aranganayagam 400முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டார். அரசியலில் விலகுதலும் சேர்தலும் இயல்பான ஒன்றுதான். ஆனால் விலகுவதற்கோ அல்லது சேர்வதற்கோ சொல்லப்படும் காரணங்களுள் சில அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கொள்ளப்படும்.

அப்படி அரங்கநாயகமும் ஒரு காரணத்தைச் சொல்லி இருக்கிறார். அந்தக் காரணம் இவருடைய அரசியல் பக்குவத்தையும், சமூக அக்கறையையும் பளிச்செனக் காட்டுகிறது.

அதாவது, “இடஒதுக்கீட்டில் பொருளாதார உச்சவரம்பைக் கலைஞர் எதிர்க்கிறார், எனவே நான் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். இதே போன்றதொரு கருத்தை, காங்கிரஸ் கட்சியின் ஜனார்தனன் துவிவேதி என்பவரும் சொன்னார்.

‘சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையில்லை, பொருளாதார அடிப்படையிலேயே இருக்க வேண்டும்’ என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதளம், சமாஜ்வாடி மற்றும் தமிழக உறுப்பினர்களின் ஆவேசமான எதிர்புக்குப் பிறகு,‘இடஒதுக்கீட்டு முறையில் முன்னர் இருந்த நிலையே தொடர்ந்து இருக்கும்’ என்று சோனியா காந்தியே முன்வந்து கூறினார்.

கிரீமிலேயர் எனப்படும் இடஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பு முறையை, மறைந்த முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததும், அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததும், அது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்ததும், அதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை எம்.ஜி.ஆர், திரும்பப் பெற்றதும், கூடுதலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை 69 விழுக்காடு என்று உயர்த்தியதும் அனைவரும் அறிந்ததே.

மேலும் அன்று எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர், இதே அரங்கநாயகம்தான். அவர்தான், இன்றும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்று பேசிக்கொண்டிருக்கிறார். சாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்கும், இருக்க வேண்டும். கிரிமிலேயர் எனப்படும் ‘கிருமி’லேயரை இடஒதுக்கீட்டு முறையில் அனுமதிக்கக் கூடாது என்பதுசமூகநீதி அரசியல் தெரிந்தோரின் கருத்தாகும்.

அரங்கநாயகம் தி.மு.க.வில் மட்டுமல்ல அரசியலிலும் இல்லாமல் இருப்பதே நல்லது.