“வலியோர் சிலர் எளியோர்தமை வதையேமிகு புரிகுவதா” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந் திருக்கிறது அ.தி.மு.க. அரசின் பழியுணர்வும், மக்கள் நலப்பணியாளர் களின் அவல நிலையும்.

விளிம்புநிலை மக்கள் வரிசையில் மக்கள் நலப்பணியாளர்களும் அடங்குவர்.

நடுத்தர மக்களுக்குள்ளும் அடித் தட்டில் இருக்கும் சாலைப் பணியாளர் களைப் போலத்தான் மக்கள் நலப் பணியாளர்களும் இருக்கிறார்கள்.

இந்த மக்களின் வாழ்நிலையை உணர்ந்த தலைவர் கலைஞர், இவர்களுக்குக் குறைந்த பட்சமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவில் உருவானதுதான் மக்கள் நலப் பணியாளர் என்ற பணி.

1989ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ஏறத்தாழ 13,000 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழக அரசினால்.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 8.11.2011 அன்று, ஒரே நாளில் 13,000 மக்கள் நலப்பணி யாளர்களின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

ஓர் அரசுக்குத் தன் குடிமக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உறை விடம், வேலை ஆகிய மூன்றையும் செய்து தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

இதற்கு மாறாக 13,000 குடும்பங்கள் பரிதவிக்கும் அளவுக்கு, மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது அ.தி.மு.க. அரசு.

இந்தப் பணிநீக்க அரசாணையை ஏற்காத பணியாளர் சங்கங்கள், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி னார்கள்.

வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், 23.1.2012ஆம் நாள், தமிழக அரசின் மக்கள்நலப் பணியாளர் பணிநீக்க ஆணையை நீக்கி, மீண்டும் அவர்களுக்குப் பணி வழங்க ஆணை பிறப்பித்தது.

இவ்வாணையை ஏற்க மறுத்து அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்ததன் விளைவாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் அளித்த தீர்ப்பில், தமிழக அரசின் பணிநீக்க ஆணை செல்லும் என்றும், ஐந்து மாத ஊதியத்தை மட்டும் மக்கள் நலப் பணியாளர்களுக்குக் கொடுத்து விடவும் தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணி யாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மக்கள் நலப் பணியாளர் சங்கம் இணைந்து மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்வதுடன், மக்கள் நலப் பணியாளர்களின் மேல் முறையீட்டு மனுவை அவர்களின் புதிய மனுவாக விசாரித்து 6 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கி யுள்ளார்கள்.

இதில் குறிக்கத்தக்க செய்தி என்னவென்றால், வழக்கு விசாரணை முடியும்வரை, தமிழக அரசு வாய்தா போன்ற இழுத்தடிப்புகளைச் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வழக்கில் பணியாளர் சங்கம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் செயல், இதற்கு அரசியல் காரணம் உள்ளது என்று தம் வாதத்தின் போது கூறியிருக்கிறார்.

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் துவேதி இதை மறுத்தாலும், உண்மை அதுதான் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறதே!

இப்பணியாளர்களை முதல் முதலாகப் பணியில் அமர்த்தியவர் கலைஞர். ஏற்றுக்கொள்ள முடியுமா இதை?

கலைஞரால் நியமனம் செய்யப்பட்ட இப்பணியாளர்கள் அரசுப் பணியாளர் களே இல்லை.

அவர்கள் வெறும் ஒப்பந்தப் பணியாளர்கள்தாம். ஆகவே அவர்களைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தமிழக அரசின் வாதம்.

உண்மை வேறுவிதமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது, மக்கள் நலப்பணியாளர்கள் பணிக்கான விளம்பரம் முறையாகச் செய்தித்தாள் களில் வெளியிடப்பட்டது. அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் இப்பணியாளர்கள்.

அப்படியிருந்தும் ஒப்பந்தப் பணியாளர்கள் என்று சொல்லி 2011ஆம் ஆண்டுமுதல் 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது அ.தி.மு.க. அரசு என்றால், இது கலைஞரைப் பழிவாங்கு வதாக நினைத்துக் கொண்டு மக்களைப் பழிவாங்கும் செயல் இல்லாமல் வேறென்ன!

அண்மையில் உலக சிக்கன நாள் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, தமிழக வரி வருவாய் 89 கோடி ரூபாயில் 44 கோடி சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒதுக்குவதாகப் பேசியிருக்கிறார்.

தமிழகத்தின் மொத்த ஒதுக்கீட்டில் இது 50 விழுக்காடு.

மக்கள் நலப்பணியாளர்களின் பணி என்ன? அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதும், அது குறித்து மக்களுக்கு விளங்கச் சொல்லி, அவைகளை ஒட்டிய பணிகளைச் செய்வதும்தான் மக்கள் நலப் பணி.

இவர்களுக்கு மட்டும் என்ன சமூகப் பாதுகாப்பு இல்லையா? அல்லது கலைஞரால் பணி பெற்றவர்கள் என்பதனால் சமூகப் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாதா?

தமிழக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், மக்கள் நலப்பணியாளர் களுக்கு நிவாரணத் தொகை யாக ரூபாய் 34 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

இவையெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போக்குவரத்துச் செலவுகளுடன் ஒப்பிட்டால் குறைவுதான்.

தாம்பரத் திற்கு அண்மை யில் உள்ள ஒரகடம் என்ற ஊரில் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கலந்து கொள்ள வந்த ஜெயலலிதா, சென்னையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குக் காரில் வருகிறார். அங்கிருந்து ஒரகடத் திற்கு அதே காரில் சென்றால் அதிகபட்சம் ஒருமணி நேரம்தான் ஆகும்.

அப்படிச் செய்யாமல் ஜெயலலிதா, மீனம்பாக்கத்தில் இருந்து அந்த ஒரு மணி நேரப் பயணத்தை ஹெலிகாப்டரில் சென்று வந்திருக்கிறார்.

ஒரகடத்தில் ஹெலிகாப்டர் இறங்க, ‘ஹெலிபேட்’ அமைத்தது உள்பட இது போன்ற பயணச் செலவுகள் கணக்கில் அடங்கா விளம்பரப் பதாகைகள், நாளிதழ்கள் உள்பட வண்ண வண்ண விளம்பரங்கள் என்று அவருக்காக அரசு செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால், மக்கள் நலப்பணியாளர்கள் பெறும் ஊதியம் கூட மிகவும் குறைவானதுதான்.

கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பட்ட அல்லது கொண்டுவரப்பட்ட எந்த ஒரு திட்டத்தையும், அது மக்கள் நலம் பயக்கும் திட்டமாக இருந்தாலும் கூட, அதனை நிறைவேற்றாமல் ஒதுக்கித் தள்ளும் வேலையைத் தானே அ.தி.மு.க. அரசு செய்து கொண்டு இருக்கிறது.

அப்படித்தான் தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலப்பணியாளர் வேலைத்திட்டத்தையும் முடக்க முயல்கிறது இந்த அரசு.

ஆனாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு, அ.தி.மு.க. அரசின் பழியுணர்ச்சிக்குத் தடையாய் அமைந்து விட்டது

பழி உணர்வும் பகை உணர்வும் ஒரு நாளும் வெல்வதில்லை!

Pin It