dalitpandiyan 350கரூருக்கு அருகில் உள்ள நெரூரில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப் பட்ட கோயில் நிகழ்வு ஒன்று, மானமும் அறிவும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் மாபெரும் பேரிடியாய் அமைந்தது.

28.04.2015 செவ்வாய் மதியம் நெரூர் சதாசிவ பிரமேந்திறாள் கோயிலில், பார்ப்பனர்கள் உண்டு முடித்த இலையில் தமிழர்கள் பலர் உருண்டு எழும் இழிவு அரங்கேற இருந்தது.

அப்படிச் செய்தால் உடலில் உள்ள தோல் நோய்கள் நீங்கும் என்றும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் பார்ப்பனர்கள் கட்டிவிட்ட கதையை உண்மையென்று நம்பி, நம் ஏழை எளிய பாமரத் தமிழர்கள் எச்சில் இலையில் உருளத் தயாராகி விட்டார்களாம்! இந்த அநாகரிகத்திற்கு ‘மட ஸ்நானா’ அல்லது ‘உருளு தேவா’ என்று பெயராம்.

இந்த அநாகரிகமும், இழிவும் ஏற்கனவே கர்நாடகத்தில் நடைபெற்று, இந்திய உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அது இப்போது தமிழகத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள குக்கீ சுப்பிரமணியர் கோயிலில் இது போன்ற நிகழ்வு ‘சஷ்டி’ தினத்தன்று, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாம். கடந்த ஆண்டு, இக்கொடிய பழக்கத்தை எதிர்த்து, கர்நாடக அரசே அங்குள்ள உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

அதனை விசாரித்த அந் நீதிமன்றம், ‘நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும், மதம் சார்ந்த ஒரு பழக்கத்தைத் தடை செய்ய முடியாது என்றும், அவ்வாறு செய்தால் உள்ளூரில் உள்ள மதச் சார்புடையவர்களின் மனம் பாதிக்கப்படும்’ என்றும் கடந்த நவம்பர் 19 அன்று தீர்ப்பு அளித்துவிட்டது.

மதம் தொடர்பான நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாது என்றால், மதம் நீதிக்கு அப்பாற்பட்டதா என்னும் கேள்வி நம்முள் எழவே செய்கிறது.

எனினும், கர்நாடக அரசு அத் தீர்ப்பை எதிர்த்து, தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இன்றைய தமிழக அரசு என்ன செய்திருக்கும் என்பதை நாமறிவோம். நம் அமைச்சர்களே அந்த இலையில் உருண்டிருப்பார்கள்! ஆனால் கர்நாடக அரசு அதனை எதிர்த்துப் போராடியது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் மதன் லோகூர் , பானுமதி ஆகியோர் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், தடை செய்தும் கடந்த திசம்பரில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது போன்ற மனித நாகரிகமற்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்று தங்கள் தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
நெடுங்காலமாக இருந்துவரும் பழக்கம் என்பதற்காக ஒன்றை அனுமதிப்பது என்றால், நெடுங்காலமாக இருந்துவரும் தீண்டாமைப் பழக்கத்தையும் அனுமதிக்கலாமா என்றும் கேட்டுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கர்நாடகத்தில் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த அநாகரிகம் தமிழகம் நோக்கிப் படை எடுத்துள்ளது. தாங்கள் உண்ட இலையில் தமிழர்கள் உருள்வதைப் பார்க்கக் கன்னடப் பார்ப்பனர்கள் பலர் புறப்பட்டு வந்தனராம். தன்மானம் இல்லாத தமிழர்கள் சிலரோ, பத்மஸ்ரீ பட்டம் வாங்க இருப்பதுபோல் வரிசையில் நின்றிருக்கின்றனர்.

தமிழகத்தில் நிகழ இருக்கும் இந்த அவமானத்தைத் தடுக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் பகுத்தறிவாளர்களால் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நடைபெற இருக்கும் இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி உடனே தடை செய்ய வேண்டும் என்பது கோரிக்கை.

lead food 350தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த அநாகரிகத்தை எதிர்த்து தலித் பாண்டியன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். அவசர வழக்காக அது எடுத்துக் கொள்ளப்பட்டு, 28.04.2015 அன்று மதியம் நீதிபதி மணிமாறன் முன்னிலையில் விசாரணை தொடங்கியது-. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கரூர் ராசேந்திரனும், நாராயணனும் நீதிமன்றத்தில் வாதாடினர். வழக்கைக் கேட்ட நீதிபதி உடனடியாக அதனை நிறுத்தத் தடை ஆணை பிறப்பித்தார்.

இதற்கிடையில் நெரூரில் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. பார்ப்பனர்கள் வரிசையாக அமர்ந்து, வேக வேகமாக உண்ணத் தொடங்கினர். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் நிகழ்ச்சியை நடத்திவிட வேண்டும் என்று விரும்பினர். ஆனால், பந்தி நடந்துகொண்டிருக்கும் போதே, காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்துவிட்டனர். நீதிமன்ற ஆணையைக் காட்டி, அனைவரையும் உடனடியாக கலைந்து செல்லுமாறு செய்து விட்டனர்.

தமிழர்களின் உயிர் போனது ஆந்திராவில்! தமிழர்களின் மானம் காப்பாற்றப்பட்டது தமிழ் நாட்டில்!

தலித் பாண்டியனுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தன்மானத் தமிழர்களின் பாராட்டும், நன்றியும்!