இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்யாய ஆகியோர், அடங்கிய அமர்வு நீதிமன்றம் இந்தியத் தண்டனைச்சட்டம் 377ஆம் பிரிவின்கீழ், ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்று 11.12.2013 அன்று தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

இச்சிக்கல் குறித்து, 2001ஆம் ஆண்டு நாஸ் அறக்கட்டளை டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாரித்த உயர்நீதிமன்றம் 2009 ஜுலை 2ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கையை அங்கீரித்தது.

குற்றவியல் சட்டம் 377ஆவது பிரிவின் சாரம், மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், இப்பிரிவு திருத்தப்படவில்லையெனில், அது இந்திய அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமைகளுக்கான பிரிவு 14க்கு எதிரானதாக இருக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இத்தீர்ப்புக்கு எதிராக பா.ஜ.க., கிறித்துவ கவுன்சில், அப்போஸ்தல தேவாலய கூட்டமைப்பு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து மேல் முறையீடு செய்ததன் விழைவாக, உச்சநீதிமன்றம் இப்போது தடை பிறப்பித்துள்ளது.

இக்குற்றச் செயலக்கு வாழ்நாள்சிறை அல்லது 10 ஆண்டுச் சிறையுடன் அபராதம் என்கிறது 377ஆம் சட்டப்பிரிவு.

ஓரினச் சேர்க்கைக்கு உடலியல் அடிப்படையில் ஏற்படும் ஹார்மோன் வேதியல் மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன என வல்லுனர்கள் சொல்கிறார்கள். அதனால் இதற்கு நாகரீக, கலாசார, மத அடிப்படையிலான காரணங்களைச் சொல்லி அவர்களை ஒடுக்க முனைவது சரியன்று.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத் தகவலின்படி இந்திய மக்கள் தொகையில் 25 லட்சம் பேர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அவர்களுள் 1.75 லட்சம் பேர்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 25 லட்சம் பேர் என்பது பெருந்தொகையாகத் தோன்றினாலும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியுடன் ஒப்பிடும்போது, அது 1 சதவீதத்திற்கும் குறைவே ஆகும்.

1.75 லட்சம் எச்.ஐ.வி., நோயாளிகள் அனைவரும் கூட, ஓரினச்சேர்க்கையால்தான் பாதிக்கப்பட்டார்களா என்பதற்கான விடையை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன், “மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக வழங்கப் பட்டுள்ள இந்தத் தீர்ப்பு மறு ஆய்வுக்குரியது” என்று கூறியிருக்கிறார்.

இங்கே நாம் பார்க்க வேண்டிய செய்தி சட்டப்பிரிவா அல்லது புள்ளி விவரங்களா என்பதன்று.

மனித நேய அடிப்படையில் தீர்வுகாண நடவடிக்கையை எடுக்க வேண்டுமே ஒழிய, 377ஆம் பிரிவின்படி தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வது எவ்வகையிலும் நியாயம் இல்லை.

377ஆம் சட்டப்பிரிவை நீக்குவதுதான் நியாயம்.

Pin It