“வெள்ளையர்களின் ஆதிக்கதை ஏற்க முடியாது. கறுப்பின மக்களின் ஆதிக்கத்தையும் ஏற்க முடியாது” என்னும் புதிய சமத்துவ முழக்கத்தோடு, பொது வாழ்விற்கு வந்தவர் நெல்சன் மண்டேலா.

அவரின் பெயர்கூட, இரண்டு இனங்களின் கலவைதான். மண்டேலா என்பது அவருடைய பாட்டனாரின் பெயர். நெல்சன் என்பது வெள்ளைக்கார ஆசிரியை அவருக்கு வைத்த பெயர்.

அவரைப் போன்ற நெஞ்சுரம் மிகுந்த, 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்பும் உறுதி தளராத, கறுப்பின மக்களுக்கான போராளியும் இல்லை. சற்றும் பகை உணர்வே இல்லாமல், வெள்ளையர்களிடமும் நேயம் கொண்ட சமாதானத் தூதுவரும் இல்லை.

1962ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவுடன், ராபன் தீவில் இருந்த சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கே இருந்த ஒரு கொடுமையான சிறை அதிகாரிதான், அவரைக் காலை முதல் மாலை வரை, சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்தார். அந்த வெப்பம் தாளாமல்தான் அவருடைய கண்பார்வை மங்கலாயிற்று.

அந்த அதிகாரியைக் கூடப் பழிவாங்க நினைக்க வில்லை மண்டேலா. மாறாக, 1994ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்க அதிபராகப் பதவி ஏற்கவிருந்தபோது, “நமக்குள் தனிப்பட்ட பகை ஏதும் இல்லை. என் பதவி ஏற்பு விழாவிற்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்” என்று அவரையும் அழைத்த அன்பு நெஞ்சத்திற்குச் சொந்தக்காரர் நெல்சன் மண்டேலா.

1950இல், ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றது தொடங்கி, அறவழிப் போராட்டங்களையே அவர் நடத்தி வந்தார். ஷார்ப்வில்லி என்னும் ஊரில், அமைதியாகக் கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்த 5000 தென் ஆப்பிரிக்க மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகே, அவர் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தார்.

எனினும் அறவழிப் போருக்கே அவர் மீண்டும் திரும்பினார். ‘அரசின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதற்கு மட்டும்தான் ஆயுதப் போராட்டமே அல்லாமல், அதனை இறுதிவரை தொடர விரும்ப வில்லை’ என்று கூறிவிட்டார். அன்பும், சமாதானமும், மனித நேயமும்தான் அவருடைய அழிக்கமுடியாது சொத்துகள்!

மண்டேலாக்கள் எப்போதாவதுதான் பிறக்கிறார்கள்!

Pin It