யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு உள்ளடங்கிய வடக்கு மாகாணத் தேர்தல் உள்ளிட்ட இலங் கையின் மூன்று மாகாணத் தேர்தல்கள் ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டன. 1988ஆம் ஆண்டுக்குப்பின் 25 ஆண்டுகள் கடந்து நடைபெற்ற இத்தேர் தலை, உலகின் பெரும்பான்மை நாடுகள் உற்று நோக்கின. வி.சி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்ட மைப்பு, மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி, மகிந்த ராஜபக் சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யைப் படுதோல்வி அடையச் செய்துள்ளது.

ஈழத்தில் நடந்த இறுதிப் போருக்குப் பின் அங்கே நடத்தப்பெற்ற சிங்கள இராணுவ வன்கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், கண்மூடித்தனமான கைதுகள், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவக் குவிப்புகள் இவைகளால் உலக நாடுகள் மத்தியிலும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்பும் தலை தொங்கிப் போன இராஜபக்சே அரசு, இத்தேர்தலை பெரிய சாதனையாக முன்னிறுத்தப் பார்க்கிறது-.

உண்மையில் உலக நாடுகளின் அழுத்தங்கள், இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகளின் 2000 பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற தேர்தல் இது-. அதிகாரப் பகிர்வை முன்வைத்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்துச் சிங்கள ஆளுங் கட்சியும், இத்தேர்தலைச் சந்தித்தன. வீடிழந்து, நிலமிழந்து, உடைமைகள் இழந்து நொறுங்கிப் போன நிலையிலும் தமிழ்ப் பெருமக்கள், வளர்ச்சித் திட்டங்களை நிராகரித்துவிட்டு, அதிகார (பகிர்வு)த்திற்கான உரிமைக் குரலை உயர்த்தியதற்கான அடையாளம்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றி.

இம்முடிவில் இருந்து இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் சார்பாக வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கும் விக்னேஸ்வரன், தேர்தலின் போது மக்களிடம் சொன்ன அதிகாரப் பகிர்வு, தமிழ்ப் பகுதிகளில் இராணுவக் குறைப்பு போன்றவைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?

அவரின் மாகாண ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன வகையில் எப்படி நலத்திட்டங்களைத் தரப்போகிறார்? இரண்டு, இத்தேர்தலில் சராசரியாக 70 விழுக்காடுவரை வாக்களித்த தமிழர்களின் நோக்கம், எதிர்பார்ப்பு என்ன?

விக்னேஸ்வரனுக்கு முதலில் நமது வாழ்த்துகள். தேர்தலுக்கு முன் அதிகாரப் பகிர்வை முன்வைத்துப் பேசிய விக்னேஸ்வரன், தேர்தலுக்குப்பின், ‘அதிகாரப் பகிர்வு என்பது உடனடிச் சாத்தியம் இல்லை. அதற்காக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது ஒரு நீண்டகாலச் செயல்பாடு. ஆகவே முதலில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம்’ என்று அறிவித் திருக்கிறார்.

இராஜபக்சேவின் ஆளும் கூட்டணி, தேர்தலுக்கு முன்பு வளர்ச்சித் திட்டங்களை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டது, மாறாக அதிகாரப் பகிர்வு குறித்து ஏதும் பேசவில்லை. தமிழ்ப் பகுதிகளில் இருக்கும் இராணு வத்தைத் திரும்பப் பெறவோ அல்லது குறைத்துக் கொள்வது குறித்தோ இலங்கை அரசிடம் எந்த ஒரு குறிப்பும் காணப்பட வில்லை.

அடுத்து விக்னேஸ்வரனின் மாகாண அரசு, நலத்திட்டங்களை எப்படி மக்களிடம் செயல்படுத்தப் போகிறது என்பது கவனத்தை ஈர்க்கிறது. பொருளாதார அடிப்படையில் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் இதுவரை காணவில்லை என்று சொல்லும் ஜனநாயக மயமாக்கலுக்கான கூட்டமைப்பின் ஆய்வாளர் அகிலன், “பல வீடுகள் கடனில் சிக்கியிருக்கின்றன. விவசாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மீனவத் தொழில் இந்திய மீன்பிடிப் படகுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் வளர்ச்சிக் கொள்கையில் மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை” என்கிறார்.

அப்படியானால் மாகாண அரசு எந்த அடிப்படையில் இந்நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்? அம்மாகா ணத்தின் ஆட்சி அதிகாரம் மிக்கவராக, இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்து அமர்த்தப்படும், ஆளுநர் ஒருவரின் கட்டுப்பாட்டில் முதல்வர் இருப்பார். நிதித்துறை, காவல்துறை, நிலம் தொடர்பான முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வீடு, நிலங்களை இழந்த மக்களுக்கு நிதி ஆதாரம் ஏதும் இல்லாமல் குடியிருப்பு, விவசாயம், மீன்பிடி தொழில் உள்பட எந்த ஒரு வளர்ச்சிக்குரிய நலத்திட்டத்தையும் மாகாண அரசால் செய்து தர முடியாது. அதையும் மீறிச் சிற்சில வளர்ச்சித் திட்டங்களை மாகாண அரசு நடைமுறைப்படுத்த முயன்றால், அதை ஆளுநர் மூலம் நிராகரிக்க இலங்கை அரசால் முடியும்.

முக்கியமாக அதிகாரப் பகிர்வு, நிலம், காவல்துறை போன்றவைகளின் அதிகாரங்களைக் கோரி மாகாண அரசு கோரிக்கை எழுப்பினால் அதையும் ஆளுநர் மூலம் இலங்கை அரசு நிராகரிக்கும்.

1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தல் மூலம் முதல்வரான வரதராஜப்பெருமாள், அப்பதவியைவிட்டுப் போகும்போது, மத்திய (இலங்கை) அரசின் அனுமதி இல்லாமல் தன்னால் ஒரு நாற்காலி கூட வாங்க முடியவில்லை என்று சொல்லி விட்டுப் போனார். அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாத மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை, வளர்ச்சிக்கான செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தாலும் கூட அது சாத்தியமாக வாய்ப்பு இல்லை. அதே சமயம், அதிகாரப் பகிர்வு, இராணுவக் குறைப்பு ஆகியன குறித்து அவர் குறிப்பிட்ட செய்திகள் சர்வதேச சமூகத்தின் பார்வைக்குப் போகின்றன என்பது தமிழர் நலனுக்கு அனுகூலமான ஒன்று.

இரண்டாவதாக, தேர்தலில் வாக்களித்த தமிழர்களின் நோக்கம், எதிர்பார்ப்பு என்பன குறித்து எண்ணவேண்டியுள்ளது. “இராணுவ மயமாதல், தமிழ் இளைஞர்கள் நடமாட்டத்தை ஒடுக்குவது, அரசியல் தீர்வு காண முற்படாதது, பொதுவாக வடக்கில் நிலவும் ஒடுக்குமுறை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மக்களுக்குக் கோபம் இருந்திருக்கிறது. அதுதான் இந்தத் தேர்தலில் வெளிப்பட்டு இருக்கிறது.” என்ற அகிலனின் விமர்சனம், இராஜபக்சேவின் முகமூடியைக் கிழித்து, அவரின் இனவாதக் கொடூர முகத்தை, உலகுக்குக் காட்டியுள்ளது.

தொடக்கத்தில் ஜனநாயக அடிப்படையில் ஈழத் தமிழர்கள் உரிமையைக் கேட்டபோது ஒடுக்கியது சிங்கள அரசு. ஆயுதம் ஏந்திய புலிகள் வீரப்போர் நடத்தி, அதிலும் ஒரு பின்னடைவு ஏற்பட்ட பின்னர், ஆற்றமுடியாத துன்பங்களுக்கு நடுவில் உயிரைப் பிடித்து வாழ்ந்துவரும் தமிழ்ப் பெருமக்கள், ராஜபக்சேவின் ஏமாற்றுத் தேர்தல் நாடகத்தைச் சரியாகப் பயன்படுத்திவிட்டார்கள்.

மாகாண அரசால் எந்தப் பயனும் இல்லை என்பதை மிகச் சரியாகப் புரிந்திருந்திருந்தாலும், அத்தேர்தல்களைப் புறக்கணிக்காமல், வாக்களித்து, இராஜபக்சே வேட்பாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் “இலங்கைச் சிங்கள அரசை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்பதையும், ராஜபக்சேவின் இனவெறி சர்வாதிகாரத்தையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு மக்கள் கொண்டு போய் விட்டார்கள்.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பெருவெற்றிபெறச் செய்ததன் மூலம், தமிழர்கள் தங்களின் வாழ்வுரிமைக்கான உரிமையை, அதிகாரமிக்க சுதந்திரத்தை ஒரு பிரகடனமாகவே பறைசாற்றிவிட்டார்கள். இதையும் சர்வதேச நாடுகள் கவனிக்காமல் இருக்க முடியாது.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணி அரசால், அந்த மக்களுக்கு, எந்த ஒரு நன்மையும் செய்ய முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, அதற்கான முழுப்பழியும் விழப்போவது விக்னேஸ்வர் அரசு மீது அன்று, சிங்கள சர்வாதிகாரி ராஜபக்சேயின் தலை மீதுதான்.

வடக்கு மாகாணத் தேர்தலில் ஈழத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அளித்த வாக்குகளால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்பது அவர்களுக்கான அடிமை விலங்கை உடனே உடைத்தெறியும் ஆயுதம் அன்று. எனினும் அடிமை இருளில் இருந்து வெளியே வர அவர்கள் ஏந்தியிருக்கும் ஒரு தீப்பந்தம்!

Pin It