karunanidhi vijayakandhi 350விஜயகாந்த் மீதான விமர்சனங்கள் எல்லாம் அடிபட்டுப் போகிறமாதிரி, ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அண்மையில் அவர் ஒரு சிறப்பான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

மேக தாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக அரசு. கிருஷ்ணராஜ சாகர் அணையைத் தாண்டி, கபினி அணையையும் தாண்டி ஏதோ கொஞ்சம் நீர் இன்று வரையில் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.

அதையும் தடுப்பதற்காகத்தான் தமிழகத்திற்கு மிக நெருக்கமான எல்லைப் பகுதியில் மேக தாது என்னும் இடத்தில் அணை கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள் கர்நாடக அரசினர்.

நியாயமற்ற இந்த முடிவை எதிர்த்து, தமிழக அரசு, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உரிய பணிகளைச் செய்திருக்க வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

ஆனால் இங்கே தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா, அதற்கு முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியாத ரகசியமாக இருக்கிறது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் எங்கேயோ இருந்து கொண்டு இந்த அரசை வழிநடத்துகிறார் என்பது செவிவழிச் செய்தியன்று. அவருடைய வழிகாட்டுதலின் படிதான் நிதிநிலை அறிக்கையே தயாரிக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் கூறுகிறார். இப்பேச்சு, முதலமைச்சர் எடுத்துக் கொண்ட ரகசியக் காப்புறுதித் தீர்மானத்திற்கும் எதிரானது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, அந்த அம்மையாருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் விளைநிலங்கள் வீணாவது உள்பட எது குறித்தும் எந்தக் கவலையும் இல்லை.

இத் தருணத்தில்தான், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான, தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் 26.04.15 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, மேக தாது அணைக்கு எதிரான நம் குரலை இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய அன்றைய பயணம் கோபாலபுரத்தில் இருந்து தொடங்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று காலை கோபாலபுரம் வந்த அவர், தி-.மு.கழகத் தலைவர் கலைஞர் அவர்களையும், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். தி.மு.கழகத்தின் சார்பில், கனிமொழியும், திருச்சி சிவாவும் உங்களோடு உடன் வருவார்கள் என்று தலைவர் தன் ஆதரவைத் தெரிவித்தார்.

MODI CAPTAIN kani 3450அடுத்தடுத்து அனைத்துக் கட்சிகளையும் அவர் சந்தித்தார். எல்லாக் கட்சியினரும் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்தனர்.

10 கட்சிகளின் சார்பாளர்களோடு அடுத்த நாள் பிரதமர் மோடியைச் சந்தித்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தினார். மேகதாதுவில் அணை கட்டப்படக் கூடாது என்பதோடு, ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் குறித்த விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் அங்கு முன்வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளில் பா.ம.க., பொதுவுடைமைக் கட்சியினர் அன்றைய நிகழ்வில் பங்கேற்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சி தனியே சென்று சந்திப்பதாக அறிவித்துவிட்டது.

விஜயகாந்தின் இந்த முயற்சிகள் வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக்கான முன்னோட்டமோ என்று சில ஏடுகள் எழுதியிருக்கின்றன. தமிழக மக்கள் நலனே இம்முயற்சியில் முன்னிறுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

ஆனால் அரசியல் கூட்டணிக்கான தொடக்கமாகவும் அது இருக்குமானால், அதில் ஒன்றும் பிழையில்லை. பா.ஜ.க., போன்ற கட்சிகளை விலக்கிவிட்டு, சேர வேண்டியவர்கள் சேர்வதும், வீழ்த்த வேண்டியவர்களை வீழ்த்துவதும் காலத்தின் கட்டாயம்தானே!

Pin It