தனித்தெலுங்கானா கோரிக்கையின் அடிப்படையில் பற்றி எரிந்தது போராட் டம், அந்தப் பகுதியில். அப்பொழுது சீமாந்திரா எனப்படும் இராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகள் அமைதியாக இருந்தன. இது தனித்தெலுங்கானா என்ற கொள்கை முடிவை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன் நடந்த நிகழ்வு.

அறிவிப்பிற்குப்பின் தெலுங்கானா அமைதியாகிவிட்டது. சீமாந்திரா பகுதிகளில் போராட்டத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. இது தெலுங்கானா பிரிவுக்கு எதிரான போராட்டம்.

03.10.2013 அன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திராவில் இருந்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்க எடுத்த முடிவுக்குப் பின்னர், 13 மாவட்டங்களில் போராட்டம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.

கடையடைப்புப் போராட்டம், பேருந்துகள் நிறுத்தம், தீவைப்பு, கல்வீச்சு, உருவபொம்மைகள் எரிப்பு என்று தொடர்ந்த வன்முறை யினால், துப்பாக்கிச்சூடு நடத்தப் பெற்றது மட்டுமின்றி, விஜயநகரம் உள்பட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது.

அரசுப்பணியாளர்கள் ஆந்திர முதல்வரின் வேண்டுகோளை ஏற்க மறுத்துத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றார்கள். மில் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். இதனால் ஆந்திராவின் பெரும்பகுதி மாவட்டங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்தொடர் வண்டிகள் மட்டுமின்றி, மற்ற தொடர்வண்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தன் கோயிலுக்கு வரும் பக்த கோடிகளைத் தடையின்றி வரச்செய்ய திருப்பதி வெங்கடாசலபதியால் கூட முடியாத அளவுக்குப் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர்., கட்சியின் மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, விசாகப்பட்டினத்தில் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, மாநில அமைச்சர் கண்டசீனிவாசராவ் ஆகியோ ரின் வீடுகள் போராட்டக்காரர்களால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டன. ஸ்ரீகாகுளத்தில் மாநில அமைச்சர் கொண்டுரு முரளி வீட்டின் முன் “வீடு காலியாக உள்ளது” என்று எழுதிப்போட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் ஒரு மாநிலப் பிரிவினைக்கு இதுபோன்ற ஒரு பெரிய போராட்டம் இதுவரை நடந்ததில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போதே தெலுங்கு பேசும் மக்களின் முன்னேற்றம் கருதி அமைக்கப்பட்ட “ஆந்திர மகா சபா”வின் பின்புலம், சென்னை மாகாணச் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு பேசும் மக்கள் பகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வி, 58 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகம், அவைகளின் விழைவால் ஏற்பட்ட கலவரங்கள் போராட்டங்களை அடுத்து, இந்தியாவின் முதல் மொழிவழி மாநில மாக, கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவானதுதான் ஆந்திரப்பிரதேசம்.

இன்றைய ஆந்திராவின் தெலுங்கானாப் பகுதி 1948இல் ஐதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகான் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இந்தப் பகுதியை இராயலசீமா, கடலோர ஆந்திரப்பிரதேசத்துடன் இணைத்த பொழுது ஐதராபாத் தலைநகரம் ஆகியது.

ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானா மக்கள் தங்கள் பகுதியைத் தனித் தெலுங்கானா மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.

ஆந்திராவின் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் ஒரு தேசிய இனப் போராட்டம் என்று சொல்ல முடியாது. இவ்விருபகுதி மக்களின் தாய்மொழி தெலுங்கு. அவர்களின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் ஒரே தன்மையானவை. ஆனாலும் தெலுங்கானாவைத் தனிமாநிலமாக ஆக்குவதற்கு அங்குள்ள மக்கள் போராடு கிறார்கள் என்றால் என்ன காரணம்?

நிலவியல் அடிப்படையில் வளம் மிக்க பகுதி தெலுங்கானா. கிருஷ்ணா நதியும், கோதாவரி நதியும் தெலுங்கானா வழியாகத்தான் சீமாந்திராவுக்கு வருகின்றன. சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்துதான் சீமாந்திரா அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி வருகின்றது.

தெலுங்கானாவின் விளைநிலங்கள் 80 சதவீதமாக இருந்தாலும், அவை சீமாந்தி ராவின் ஆதிக்கச் சாதிப் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. விளை பொருள்கள் பெரும்பாலும் கடலோர ஆந்திரப் பகுதிகளுக்குப்போய்விடுகின்றன. மண்ணின் மைந்தர்கள் கூலிகளாய் குறுகிப்போய் இருக்கிறார்கள். ஐதராபாத் கணினிமயப்பட்ட உயர் தொழில் நுட்ப மாக உயர்ந்திருந்திருந்தாலும், அதனால் எந்தப்பயனும் தெலுங்கானா வுக்கு ஏற்படவில்லை. இதுவே தனித் தெலுங்கானா கோரிக்கைக்கு அடிப்படையானது.

ஒரு தேசிய இனத்திற்குள் சாதி ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல், ஏற்றத்தாழ்வு, சமத்துவம் இன்மை, ஒடுக்குமுறை இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும் நிலையில், ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள். அந்த எழுச்சிதான் தெலுங்கானா தனிமாநிலப் போராட்டம். இந்தப் போராட்டத்தை ஆந்திர அரசியல் தலைவர்களும், கட்சிகளும் அரசியலாக்கி சுயலாபம் அடைய முயற்சிக்கின்றன.

எடுத்துக்காட்டாக 2008ஆம்ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி கூடிய தெலுங்கு தேசக் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் தெலுங்கானா அமைவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, “ தெலுங்கானா அமைப்பது வரலாற்றின் முக்கியத் தேவை. அதற்கான ஒத்துழைப்பை தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசுக்குக் கொடுக்கும்” என்று உறுதியளித்துத் தீர்மானம் நிறைவேற்றிய சந்திரபாபுநாயுடு, இன்று அதற்கு நேர் எதிராக தில்லியில் உண்ணாவிரதம் இருந்து கொண்டு இருக்கிறார்.

2013 ஜுன் 25ஆம் தேதி ஆந்திராவின் இருபுலபாயா என்ற இடத்தில் கூடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் செயற்குழுவில், “ஆந்திரத்தைப் பிரிப்பதன் மூலம் அந்த மாநில மக்களுக்குச் சமமான நீதி கிடைக்குமானால், அந்த முயற்சிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்” என்று தீர்மானம் இயற்றி, அதற்கான கடிதத்தை அக்கட்சியின் தலைவர் விஜயம்மா கொடுத்திருக்கிறார்.-இவைகளுக்கு நடுவே பா-.ஜ.க., குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. மத்திய ஆளும் கட்சியான காங்கிரஸ் இப்பிரச்சினையை நிதானமாய், முறைப்படி அணுகாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே தெலுங்கானா மாநிலப் பிரிவினையைக் காங்கிரஸ் அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித் துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தெலுங்கானாச் சிக்கலை வெறும் அரசியலாக மட்டும் பார்க்காமல், அப்பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் சமஉரிமைக்கான போராட்டமாகப் பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு களில் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

தெலுங்கானாவின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரம், மனிதவள மேம்பாடு குறித்தெல் லாம் சரியான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு செயலும், அதனுடைய தீர்வை ஒட்டி மட்டுமல்லாமல், அந்தத் தீர்வை நோக்கி நகர்ந்த அணுகுமுறையை யும் சார்ந்தே மதிப்பிடப்படும். தெலுங்கானா பிரிவினை சரியா, தவறா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் அதனை மத்திய அரசு கையாண்ட விதம் சரியானதில்லை என்பதே நம் கருத்து.

Pin It