வடமாநிலத் தேர்தல்களும், ஏற்காடு இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளன. அந்தத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பல கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது.

மேலோட்டமான முதல் பார்வையில், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியையும், மோடியின் செல்வாக்கினால் பா.ஜ.க., பெற்றுள்ள எழுச்சியையும் காட்டுவதாகவே தோன்றும். அவ்வாறே, ஏற்காடு இடைத்தேர்தல் முடிவு, அ.தி.மு.க.வின் செல்வாக்காகவும் கருதப்படலாம். எனினும் நுணுகிப் பார்க்கும் வேளையில், வேறு சில உண்மைகள் புலப்படுகின்றன.

வடமாநிலங்கள் ஐந்தில் தேர்தல்கள் முடிந்துள்ளன. அவற்றுள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.,வும், மிசோராமில் காங்கிரசும் வென்றுள்ளன. இழுபறியான முடிவையே டெல்லி தந்துள்ளது.

ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், ஜனசங்கம் காலத்திலிருந்தே பா.ஜ.க., செல்வாக்கு உள்ள கட்சிதான். எனவே செல்வாக்கு உள்ள மாநிலங்களில், பா.ஜ.க., அதனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிலும், ராஜஸ்தானைப் பொறுத்தமட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறிக்கொண்டே இருக்கிறது - தமிழ்நாட்டினைப் போல. எனவே சென்ற முறை காங்கிரஸ், இந்த முறை பா.ஜ.க. சத்தீஸ்காரைப் பொறுத்தளவு, பெரும்பான்மையைச் சில இடங்களைக் கூடுதலாகப் பெற்றே, பா.ஜ.க. பெற்றுள்ளது. பெருமைப்படக்கூடிய வெற்றி என அதனைக் கூற முடியாது.

மிசோராமில் 17 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., ஓர் இடத்தில் கூட வெற்றிபெற வில்லை. துடைத்து எறியப் பட்டுள்ளது. அங்கே காங்கிரசுக்குப் பெரிய வெற்றி கிட்டியுள்ளது. 40 இடங்களில் 33 இடங்களைக் காங்கிரஸ் பெற்றுள்ளது.

மோடி அலை வீசுகிறது என்பது உண்மையானால், அது மிசோராமை விட்டுவிட்டு வீச வேண்டியதில்லை. அங்கே படுதோல் வியைத்தான் அக்கட்சி சந்தித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பெற்றுள்ள வெற்றி மிகப்பெரியதுதான். 230 இடங்களில் 165 வென்றிருப்பது, எளிய செய்தி இல்லை. அதுவும் மூன்றாவது முறையாக அக்கட்சி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் அதனையும், மோடி அலையின் பாதிப்பு என்று கூற முடியாது. அம்மாநில முதலமைச்சர் சௌகானுக்கு உள்ள நல்ல பெயரால் தான் அவ்வெற்றி அங்கு கிடைத் துள்ளது என்பதை மறுக்க முடியாது.

பா.ஜ.க.வினரின் கூற்றுப்படி, அவ்வெற்றிகள் அனைத்தும் மோடியின் செல்வாக்கினால் பெற்றவை என்று வைத்துக் கொண்டாலும், அம்மூன்று மாநிலங்களிமாகச் சேர்த்து மொத்தம் 75க்கும் குறைவான நாடாளுமன்றத் தொகுதிகள்தாம் உள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களில்தான் 450க்கும் மேற்பட்ட தொகுதிகள் இருக்கின்றன. அவற்றின் நிலை என்ன என்று பார்க்கலாம்.

குஜராத், அரியானாவை விட்டு விட்டால், பா.ஜ.க.,விற்கு வேறு எங்கும் செல்வாக்கு இல்லை. மிகுதியான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள உ.பி., பீகார், மாநிலங் களில், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளே செல்வாக்குடன் உள்ளன. பஞ்சாபில் அகாலிதளம், ஒடிசாவில் பிஜு பட்நாயக் கட்சி, வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மராட்டியத்தில் தேசிய வாதக் காங்கிரஸ், சிவசேனா, ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., என்று பல்வேறு கட்சிகளே செல்வாக்குப் பெற்றுள்ளன. மே.வங்கம், கேரளா, திரிபுராவில் இடதுசாரிகள் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் எவற்றிலும் பா.ஜ.க., இல்லையென்றே கூறிவிடலாம். தென் இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே செல்வாக்கு டன் உள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் பா.ஜ.க., அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது எப்படி?

மாநிலக் கட்சிகள் வளர்ச்சி பெறாத மாநிலங்களில் மட்டுமே, காங்கிரசும், பா.ஜ.க.வும் வலிமையாக உள்ளன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வந்தவுடன், இரண்டில் ஒன்று வீழ்கிறது. மே.வங்கத்திலும், திரிணாமூல் காங்கிரஸ் வந்தவுடன், அதுவரை செல்வாக்குச் செலுத்தி வந்த பொதுவுடைமைக் கட்சி மங்கிவிட்டது.

கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங் களிலும் வலிமையான மாநிலக் கட்சிகள் தோன்றுமே யானால், காங்கிரஸ் பா.ஜ.க., கட்சிகளின் செல்வாக்குக் குறைந்துவிடும். திரிணாமூல் போலக் கேரளாவில் ஒரு கட்சி தோன்றினால், காங்கிரஸ், இடதுசாரி களின் நிலைமை தள்ளாட்டத்திற்கு உள்ளாகும்.

எனவே இனிமேல் எந்த ஒரு கட்சியும் இந்தியா முழுவதும் தனித்துச் செல்வாக்குப் பெறுவதென்பதோ, ஒரே கட்சியின் ஆட்சி மத்தியில் ஏற்படுவ தென்பதோ இயலாத ஒன்று. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கட்சி வலிமை பெறுவதும், மத்தியில் கூட்டணி ஆட்சி மட்டுமே நடைமுறையில் அமைவதும் தவிர்க்க இயலாத ஒன்று.

தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக வரப்போவது எது என்பது மட்டுமே இன்று நம்முன் உள்ள கேள்வி. இம்முறை அந்த வாய்ப்பு பா.ஜ.க.விற்கு உள்ளது என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.

ஆனால் அதுவும் கூட, அவர்கள் தங்களின் முகாமையான மூன்று கொள்கைகள் குறித்து மூச்சுவிடாத வரைதான் சாத்தியம். அயோத்தியாவில் இராமர் கோயில் கட்டுவது, பொதுக் குடிமைச் சட்டத்தைக் கொண்டு வருவது, அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது ஆகிய மூன்று இந்துத் துவாக் கொள்கை களையும் மூடி மறைத்துவிட்டு, மோடி என்னும் தனிமனிதரை மட்டுமே நம்பித் தேர்தல் களத்தில் இறங்க வேண்டிய நிலையில் அவர்கள் இன்று உள்ளனர்.

இன்னொன் றையும் நாம் எண் ணிப்பார்க்க வேண்டும். 2008 இறுதியில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களிலும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பா.ஜ.க., ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அடுத்த 4 மாதங் களில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில், அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை.

இந்நிலை ஏற்காடு இடைத்தேர் தலுக்கும் பொருந்தும். 2003இல் நடைபெற்ற சாத்தான்குளம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அத்தொகுதி உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது.

2011க்கு முன்பு நடந்த பெண்ணாகரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுக் கட்டுத்தொகையையும் இழந்தது. ஆனால் அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் வென்றது.

எனவே, நம் நாட்டைப் பொறுத் தளவில், எந்த ஒரு தேர்தலும், அடுத்து வரும் தேர்தலுக்கு முன்னோடியாக இருப்பதில்லை. அரசியலில் மாற்றங்கள் நிகழ, 4 மாதங்கள் தேவையில்லை, 4 நாள்களே கூடப் போதும்.

மாறக்கூடிய சூழல்களும், சேரக் கூடிய கூட்டணிகளுமே, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். 

............................................................................................................................................

நாடு புரிந்து கொள்ளட்டும்!

"ஏற்காடு தேர்தலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த முடிவுதான். திருமங்கலத்தை விட மோசமாக நடந்த தேர்தல் வெற்றி இது. அதே நேரம், தி.மு.க. தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சி."  - தமிழருவி மணியன் (தி இந்து, 09.12.2013)

மிக மோசமாக நடந்த தேர்தல் என்பது மணியனுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் அது குறித்து அவர் கவலை தெரிவிக்கவில்லை. அதற்காக அந்த 'தருமவான்', 'காந்தியவாதி', வெட்கமோ வேதனையோ படவில்லை. எவ்வளவு மோசடிகள் நடந்தாலும் குற்றமில்லை, தி.மு.க. தோற்றால் போதும், மகிழ்ச்சிதான் என்கிறார்! இவரைப் போன்றவர்கள் லஞ்சம், ஊழலை எல்லாம் எதிர்ப்பதாக ஒரு போக்குக் காட்டிக் கொண்டு,தி.மு.க.வை எதிர்ப்பதை மட்டுமே தங்கள் வாழ்நாள் இலக்காகக் கொண்டிருப்பவர்கள் என்பதை இப்போதேனும் நாடு புரிந்து கொள்ளட்டும்!

.........................................................................................................................

டெல்லித் தலைவர்

டெல்லி மாநிலத் தேர்தலில், தே.மு.தி.க., 11 இடங்களில் தன் வேட்பாளர்களை நிறுத்தியது. அனைத்து இடங்களிலும் சேர்த்து அக்கட்சி வாங்கிய வாக்குகள் ஆயிரத்துக்கும் குறைவு. அக்கட்சி முதலில், கூரை ஏறிக் கோழி பிடிப்பது நல்லது!

.........................................................................................................................

தேய்பிறை

பல்வேறு கட்சிகளிலும் பணியாற்றி,அரசியல் அனுபவம் வாய்ந்தவராகக் கட்சியில் இருந்த ஒரே ஒருவரையும் இன்று தே.மு.தி.க. இழந்து விட்டது. வளர்ந்த வேகத்திலேயே கட்சி தேய்ந்து கொண்டிருப்பதை இப்போதாவது விஜயகாந்த் உணருகிறாரா என்று தெரியவில்லை.

Pin It