Tholar C Mahendran 350(மே நாள், கார்ல் மார்க்சின் பிறந்தநாள் ஆகியனவற்றை ஒட்டி, இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான தோழர் மகேந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்.)

நேர்காணல் : எழில். இளங்கோவன்

தொழிலாளர் தினம் ஒரு நூற்றாண்டு கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமயம், தாராளமயம் தாண்டி பெரும் கார்பரேட் மயமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர்கள் உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். இதன் பொருத்தப்பாடு பற்றிச் சொல்லுங்கள்.

உழைப்பின் முழுப்பங்கும் தொழிலாளர்கள் பெறவேண்டும் என்பதற்கான உரிமை நாள், மே தினம். 1885ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில், தொழிலாளர்கள் தங்கள் மீதான சுரண்டலை எதிர்த்து நடத்திய போராட்டம். அதில் பலர் கொல்லப்பட்டார்கள். அந்தத் தியாகிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் நினைவாகத்தான் உலகத் தொழிலாளர் தினம் அறிவிக்கப்பட்டது. அதுதான் ஆண்டுதோறும் மே முதல்நாளான தொழிலாளர் தினம். உலகமயம் என்பது உலகத்தில் இருக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் செயல் அல்ல. மானுடத்தின் முழு உரிமை பெற்ற பிரபஞ்ச இயற்கை வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் அவைகளைச் சுரண்டிப் பெரும் லாபம் சேர்க்கக் கூடிய கொலைகாரத் திட்டம்தான் உலகமயம். இது மனிதத்தையும் கொலை செய்கிறது, இயற்கையையும் கொலை செய்கிறது. மாமேதை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அறிவிக்கப்பட்ட, வெட்கமற்றச் சுரண்டலைத் தவிர வேறு எதையும் நோக்கமாக முதலாளித்துவம் கொள்ளவில்லை. இதை முழுவதுமாக நிருபிக்கக்கூடிய ஒன்றுதான் உலகமயமும் அதன் தொடர்ச்சியும். ஆனால் மே தினம் என்பது ஓர் இலட்சிய நாள். இதைவிட பொருத்தப்பாட்டிற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை.

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி. தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. இவ்விரு ஆட்சிகளிலும் தொழிலாளர்கள் நிலை குறித்து உங்கள் பார்வை என்ன?

உலகமயம் என்பது தொழிலாளர்களுடைய உரிமையைத் தீவிரமாக அழிப்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மனிதனை நிரந்தரம் அற்றவனாக, எந்தவிதப் பாதுகாப்பும் அற்றவனாக மாற்றுவதுதான் உலகமயமாக்கலின் நோக்கம். மாதம் ஒன்றுக்கு மூன்று லட்சம் சம்பளம் வாங்குபவரில் இருந்து, முப்பது ரூபாய் கூலி பெறுபவர் வரை எல்லோரும் நிரந்தரம் அற்ற தொழிலாளர்கள்தான். இதுதான் உலகமயம் உருவாக்கிய சட்டம். இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியும் உலக மயத்தை முழுமையாக நிறைவேற்றும் பொழுது, இந்த இரு கட்சிகளின் ஆட்சிகளில் வேறுபாடு ஒன்றும் கிடையாது. தொழிலாளர்களின் உரிமைகளை இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டாகப் பறிமுதல் செய்வதில்தான் முழுக்கவனம் செலுத்துகிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

கடந்த நாடா-ளுமன்றத் தேர்தலின் போது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று மோடி சொன்னார். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பொன். இராதாகிருஷ்ணன் இப்பொழுது சொல்கிறார். இவர்கள் சொல்லும் மாற்றங்கள்தான் என்ன?

தமிழ்நாட்டின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்ற முயற்சி செய்கிறது என்பதைப் பொன். இராதாகிருஷ்ணன் பேச்சு காட்டுகிறது. கொக்கு தலையில் வெண்ணெய்யை வைத்து அதைப் பிடிக்கும் தந்திரத்தை பா.ஜ.க. தமிழ்நாட்டில் முயற்சிக்கிறது என்பதுதான் பொன். இராதாகிருஷ்ணன் கருத்தின் உள்நோக்கம். இதைப் போலத்தான் நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி அறிவித்தார். அன்று காங்கிரஸ் கட்சியின் பலவீனம், பணம், ஊடகங்களின் பலம், பல மாநிலங்களில் இருந்த அரசியல் நிலைமைகள் இவை பா.ஜ.க.வுக்குச் சாதகமாக அமைந்துவிட்டன. ஆனாலும் அதற்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில், குறிப்பாகத் தலைநகர் தில்லி இடைத்தேர்தலில், அக்கட்சி படுதோல்வி அடைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வு-க்கு வாய்ப்பே இல்லை. இங்கு சில இடங்களைப் பிடிக்க வேண்டுமானால் கூட, மாநில திராவிடக் கட்சிகள் ஏதாவது ஒன்றின் துணையோடுதான் அவர்களால் வெற்றி பெற முடியும். பொன்.இராதாகிருஷ்ணனின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி கூட, ஒரு குறிப்பிட்ட சூழலில் கிடைத்த வெற்றியாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை கடந்த காலங்களில் உருவாக்கி வைத்த சித்தாந்தங்கள், பாரதிய ஜனதா கட்சியின் அரசியலை எதிர்த்துத் தோற்கடிக்கும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் எதிர்காலம் மாற்று அரசியலில் வெற்றிபெறும். ஆனால் இது இந்துத்துவ அரசியலாக மட்டும் இருக்காது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

புத்தரும்,அம்பேத்கரும் ஆரியத்தை மிகக் கடுமையாக எதிர்த்து இயக்கம் நடத்தியவர்கள். இவ்விருவரையும் இதுவரை மதிக்காத இந்துத்துவவாதிகள், இப்பொழுது தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இவர்களின் நோக்கம்தான் என்ன?

இதுதான் இந்துத்துவ அரசியல். மகாபாரதத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று சொல்வார்கள். நம்முடைய திருவள்ளுவர், இதை மிகத் தெளிவாகச் சொல்கிறார் “சேர்ந்தாரைக் கொல்லி” என்று. எதிரியைத் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டு, அதை அழிப்பது. அதாவது நட்பு பாராட்டுவது போல பாராட்டி, பிறகு அதை அழித்துவிடுவதுதான் இந்துத்துவம்.

இந்தியாவில் இதைத்தான் இந்துத்துவம் செய்து கொண்டு இருக்கிறது-. புத்தரையும், அம்பேத்கரையும் இன்று இவர்கள் போற்றுவதற்கும் புகழ்வதற்கும் எந்த அடிப்படைக் காரணங்களும் இல்லை. தவிர இவர்களைக் கவுரவிக்க வேண்டும் என்றால், அவர்களுடைய கொள்கைகளையும், இலட்சியங்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் உண்மையான கவுரவத்தைக் கொடுக்க முடியும். பா.ஜ.க. ஆட்சி புத்தர், அம்பேத்கர் ஆகிய இவர்களின் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களுக்குச் செலுத்தும் மரியாதை எப்படி உண்மையான மரியாதையாக இருக்க முடியும்? பா.ஜ.க.வின் தற்போதைய இந்தச் செயல் ஒரு சூழ்ச்சி, தந்திரம்.

அம்பேத்கரை நவீன மனு என்று சிலர் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது பற்றி...-?

தொலைக்காட்சிகளில் சில இந்துத்துவ தலைவர்கள் அம்பேத்கரை இன்றைய நவீன காலத்தின் மனு என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். மனு என்பவனால் இயற்றப்பட்ட மனு ஸ்மிருதிதான் அம்பேத்கர் போன்றவர்களைத் தீண்டத் தகாதவர்களாக மாற்றி இருக்கிறது அல்லது ஆக்கி இருக்கிறது. அப்படிப்பட்டவரை நவீன மனு என்று குறிப்பிட்டுச் சொல்வதை விட, வேறு மோசடிச் செயல் ஒன்றும் இல்லை.

தாலி அகற்றி, மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்வைத் திராவிடர் கழகம் முன்னறிவிப்போடு நடத்தியிருக்கிறது. அது அந்த இயக்கத்தின் தனிப்பட்ட உரிமை. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் காவிக் கும்பல் பெரியார் திடலுக்குச் சென்று தாக்குதல் நடத்தி இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

முதலில் இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவது, தாலியை அகற்றுவது அல்லது மறுப்பது என்பது யாருடைய கட்டாயத்தாலும் நடைபெறக் கூடாது. அது தனிமனித விருப்பம், உரிமை சார்ந்தது. பா.ஜ.க. இதில் தலையிடுவதன் மூலம் தங்களைப் பண்பாட்டுக் காவல் துறையாகக் காட்டிச் செயல்பட்டிருக்கிறது. அதற்கான அதிகாரத்தைப் பெற்ற அதிகாரிகள் போல தங்களைத் தாங்களே காட்டிக் கொள்கிறது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பா.ஜ.க.வின் இந்த அணுகுமுறைதான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் பன்மைத்துவத்தை புரிந்து கொள்ளாத, ஒற்றை ஆதிக்கத்தின் இந்த வெளிப்பாட்டை எதிர்ப்பதும், எதிர்த்து முறியடிப்பதும் தமிழக மக்களின் அடிப்படைக் கடமையாகும்.

செம்மரங்களை வெட்டினார்கள் என்று சொல்லித் திருப்பதியில் இருபது தமிழ்க் கூலித் தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது ஆந்திரக் காவல்துறை. சுடப்பட்டு இறந்தவர்களை மட்டுமே பேசுகின்ற காவல்துறையும், ஆந்திர அரசும், அதற்குமேல் எதுவும் பேசவோ, சுட்டிக்காட்டவோ அல்லது நடவடிக்கை எடுப்பதாகவோ தெரியவில்லை. இதன் பின்னணி என்ன?

செம்மரம் என்பது மிக அதிக விலை உயர்ந்த மரங்கள் என்று உலகின் பல நாடுகள் கருதுகின்றன. இதன் சர்வதேசச் சந்தையின் விலை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அணுக்கதிர் இயக்கங்களைத் தடுக்கும் வலிமை, வயாகரா போன்றவை தயாரிக்கும் உட்கூறுகள், மிகச் சிறந்த சிற்பங்கள் உருவாக்கப் பொருத்தமானவை என்று பல்வேறு சிறப்புகளை இச்செம்மரங்கள் கொண்டிருக்கின்றன. இதனுடைய வணிகம் உலக அளவில் பெரும் லாபம் தரத்தக்க கடத்தல் தொழிலாக நடைபெற்று வருகிறது.

அந்த மாபியாக்களின் கொலைகாரத் தடத்தில்தான் இந்த இருபது தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஆந்திர சந்திரபாபு அரசு கிட்டத்தட்ட ஒரு இடைத்தரகராகச் செயல்பட்டதால்தான், இப்பெரும் கொலையை மூடிமறைக்க முயற்சி செய்கிறார்கள். இந்தத் தொழிலுக்கு மலைவாழ் இளைஞர்கள் பெரும்பகுதியினர் தமிழ்நாட்டில் இருந்து கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஜமுனாமாத்தூர், கல்வராயன்மலை, வேலூர், தர்மபுரி மாவட்டச் சில மலைப்பகுதிகளில் இருந்து இவர்களைச் கொத்தடிமைகளாகப் பிடித்துச் சென்றிருப்பவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டும், அது தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்றும் வருகிறது. இத்தனை காலமும், இதனைத் தமிழக அரசு எப்படிப் புரிந்து கொள்ளாமல் இருந்தது என்பது நமக்குப் புரியவில்லை. இதற்கு உயர்மட்ட அளவில் நீதிவிசாரணை உடனடியாகத் தேவைப்படுகிறது-.

Karl Marx 350“முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல்நாடு என்ற தோற்றத்தை மாற்றி, திறன் மிகு நாடாக இந்தியாவை மாற்றி வருகிறோம்” என்று கனடா நாட்டில் போய்ப் பேசியிருக்கிறார் நரேந்திரமோடி. இது சரியா? மரபு மீறலா?

மரபு மீறல் என்று சொல்வதைவிட, மோடியின் இக்கூற்று, இந்திய எதார்த்தத்தை மூடி மறைக்கும ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம், ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஊழல் அனைத்தையும் மோடி தடுத்து நிறுத்திவிட்டதாகப் பொருள் கொள்ள முடியும்.

இன்று இந்தியாவில் ஊழல் இல்லையா? கடந்த காலத்தை விட, நவீன மெகா ஊழல்கள் நிறையவே இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்க திறன் மிகு இந்தியாவாக மாற்றப் போவதாக மோடி சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

திறனை வளர்க்க வேண்டும் என்றால், முதலில் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இப்படித்தான் திறனை வளர்க்க முடியும்.

இதை விட்டுவிட்டு மக்களிடையே ஒற்றுமையை அழித்து, பிளவுகளை உருவாக்கி எப்படி இந்தியாவின் திறனை வளர்க்க முடியும்? மோடி பச்சையாகப் பொய் சொல்லி நம்மை ஏமாற்றுவதில் திறன் பெற்றுள்ளார்.

நாட்டின் திறன் வளர வேண்டுமானால் சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும்.

சாதாரண உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்காமல் எந்தத் திறனையும் யாராலும் வளர்க்க முடியாது. மேல் சாதி ஆதிக்கத்திற்கும், கார்பரேட் பெரு முதலாளிகளின் சூதாட்டத்திற்கும் இந்தியாவை அடகு வைத்துவிட்டு, மோடியால் எப்படி மக்களிடம் அல்லது நாட்டின் திறனை வளர்க்க முடியும் என்று கனடா நாட்டில் போய்ச் சொல்கிறார் என்பதுதான் புரியவில்லை.

Pin It