர் பிரிவில் வருகிறது. உண்மையில் அவர் ஒரு நெசவாளர் குடும்பத்தவர். தமிழ்நாட்டில் செங்குந்த முதலியார்கள், அடிப்படையில் நெசவாளர்கள்தாம். முதலியார் என்பது சாதிப்பட்டம். அங்கோ அந்த சமூகத்தினர் அட்டவணைச் சாதியினர். மற்றபடி தீண்டப்படாதவர்கள் அல்லர். எஸ்.சி. சான்றிதழ் வைத்துள்ள ஒருவர் அவர். அவ்வளவுதான்.

முற்போக்குச் சிந்தனையாளரான கே.ஆர்.நாராயணனுடன் இவரை ஒரு விதத்திலும் ஒப்பிட முடியாது!

Pin It

அய்யா சுபவீ அவர்கள் சோதிடம் குறித்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டது பல பேருக்கு வியப்பாக இருந்திருக்கக் கூடும். அஷ்டமி, நவமி சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டாலே அது ஏதோ புதிர் போன்று நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்கிறார்கள் என்றார். அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்த நாள்களின் எண்ணிக்கை அடிப்படையில் அஷ்டமி என்றால் அது எட்டு என்பதையும், நவமி எனில் அது ஒன்பதையும்

குறிப்பதாக அமையும் என்றும் தசமி எனில் அது பத்தாம் நாள். எண்ணிக்கையின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பே ஒழிய வேறொரு மறைபொருளும் அதில் இல்லை என்றார்.

அவர் சொல்ல வந்த செய்தியின் உட்கரு, புரியாத மொழி எனில் எல்லாமே நமக்கு மந்திரமாக அமைந்து விடும். எதனுடைய உட்கருத்தும் புரிந்து விட்டால் அப்பொருள் மீதான அச்சம் விலகிவிடும் என்பதே.

அவர் மற்றொன்றையும் வேடிக்கையாக சொல்வார். நாட்காட்டியை வாங்கிப்பார்த்த மாணவன் ஒருவர் சொன்னாராம். ‘‘இந்த வருஷம் லீவு ஜாஸ்தி’’ என்று. இதில் வருஷம் என்பது சமஸ்கிருதம், லீவு என்பது ஆங்கிலம், ஜாஸ்தி என்பது உருது. எல்லாம் போக தமிழில் ‘‘இந்த’’ என்ற சொல் மட்டுமே நிற்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் சொற்களில் ஏராளமான பிற மொழிச் சொற்கள் நம்மை அறியாமலேயே கலந்துவிடுகின்றன. இதனை அடையாளம் கண்டு தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.

தூய தமிழ்ச்சொல் எனும் செயலி நமக்கு உதவும் google Play Store செல்லுங்கள். TooyaTamil என தட்டச்சுங்கள். செயலியை தரவிரக்கம் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு ஐயமான தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்து இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்தலாம்.

பொதுவாக, கிரந்த எழுத்துகள் கலந்த சொற்கள் தமிழ் சொற்களாக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான சொற்களோ அல்லது பொருள் தெரியாமல் வழக்கத்தில் பயன்படுத்தும் சொற்களோ இருக்குமானால் நேராக இச்செயலியில் தட்டச்சு செய்து பார்க்கலாம்.

உயிர், மெய், கிரந்த எழுத்துகள் அடங்கிய விசைப்பலகையினை இச்செயலியில் அளித்துள்ளனர். இதில் தொடு தேர்வு மூலமே சொற்களை வடிவமைத்து அதற்கிணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறியலாம்.

நீண்ட நெடு நாள்களாக தமிழ்ச்சொற்களென நாம் நினைத்துப் பயன்படுத்தி வந்த பிற மொழி சொற்களை நாம் அடையாளம் காணவும் முடியும்

அடிக்கடி பயன்படுத்தும் சொற்களைச் சேமித்து வைத்து காண்பிக்கும் வசதி இதில் கொடுத்திருக்கிறார்கள். அர்த்தம், சந்தோஷம், இஷ்டம், சுலபம், தினம், நமஸ்காரம், புஷ்பம், ரதம், விஷயம் போன்ற சொற்களை நாம் மீண்டும் மீண்டும் நடைமுறையில் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். ஆனால் இவையாவும் தமிழ் சொற்கள் அல்ல.

அதற்கிணையான தமிழ்ச் சொற்களாக முறையே பொருள், மகிழ்ச்சி, விருப்பம், எளிது, நாள், வணக்கம், மலர், தேர், செய்தி எனத் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி நாம் நம்முடைய தாய்மொழியை செம்மைப்படுத்துவோம். இன்னும் இன்னும் கூடுதல் சொற்களுடன் இச்செயலி மேம்படுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கையினை இதன் வாயிலாக வைக்கிறேன்.

இச்செயலியினைப் பயன்படுத்துவோம். பிற மொழிச் சொற்களை நம் தாய்மொழியில் இருந்து அகற்றுவோம். தூய தமிழ்ச் சொற்களை எழுதுவோம், பேசுவோம்.

இந்தச் செயலியினைத் தரவிரக்கம் செய்ய இந்த இணைப்பைச் சுட்டவும்

https://play.google.com/store/apps/details?id=com.google.

Pin It

ஓய்வு பெற்ற நீதியரசர் கர்ணனின் கைது என்பது வர்ணமும், ஆளும் வர்க்கமும் இணைந்து செய்யும் சதிச்செயலாகத் தெரிகிறது.

ஆளும் வர்க்கத்தினருக்கும், ஆதிக்கவாதிகளுக்கும் அடங்கியும், ஒடுங்கியும் போக வேண்டும். உயர்ந்த பதவிகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை மிரட்டி அடக்கி வைக்கப் பார்க்கிறது பாஜக இந்துத்துவ அரசு.

அதற்காக நீதிபதி கர்ணன் சந்தேகத்திற்கோ, குற்றங்களுக்கோ அப்பாற்பட்டவர் என்று சொல்லமுடியாது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படியும், முறைப்படியும் விசாரித்துத் தவறு இருப்பின் நடவடிக்கை எடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. அதை யாரும் எதிர்கவும் போவதில்லை.

ஆனால், நீதியரசர் கர்ணனுக்கு நடந்ததோ சரியான சட்ட நடைமுறையன்று.

justice cs karnan

இவரை விடவும் அதிகமான குறைகளும், குற்றங்களும் கூறப்பட்ட பல நீதியரசர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படவே இல்லை.

இன்னும் ஒருபடி மேலே போய் பார்த்தால், அப்படிப்பட்ட நீதியரசர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கி கவுரவிக்கும்போக்கு ஆளும் இந்துத்துவ மோடி அரசின் செயலாக இருக்கிறது.

இந்நிலையில் ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நீதியரசர் கர்ணன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், அவர் வெளிப்படையாகப் பல நீதியரசர்கள் மீது குற்றம் கூறி ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கொடுத்துள்ள புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏன்?

நீதியரசர் கர்ணன் மீது இப்படிப்பட்ட அவசரக் கைது நடவடிக்கை என்பது தலித்துக்களுக்கு எதிரான இந்துத்துவ பழிவாங்கல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஒருபக்கம் தாங்கள் தலித்துக்களுக்கு எதிரானவார்கள் அல்ல எனத் தம்பட்டம் அடிக்கிறது ஆர்எஸ்எஸ்.

இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ்&இன் தலித் ஒருவரைக் குடியரசு தலைவராக்கத் துடிக்கிறது மோடி அரசு.

தங்களின் அதிகார ஆட்டங்களுக்குத் துணை போகாதவர்களை ஒடுக்க நினைப்பதும், தங்களின் ‘மனுநீதி’ சாஸ்திர சட்டங்களைப் பின்பற்ற மறுக்கும் சூத்திரர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து இழிவுபடுத்துகிறது.

அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகச் சமூகத்தில் கேவலப்படுத்துவதும் அப்பட்டமான பார்ப் பனிய வர்ணாசிரமச் சதியின்றி வேறில்லை.

நீதியரசர் கர்ணனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த அதே நாளில்தான், விஜய் மல்லையா வழக்கை ஆர அமர பொறுமையாய் சூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

இது எப்பேர்ப்பட்ட கேலிக் கூத்து?

 விஜய் மல்லையா மீதும், அதே நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான். மல்லையாவோ ஒருமுறை கூட ஆஜராகவில்லை. ஆனால், நீதியரசர் கர்ணனோ ஒருமுறை ஆஜரானார்.

ஆந்திரா&தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி நாகார்ஜுனா ரெட்டி மீது (உதவியாளர் ஒருவரை உயிரோடு கொளுத்திய வழக்கு உட்பட) பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் அவர் மீது Impeachment தீர்மானம் (Impeachment - Procedure to remove Judge) கொண்டுவர எம்பி-க்கள் முயன்றும் ஏதும் செய்ய இயலவில்லை. ஆனால், நீதியரசர் கர்ணன் அவர்களோ என்னை Impeachment செய்யுங்கள் நான் பாராளுமன்றத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொன்ன போதிலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் கைதுச் செய்தது.

பார்ப்பானுக்கு ஒருநீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி.

காவிகளின் ஆட்சியில் ‘நீதி’த்துறை ‘மனுநீதி’யாய் மாறியது. நீதியரசர் கர்ணன் தான் சார்ந்த துறையில் ஊழல் மலிந்து இருப்பதைச் சூட்டிக்கட்டியது எப்படிச் சட்டத்திற்கு புறம்பானது.

உண்மைகளை உலகறியத் துணிவுடன் சொன்னதற்காக ஒரு நீதியரசரை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கொச்சைப்படுத்துக்கிறது நீதிமன்றம். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட

வராயின் அவரைக் கைது செய்தது அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறு.

அவர் நல்ல மனநிலையில் உள்ளதால்தான் கைது செய்தோமெனச் சொன்னால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என முன்பு சோதனையிட உத்தரவிட்டது மனித உரிமை மீறல்.

இந்த உரிமை மிறலுக்கு என்ன சொல்லப் போகிறது உச்சநீதிமன்றம்.

இந்நாட்டில் கர்ணன்கள் எப்போதும் துரோகத்தால்தானே வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சில கேள்விகள்.

1)            நீதியரசர் கர்ணன் கொடுத்த புகார்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

2)            உச்சநீதிமன்ற நீதியரசர்களானலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.

3)            இதே சூழலில் ஒரு பார்ப்பன நீதியரசர் இப்படி ஒரு புகார் கொடுத்து இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்குமா? இல்லையா?

4)            நீதியரசர் கர்ணன் கைது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, நீதித்துறை சார்ந்த பிரச்சனையில் பிரதமர் ஏன் தலையிடவில்லை?

5)            குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட முடிவு என்ன?

6)            நீதித்துறை ஊழலும், சாதி ஆதிக்கமும் உள்ளது என்ற கர்ணன் அவர்களின் புகார் குறித்து உச்சநீதிமன்றமோ, மத்தியரசோ இதுவரை ஏன் கருத்து கூறவில்லை?

7)            ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் மத்திய பாஜக இந்துத்துவ ஆட்சியில் சட்டம் வேகமாக பாய்கிறது அது ஏன்?

8)            நீதிமன்றக் குற்றக்கூண்டில் நின்ற காஞ்சி மட ஜெயேந்திரரிடம் ஆசி பெறும் நீதியரசர்களும், குடியரசு தலைவரும் உள்ள இந்த நாட்டில் சூத்திரர்கள் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

காவி அரசின் மனுநீதியை நீதித்துறையின் மூலம் நடைமுறைப்படுத்த எண்ணுகிறது ஆளும் பாஜக அரசு.

நீதிமன்றத்தில் நிகழும் ஊழல், தலித்திய எதிர்ப்பு போன்றவைகளைத் துணிச்சலாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார் நீதியரசர் கர்ணன்.

அதற்காக நீதிமன்ற அவமதிப்பு என்று நீதியரசர் கர்ணனை அவசர அவசரமாகக் கைது செய்து ‘நீதிமன்ற மாண்பை’க் காப்பாற்றத் துடிக்கிறது அதிகார பீடம்.

நீதிமன்றத்தையே மதிக்காத, நீதிமன்ற உத்தரவுகளை மீறிச் செயல்படும் கர்நாடக அரசின் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது?

நீதியரசர் கர்ணன் மீதான நியாயமற்ற நடவடிக்கையை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய புரட்சியாளார் டாக்டர் அம்பேத்கர் உயிரோடு இருந்து பார்த்து இருப்பாரே ஆனால் &

அவரின் கண்களில் இருந்து திரண்டு வீழும் கண்ணீர் துளிகள் இந்த மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயிருக்கும்.

காவிகளின் அதிகாரம் அப்படிப்பட்டது.

Pin It

 

 

கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 17, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It