மிகுந்த பரபரப்புகளுக்கு இடையில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், திருச்சியில் இளந்தாமரை மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வேலைகளை, பா.ஜ.க., மிக விரைந்து தொடங்கிவிட்டது என்பதையே இம்மாநாடு எடுத்துக்காட்டுகிறது. தங்களுடைய இந்துத்துவா கொள்கைகளை எல்லாம், எவருக்கும் தெரியாமல், பெரிய காவித்துணியாகப் போட்டு மூடிவிட்டு, முழுக்க முழுக்க மோடி என்னும் தனிமனிதரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்பது என்னும் முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளது என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

1925இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., காலப்போக்கில் தன் கிளைகள் பலவற்றை விரித்தது. அவற்றுள் முதன்மையானது 1953இல், டாக்டர் முகர்ஜி தொடங்கிய ஜனசங்கம். அதுவே நெருக்கடி நிலைக் காலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியாகப் பரிணாமம் பெற்றது.

1990வரை மத்திய அரசில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அருகில் கூட நெருங்காத ஒரு கட்சியாகவே அது இருந்தது - நெருக்கடி நிலை இந்திராகாந்தி ஆட்சியின் எதிர்ப்பில் மலர்ந்த ஜனதா ஆட்சியில் இடம் பிடித்ததைத் தவிர. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு அதனுடைய தீவிர இந்துத்துவா முகம் வெளிப்பட்டது. இந்துமத வெறியர்களால் ஆதரிக்கப்படும் கட்சியாக அது ஆயிற்று. எனினும் வாஜ்பாய் என்னும் மென்மையான முகமூடி ஒன்றை அணிந்துகொண்டு, 1998இல் கூட்டணி அமைச்சரவைக்குத் தலைமை ஏற்றது.

இப்போது மீண்டும் எப்படியாவது மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்னும் நோக்கில், களத்தில் இறங்கியுள்ளது. ஆளும் கட்சி தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நினைப்பதும், எதிர்க்கட்சி அதனைக் கைப்பற்ற நினைப்பதும் மிக இயல்பான வைகளே. ஆனால், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், இன்று பா.ஜ.க., மேற்கொள்ளும் தந்திரம் இயல்பானதாக இல்லை என்பதோடு, நேர்மையற்றதாகவும் உள்ளது.

தங்களின் அடிப்படைக் கோட்பாடு எது குறித்தும் இப்போது அவர்கள் பேசுவதில்லை. ஒரே நாடு, ஒரே பண்பாடு என்பதுபோன்ற முழக்கங்கள் எங்கோ மறைத்து வைக்கப்பட்டுள்ளன. திரும்பத் திரும்ப அவர்கள், இப்போது உச்சரிக்கும் ஒரே மந்திரம், ‘மோடி வல்லவர், மோடி வல்லவர்’ என்பது மட்டும்தான். இன்றைக்கு நாட்டில் காணப்படும் விலைவாசி உயர்வு, லஞ்ச ஊழல், கொலை கொள்ளை, ரூபாயின் மதிப்பு சரிவு, அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தை யும் மோடி என்னும் ஒரு தனிமனிதர் இந்தியாவின் பிரதமர் ஆனவுடன் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போல ஒரு சித்திரம் உருவாக்கப்படுகிறது. அதனை மக்களில் ஒரு பகுதியினர் - குறிப்பாக நிறையப் படித்த இளைஞர்கள் - அப்படியே நம்புகின்றனர் என்பதுதான் நம்மால் நம்பமுடியாத வேதனை.

ஏதோ, குஜராத்தை ஏற்கனவே அமெரிக்கா போல மோடி ஆக்கிவிட்ட தாகவும், பிரதமரானால் இந்தியாவையும் இன்னொரு அமெரிக்கா ஆக்கிவிடுவார் என்பதாகவும் ஏராளமான புனைவுகள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன(ஆனாலும் மோடியால் அமெரிக்கா செல்ல விசா மட்டும் வாங்க முடியவில்லை!). இந்தப் பொய்க் கூற்றை மெய்ப்பிக்க ஏராளமான தவறான தகவல்கள் வலைத்தளங்களில் தரப்படு கின்றன. அண்மையில் சீனாவில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றை, அகமதா பாத்தில் காணப்படும் பேருந்து நிலையம் என ஒருவர் தளத்தில் வெளியிட, அந்தப் புரட்டை வேறு சில நண்பர்கள் தோலுரித்துக் காட்டினர். எனினும் முதலில் சொல்லப்பட்ட பொய்யைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் பார்த்துள்ளனர் என்பதும், அவர்கள் இன்னும் பல்லாயிர வர்களிடத்தில் அதனைக் கூறியிருப்பர் என்பதும்தான் உண்மை. இப்படித்தான் ‘மோடி புகழ்’ வலைத்தளங்களில் பரவிக்கொண்டுள்ளது.

ஓர் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல், தலைமைப் பொறுப்பில் ஒரு தனி மனிதரை மட்டும் மாற்றிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்பது விஞ்ஞான அரசியலுக்கு நேர்முரணானது. தங்களின் உண்மை முகத்தைக் காட்டத் துணிவில்லாமல், இப்படி ஒரு பொய் முகத்தை முன்னணியில் நிறுத்துகிறது பா.ஜ.க.,. பத்தாண்டு களாக ஆட்சியில் உள்ள காங்கிர சின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி அவற்றைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒரு பக்கம் என்றால், தாங்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தோம் என்பதை மறைப்பது இன்னொரு பக்கமாக உள்ளது.

திருச்சியில் உரையாற்றிய மோடி, இன்றைய பொருளாதார வீழ்ச்சி குறித்து வீராவேசமாகப் பேசியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களின் நிதியை நம்பி, நாடு நடப்பதாகக் கூறியுள்ளார். உண்மைதான். 1990களில் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட உலகமயமாதல், தனியார்மயமாதல், தாராளமயமாதல் ஆகிய கொள்கைகள் நாளுக்குநாள் நம் நாட்டின் பொருளாதாரத்தையும், சிறு தொழில் வளர்ச்சியையும் அழித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இருந்த தடயம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கின்றனவே என்பது மோடியின் கவலை.

இப்போது மோடியிடம் கேட்பதற்கு நம்மிடம் சில வினாக்கள் உள்ளன. 1998  2003 காலகட்டத்தில், பா.ஜ.க., மத்தியில் ஆட்சியில் இருந்த போது, பொருளாதாரக் கொள்கையில் என்ன மாற்றம் நேர்ந்தது? பன்னாட்டு நிறுவனங்களை அந்த ஆட்சி அடித்து விரட்டி விட்டதா? சிறுதொழில்களை ஊக்குவித்து மேலேற்றியதா? அன்றைய அரசை விடுங்கள், இன்றைக்கு குஜராத்தில் என்ன நடக்கிறது? பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பன்னாட்டு நிறுவனங் களின் நிதி இப்போது அங்கே வந்து குவிந்திருக்கிறது என்பதுதானே உண்மை! அதனால்தானே ஊடகங்களும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் மோடியின் ஊதுகுழல்களாக மாறி, இன்றைய இளைஞர்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

வைகோ உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் பலர் இன்று ஒரு புதிய கற்பனையான செய்தியைப் பேசத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில்தான் ஈழத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டது என்றும், பா.ஜ.க., ஆட்சியில் ஈழ ஆதரவு நிலையே இந்திய அரசிடம் நிலவியது என்றும் கூறுகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்னால் போய் யார் ஆதாரங்களைத் திரட்டப் போகிறார்கள் என்னும் துணிச்சலில் இப்படிச்சொல்லப்படு கிறதோ என்று எண்ண வேண்டியுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டில், 35 ஆயிரம் சிங்கப்படையினர், யாழ்ப்பாணத் தில் புலிகளிடம் சிக்கிக் கொண்டனர். கையறு நிலையில் கை பிசைந்து நின்றது இலங்கை அரசு. அப்போதே ஈழ யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருக்கக் கூடும். ஆனால், அன்று இந்தியாவில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடத்திய பா.ஜ.க., அரசுதான் தலையிட்டு அவர்களைக் காப்பாற்றியது. புலிகளின் போரில் ஒரு பின்னடைவு ஏற்படவும் அந்நிகழ்வு ஒரு காரணமாக இருந்தது. இப்படி இன்னும் பல நிகழ்வுகளை நம்மால் எடுத்துக்காட்ட முடியும்.

இவற்றை எல்லாம் தாண்டி, வைகோ, நெடுமாறன் போன்றவர்களிடம் நாம் ஓர் எளிய கேள்வியை முன்னிறுத்த வேண்டியுள்ளது. பா.ஜ.க., அரசு ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது என்பது உண்மையானால், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஏன் பா.ஜ.க.,வை ஆதரிக்காமல், காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

இவ்வாறு பொருளாதாரம், ஈழம், காஷ்மீர் சிக்கல், இட ஒதுக்கீடு என்று பல்வேறு துறைகளிலும் ஒத்த கருத்தினை யும், ஒருமித்த போக்கினையும் கொண்டுள்ள கட்சிகளே பா.ஜ.க.,வும், காங்கிரசும். இந்த உண்மைகளுக்கு எல்லாம் திரைபோட்டு மறைத்துவிட்டு, மாற்றம் தேவை, வளர்ச்சி தேவை என்னும் சொற்களை மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிலையில் இருந்து எந்த நிலைக்கான மாற்றம் தேவை, எந்த இடத்திலிருந்து எந்த இடம் நோக்கிய வளர்ச்சி தேவை என்பனவற்றை விளக்குவதும் அவற்றுக்கான திட்டங்களை வெளியிடுவதும்தான் நேர்மையான அரசியல். அந்த நேர்மை அறவே இல்லாமல், தந்திரங்களாலும், மோசடிகளாலும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நினைப்பைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளி எறிய வேண்டிய நிலையில் இன்று உள்ளோம்.

இத்தனை பெரிய நாட்டை ஒரே ஒரு மனிதர் முற்றிலும் மாற்றிவிடுவார் என்றால், மோடி என்ன அரசியல்வாதியா அல்லது மந்திரவாதியா என்று பொது அறிவு கொண்ட எவருக்கும் கேட்கத் தோன்றும்.

Pin It

இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்திய இராணுவத்தில் மதத்திற்கு இடமில்லை. இரண்டும் சரிதான். எனினும் இவ்விரண்டும் இன்று விமர்சனத்திற்கு உரியவைகளாக மாறிவிட்டன. ரேவாரி என்ற இடத்தில் மோடி கலந்து கொண்ட பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அவரின் அருகில் அமர்ந்திருந்தார் இந்தியாவின் முன்னாள் தரைப்படைத் தளபதி வி.கே.சிங். இதிலிருந்து அவர் ஓர் இந்துத்துவ மதவாதச் சிந்தனைக்குரியவர் என்பது வெளிப்படையாகிவிட்டது. இப்படிப்பட்டவர்தான் இந்தியாவின் இராணுவ தளபதியாக இருந்தார்.

வி.கே.சிங் தளபதியாக இருந்தபோது, அவரால் தொழில் நுட்ப பணிகள் குறித்த உளவுப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் மூலம் காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசைக் கவிழ்க்க, தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்குப் பெருமளவு பணம் கொடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. இதை வி.கே.சிங் மறுக்கவில்லை. மாறாக அரசுக்கு ஆதரவான, பிரிவினைக்கு எதிரான காஷ்மீர் இயக்கங்களுக்குப் பணம் கொடுப்பதும், ஆதரவளிப்பதும் காலம் காலமாக நடந்து வருவதுதான் என்று சொன்னதோடு, காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லி இருக்கிறார்.

சிங்கின் இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. எனவே காலம் காலமாக இராணுவம் செய்து வரும் பணப் “பட்டுவாடா” குறித்து மத்திய அரசுக்குத் தெரியாது என்று தெரிகிறது.

மத்திய அரசுக்குத் தெரியாமல், அதன் ஆளுமை அல்லது நேரடிப் பார்வையுள்ள காஷ்மீர் மாநில அரசியலில், இராணுவத் தளபதி மூக்கை நுழைத்தது ஏன்?. உமர் அப்துல்லா அரசைக் கவிழ்க்க, தன் கட்டுப்பாட்டில் உள்ள உளவு அமைப்பின் மூலம் பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது ஏன்?.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், இன்றைய மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், “அரசியல் கட்சியினருக்கு ராணுவம் பணம் வழங்க வேண்டியதில்லை. அப்படிச் செய்யக்கூடாது. வி.கே.சிங் அவ்வாறு செய்திருந்தால் அது தவறு. இராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று சொல்கிறார்.

கொடுக்கப்பட்ட பணம், என்ன காரணத்திற்காக செலவு செய்யப்பட்டது. எந்தெந்த இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அமைச்சகங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது போன்ற செய்திகள் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

அசாம் முதல்வர் தருண் கோகாய், வி.கே.சிங் கிழக்கு மண்டலத் தளபதியாக இருக்கும்போது நாட்டு நலன் கருதி, அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்த யோசனை தெரிவித்ததாகவும், அதைத் தான் ஏற்கவில்லை என்றும் கூறியிருப்பது கவனத்திற்கு உரியது.

அன்று தளபதியாக இருக்கும்போது காஷ்மீர் முதல் அசாம் வரை மூக்கை நுழைத்த சிங், இன்று மேடையில் மோடியுடன்.

Pin It

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு உள்ளடங்கிய வடக்கு மாகாணத் தேர்தல் உள்ளிட்ட இலங் கையின் மூன்று மாகாணத் தேர்தல்கள் ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டன. 1988ஆம் ஆண்டுக்குப்பின் 25 ஆண்டுகள் கடந்து நடைபெற்ற இத்தேர் தலை, உலகின் பெரும்பான்மை நாடுகள் உற்று நோக்கின. வி.சி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்ட மைப்பு, மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி, மகிந்த ராஜபக் சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யைப் படுதோல்வி அடையச் செய்துள்ளது.

ஈழத்தில் நடந்த இறுதிப் போருக்குப் பின் அங்கே நடத்தப்பெற்ற சிங்கள இராணுவ வன்கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், கண்மூடித்தனமான கைதுகள், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவக் குவிப்புகள் இவைகளால் உலக நாடுகள் மத்தியிலும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்பும் தலை தொங்கிப் போன இராஜபக்சே அரசு, இத்தேர்தலை பெரிய சாதனையாக முன்னிறுத்தப் பார்க்கிறது-.

உண்மையில் உலக நாடுகளின் அழுத்தங்கள், இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகளின் 2000 பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற தேர்தல் இது-. அதிகாரப் பகிர்வை முன்வைத்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்துச் சிங்கள ஆளுங் கட்சியும், இத்தேர்தலைச் சந்தித்தன. வீடிழந்து, நிலமிழந்து, உடைமைகள் இழந்து நொறுங்கிப் போன நிலையிலும் தமிழ்ப் பெருமக்கள், வளர்ச்சித் திட்டங்களை நிராகரித்துவிட்டு, அதிகார (பகிர்வு)த்திற்கான உரிமைக் குரலை உயர்த்தியதற்கான அடையாளம்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றி.

இம்முடிவில் இருந்து இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் சார்பாக வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கும் விக்னேஸ்வரன், தேர்தலின் போது மக்களிடம் சொன்ன அதிகாரப் பகிர்வு, தமிழ்ப் பகுதிகளில் இராணுவக் குறைப்பு போன்றவைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?

அவரின் மாகாண ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன வகையில் எப்படி நலத்திட்டங்களைத் தரப்போகிறார்? இரண்டு, இத்தேர்தலில் சராசரியாக 70 விழுக்காடுவரை வாக்களித்த தமிழர்களின் நோக்கம், எதிர்பார்ப்பு என்ன?

விக்னேஸ்வரனுக்கு முதலில் நமது வாழ்த்துகள். தேர்தலுக்கு முன் அதிகாரப் பகிர்வை முன்வைத்துப் பேசிய விக்னேஸ்வரன், தேர்தலுக்குப்பின், ‘அதிகாரப் பகிர்வு என்பது உடனடிச் சாத்தியம் இல்லை. அதற்காக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது ஒரு நீண்டகாலச் செயல்பாடு. ஆகவே முதலில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம்’ என்று அறிவித் திருக்கிறார்.

இராஜபக்சேவின் ஆளும் கூட்டணி, தேர்தலுக்கு முன்பு வளர்ச்சித் திட்டங்களை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டது, மாறாக அதிகாரப் பகிர்வு குறித்து ஏதும் பேசவில்லை. தமிழ்ப் பகுதிகளில் இருக்கும் இராணு வத்தைத் திரும்பப் பெறவோ அல்லது குறைத்துக் கொள்வது குறித்தோ இலங்கை அரசிடம் எந்த ஒரு குறிப்பும் காணப்பட வில்லை.

அடுத்து விக்னேஸ்வரனின் மாகாண அரசு, நலத்திட்டங்களை எப்படி மக்களிடம் செயல்படுத்தப் போகிறது என்பது கவனத்தை ஈர்க்கிறது. பொருளாதார அடிப்படையில் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் இதுவரை காணவில்லை என்று சொல்லும் ஜனநாயக மயமாக்கலுக்கான கூட்டமைப்பின் ஆய்வாளர் அகிலன், “பல வீடுகள் கடனில் சிக்கியிருக்கின்றன. விவசாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மீனவத் தொழில் இந்திய மீன்பிடிப் படகுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் வளர்ச்சிக் கொள்கையில் மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை” என்கிறார்.

அப்படியானால் மாகாண அரசு எந்த அடிப்படையில் இந்நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்? அம்மாகா ணத்தின் ஆட்சி அதிகாரம் மிக்கவராக, இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்து அமர்த்தப்படும், ஆளுநர் ஒருவரின் கட்டுப்பாட்டில் முதல்வர் இருப்பார். நிதித்துறை, காவல்துறை, நிலம் தொடர்பான முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வீடு, நிலங்களை இழந்த மக்களுக்கு நிதி ஆதாரம் ஏதும் இல்லாமல் குடியிருப்பு, விவசாயம், மீன்பிடி தொழில் உள்பட எந்த ஒரு வளர்ச்சிக்குரிய நலத்திட்டத்தையும் மாகாண அரசால் செய்து தர முடியாது. அதையும் மீறிச் சிற்சில வளர்ச்சித் திட்டங்களை மாகாண அரசு நடைமுறைப்படுத்த முயன்றால், அதை ஆளுநர் மூலம் நிராகரிக்க இலங்கை அரசால் முடியும்.

முக்கியமாக அதிகாரப் பகிர்வு, நிலம், காவல்துறை போன்றவைகளின் அதிகாரங்களைக் கோரி மாகாண அரசு கோரிக்கை எழுப்பினால் அதையும் ஆளுநர் மூலம் இலங்கை அரசு நிராகரிக்கும்.

1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தல் மூலம் முதல்வரான வரதராஜப்பெருமாள், அப்பதவியைவிட்டுப் போகும்போது, மத்திய (இலங்கை) அரசின் அனுமதி இல்லாமல் தன்னால் ஒரு நாற்காலி கூட வாங்க முடியவில்லை என்று சொல்லி விட்டுப் போனார். அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாத மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை, வளர்ச்சிக்கான செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தாலும் கூட அது சாத்தியமாக வாய்ப்பு இல்லை. அதே சமயம், அதிகாரப் பகிர்வு, இராணுவக் குறைப்பு ஆகியன குறித்து அவர் குறிப்பிட்ட செய்திகள் சர்வதேச சமூகத்தின் பார்வைக்குப் போகின்றன என்பது தமிழர் நலனுக்கு அனுகூலமான ஒன்று.

இரண்டாவதாக, தேர்தலில் வாக்களித்த தமிழர்களின் நோக்கம், எதிர்பார்ப்பு என்பன குறித்து எண்ணவேண்டியுள்ளது. “இராணுவ மயமாதல், தமிழ் இளைஞர்கள் நடமாட்டத்தை ஒடுக்குவது, அரசியல் தீர்வு காண முற்படாதது, பொதுவாக வடக்கில் நிலவும் ஒடுக்குமுறை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மக்களுக்குக் கோபம் இருந்திருக்கிறது. அதுதான் இந்தத் தேர்தலில் வெளிப்பட்டு இருக்கிறது.” என்ற அகிலனின் விமர்சனம், இராஜபக்சேவின் முகமூடியைக் கிழித்து, அவரின் இனவாதக் கொடூர முகத்தை, உலகுக்குக் காட்டியுள்ளது.

தொடக்கத்தில் ஜனநாயக அடிப்படையில் ஈழத் தமிழர்கள் உரிமையைக் கேட்டபோது ஒடுக்கியது சிங்கள அரசு. ஆயுதம் ஏந்திய புலிகள் வீரப்போர் நடத்தி, அதிலும் ஒரு பின்னடைவு ஏற்பட்ட பின்னர், ஆற்றமுடியாத துன்பங்களுக்கு நடுவில் உயிரைப் பிடித்து வாழ்ந்துவரும் தமிழ்ப் பெருமக்கள், ராஜபக்சேவின் ஏமாற்றுத் தேர்தல் நாடகத்தைச் சரியாகப் பயன்படுத்திவிட்டார்கள்.

மாகாண அரசால் எந்தப் பயனும் இல்லை என்பதை மிகச் சரியாகப் புரிந்திருந்திருந்தாலும், அத்தேர்தல்களைப் புறக்கணிக்காமல், வாக்களித்து, இராஜபக்சே வேட்பாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் “இலங்கைச் சிங்கள அரசை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்பதையும், ராஜபக்சேவின் இனவெறி சர்வாதிகாரத்தையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு மக்கள் கொண்டு போய் விட்டார்கள்.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பெருவெற்றிபெறச் செய்ததன் மூலம், தமிழர்கள் தங்களின் வாழ்வுரிமைக்கான உரிமையை, அதிகாரமிக்க சுதந்திரத்தை ஒரு பிரகடனமாகவே பறைசாற்றிவிட்டார்கள். இதையும் சர்வதேச நாடுகள் கவனிக்காமல் இருக்க முடியாது.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணி அரசால், அந்த மக்களுக்கு, எந்த ஒரு நன்மையும் செய்ய முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, அதற்கான முழுப்பழியும் விழப்போவது விக்னேஸ்வர் அரசு மீது அன்று, சிங்கள சர்வாதிகாரி ராஜபக்சேயின் தலை மீதுதான்.

வடக்கு மாகாணத் தேர்தலில் ஈழத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அளித்த வாக்குகளால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்பது அவர்களுக்கான அடிமை விலங்கை உடனே உடைத்தெறியும் ஆயுதம் அன்று. எனினும் அடிமை இருளில் இருந்து வெளியே வர அவர்கள் ஏந்தியிருக்கும் ஒரு தீப்பந்தம்!

Pin It

இந்தியா முழுவதும் நன்கு அறியப் பட்ட சிந்தனையாளர் காஞ்ச அய்லையாவின் எழுத்துகளைச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் படிக்கத் தொடங்கினேன். தில்லியில் உள்ள என் நண்பர் அண்ணா துரையும், பேராசிரியர் அரச முருகு பாண்டியனும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி, அவருடைய நூல்களையும் கொடுத்தனர்.

அய்லையாவின் நூல்கள் எனக்குள் சில புதிய பார்வைகளையும், மனக் கிளர்ச் சிகளையும் உருவாக்கின என்று கூறலாம். அவருடைய 'Why i am not a Hindu' என்னும் புத்தகம்தான் நான் முதலில் படித்தது. அடுத்ததாக, ஓராண்டிற்கு முன், 'God as a political philosopher' என்னும் அவரது நூலைப் படிக்கத் தொடங்கினேன். இன்னமும் பாதியில்தான் உள்ளது. முடிக்கவில்லை.

அய்லையா ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறை களுக்கு ஆளானவர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தபோது, இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தீவிரமாக இடதுசாரி இயக்கங்களில் இயங்கியவர். ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கத் தின் (OPDR - Organisation for Protection of Democratic Rights) பொதுச் செயலாளராக 1981 முதல் பணியாற்றியவர். பிறகு, புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கர், சாகு மகராஜ் , சாவித்திரி பாய் ஆகியோரை உள்வாங்கியபின், பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் தலைவர் கன்ஷிரா மையும் பின்புலமாகக் கொண்டு சிந்திக்க வும், இயங்கவும் தொடங்கியவர்.

அவருடைய நேர்காணல் ஒன்று ‘இந்து ஆன்மிகமே பாசிசம்தான்’ என்னும் பெயரில் சிறு நூலாக வெளிவந்துள்ளது. முனைவர் தனபால், ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் அவரை நேர்கண்டுள்ளனர். அதனைக் கவின்மலர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 40 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள அந்நூல், சாதி, மதம், மொழி ஆகியனவற்றிற்குள் உள்ள தொடர்புகள் சிலவற்றை வெளிப்படுத்து கின்றது. அதில், ‘அடடா’ என வியக்க வைக்கும் செய்திகளும் உள்ளன. ‘என்ன இது, இப்படிச் சொல்கின்றாரே’ என அதிர வைக்கும் வெடிகளும் உள்ளன.

அந்த நேர்காணலில் மூன்று முதன்மையான செய்திகள் உள்ளன. வர்க்கப் பார்வையிலிருந்து வருணப் பார்வைக்கு அவர் மாறியது எப்படி, ஐரோப்பியப் பாசிசத்திற்கும், இந்தியப் பாசிசத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன, மொழி குறித்த நம் பார்வையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ஆகிய மூன்று செய்திகள் இச்சிறு நூலுள் அடங்கியுள்ளன.

1985 ஆம் ஆண்டு நடைபெற்ற காரம்செடு, படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிவோம். கம்மா சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தலித்து களான மாதிகா சாதி மக்களை அங்கு கொன்று விட்டனர். அதுதான் காரம்செடு படுகொலை. அதனைக் கண்டித்து அய்லையா விடுத்த அறிக்கையில், கம்மா நிலப்பிரபுக்கள், மாதிகா தொழிலாளர் களைக் கொன்றுவிட்டதைக் கண்டித்திருந் தார். சாதி குறிப்பிட்டு அறிக்கை வெளி யிட்டதை இடதுசாரித் தலைவர்கள் ஏற்க வில்லை. நிலப் பிரபுக்கள், தொழிலாளர் களைக் கொன்றுவிட்டனர் என்று மட்டுமே இருக்க வேண்டும் என வாதிட்டனர். அய்லையா அதனை மறுத்தார். அவர்கள் கொலை செய்யப்பட்டது, முதலில் மாதிகாக்கள் என்பதால்தான். பிறகுதான் தொழிலாளர்கள் என்பது வருகிறது என்றார் அய்லையா.

அய்லையாவின் நியாயமான வாதம் அங்கு எடுபடவில்லை. அந்த இடத்தில் தான் அவருடைய அரசியல் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இந்திய சமுதாயத்தில், வர்க்கப் பார்வையுடன், வருணப் பார்வையும் கண்டிப்பான தேவை என்பதை அவர் புரிந்து கொண்டார்.

இரண்டாவதாக, அவர் இந்துப் பாசி சத்தை மிகச் சரியான புரிதலோடு விளக்கு கின்றார். ஹிட்லரும், முசோலினியும் அரசியல் தளத்தில் பாசிசத்தை நிறுவினர். ஆனால் இந்தியாவின் இந்துமத வெறியர் களோ, ஆன்மிகத்தின் மீது பாசிசத்தை உருவாக்கி வருகின்றனர் என்கின்றார். ஆன்மிகப் பாசிசத்தை எளிதில் அழித்து விட முடியாது. அதன் முக்கியமான பரிணாமங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம் என்று அவர் கூறுவது எவ்வளவு உண்மை!

மேலே காணப்படும் இரு செய்திகளும் மிகச் சரியானவை என்பதில் எந்தக் கருத்து வேறு பாடும் இல்லை. ஆனால் அவர் கூறியுள்ள மொழி பற்றிய சிந்தனை நமக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக உள்ளது. அவர் வரிகளை அப்படியே முதலில் காணலாம்:

“.... அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய, சீராக ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்று நினைத்தேன்............ பிறகு, சமஸ்கிருதத் தையும், பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய மொழிகளி லும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன.”

சாதி அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒருவர் எப்படி மொழி அடிமைத்தனத்தை மட்டும் ஏற்கின்றார் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வுகளோடு வளர்ந்த என் போன்றோருக்கு இக்கூற்று பெரும் அதிர்ச்சியாய் இருக்குமென்பதில் வியப்பில்லை. ஆனாலும் அவர் கூறும் ஒரு காரணத்தை ஆழ்ந்தும் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய மொழிகள் பலவற்றில் சமஸ் கிருதத்தின் வேர்கள் பதிந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மைதான். தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை அய்லையா மறுக்க மாட்டார் என நம்பலாம். எனினும், சமஸ்கிருதம் என்பதை ஒரு மொழியாக மட்டும் நாம் பார்க்க முடியாது. அது ஒரு சமூக, பண்பாட்டு வல்லாண்மை. அதன் வேர்களைத் தமிழ் மொழியிலிருந்து பிரித்து விட முடியும் என்றாலும், தமிழ்ப் பண் பாட்டில் கலந்து போயிருக்கிற அதன் நச்சுத் தன்மையை அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றுதான், மனிதர்களை இழிவுபடுத்தும் சாதியம். அது கண்டே அய்லையா அஞ்சுகின்றார் என்பது புரிகின்றது.

ஆங்கில மொழியில் எழுதினால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? ஆங்கில இலக்கியங்களில் கடவுள், மத, மூட நம்பிக் கைகள் எல்லாம் எதுவுமே இல்லையா? கண்டிப்பாக இருக்கின்றது. பேய், பிசாசுகளுக்கெல்லாம் அங்கு பஞ்சமே இல்லை. மொழிகளை அறிவியல் மொழி, மூட மொழி என்றெல்லாம் பிரிப்பது சரியன்று. ஆனாலும் ஒன்றே ஒன்றை நாம் ஏற்றே ஆக வேண்டும். ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் உறுதியாக ‘சாதிய நஞ்சு’ இருக்கவே முடியாது.

சாதி என்பதும், அதன் உடன் விளைவாகத் தோன்றிய தீண்டாமை என்பதும், இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த சில நாடுகளிலும் மட்டுமே உள்ள ஒழிக்கப்பட வேண்டிய தீமைகள். அதனை ஒழிக்க வேண்டும் என்ற வெளிப்பாடே அய்லையாவின் நேர்காணலில் வெளிவந்துள்ளது என்று கொள்ளலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, அய்யா பெரியார், வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று கூறியது இதே கோபத்தின் வெளிப்பாடுதான்.

பெரியாரின் நோக்கமும், அய்லையாவின் நோக்கமும் மொழியை ஒழிப்பதன்று; சாதி இழிவை ஒழிப்பதுதான். ‘ஓங்கிச் சொல்லுதல்’ என்று இவற்றைக் கொள்ளலாம். இது ஒரு ‘அறச் சினம்.’ இதனைத்தான் சமஸ்கிருதத்தில் ‘தார்மீகக் கோபம்’ என்று நாம் கூறிப் பழகியுள்ளோம்.

--------------------------------------------------------------------------------------
நாகரிகம்

22.09.2013 அன்று நன்னிலம் அருகில் உள்ள பனகுடி - ஆண்டிப்பந்தல் கடைத் தெருவில், தோழர் சுபவீ சிறப்புரையாற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதே கடைத்தெருவில் வசித்துவந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஏகாம்பரம் அன்று மாலை இறந்துவிட்டார். கூட்டத்தைத் தள்ளி வைத்துவிடலாமா என்று தி.மு.க.வினர் எண்ணிய வேளையில், ஏகாம்பரம் குடும்பத்தினர், ஒன்றும் தவறில்லை நீங்கள் நடத்துங்கள் என்று கூறினர். தி.மு.க., கூட்டத்தின் தொடக்கத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் மறைவுக்கு இரங்கலும் ஒரு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டன. நாகரிகம், இரண்டு பக்கங்களிலும் இருந்தது.

Pin It

1913இல் இந்தியாவின் முதல் திரைப் படம் ராஜா ஹரிஷ்சந்திரா வெளிவந்தது. இந்திய திரைப்படத்தின் தந்தை என அழைக்கப்படும் பால்கே அப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இந்தியத் திரைப்படத்திற்கு இந்த ஆண்டோடு நூறு வயது ஆகிறது. அதன் நூற்றாண்டு விழா, தென்னிந்திய திரைப்படத் துறையினால் சென்னையில் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 21 முதல் 24 வரை நான்கு நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடக்க விழா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலும், நிறைவு விழா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் தலைமையிலும் நடை பெற்றன. நிறைவு விழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய திரைப்படத்துறையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வரலாற்றுப் பதிவாக நடந்திருக்க வேண்டிய நூற்றாண்டு விழா, அறிவிக்கப் படாத அ.தி.மு.க., மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. “சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்” என்ற எஜமான் படப் பாடல் வரிகளைப்போல, விழாக் குழுவினர், ஜெயலலிதாவின் சுட்டு விரல் அசைவிலேயே அனைத்து ஏற்பாடுகளை யும் செய்தனர் என்கின்றன பத்திரிகைகள். பெருமையோடு பேசப்பட்டிருக்க வேண்டிய நூற்றாண்டு விழா, தென்னிந்திய திரைப்படத் துறையின் செயல்பாடற்ற தன்மையால், கடுமையான கண்டனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரில் நடைபெறும் விழாவினை முதல்வர், அதுவும் திரைப்படத் துறையில் இருந்து வந்தவர் தொடங்கிவைத்தது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் அவருக்கே உரிய “நான்” என்ற ஆணவத் தோடு ‘ஆடாமல் ஆடிய’ ஆட்டம், திரைப்படத்துறையின் வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் அரசு சார்பாக, திரைப் படத்துறை, தகவல் தொடர்புத் துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த நாள்களில் விழாவிற்குத் தலைமை ஏற்றனர். நிறைவு நாள் அன்று அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சரைத் தவிர வேறு எந்த அமைச்சரும் விழா மேடையில் இல்லை. ஏன், தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறைக்கு அமைச்சரே இல்லையா? (ஓட்டுப் போட்ட கொடுமைக்கி, இப்பிடியாவது அந்த அமைச்சரோட மொகத்த ஒரு தடவை மக்கள் பாக்க அனுமதிச்சிருக்கலாம்!) “கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கணும், எழவு வீடா இருந்தா நாந்தான் பொணமா இருக்கணும்” என்ற எஜமான் பட வசனம், ஜெயலலிதாவுக்கு மிகவும் பொருந்தும். அரசுப் பணத்தி லிருந்து 10 கோடியைத் தூக்கி எறிந்தது வீண் போகவில்லை.

கலைஞர்கள் சுதந்திரமானவர்கள். சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கத் தினர். அப்படிப்பட்டவர்களை அடிமை களைப் போல அடக்கி ஒடுக்கி, தன் சுய நலத்திற்கு, அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்திக் கொண்ட அதே மேடை யில், “என்னுடைய இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் திரைப்படத்துறையினர் மிகவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்று பேச ஜெயலலிதா வால் மட்டுமே முடியும். அதுவும் சற்றும் சிரிக்காமல் இத்தனை பெரிய நகைச்சுவை வசனத்தைப் பேசி, தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்துவிட்டார் போங்கள்!-.

‘தி.மு.க., விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்துகின்றனர்’ என்று, முதலமைச்சராக இருந்த கலைஞர் முன்னிலை யிலேயே மேடையில் சொன்னார் நடிகர் அஜீத். அதை எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார் ரஜினிகாந்த். அந்தத் தன்மான வீரர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள்? ஏன் எந்த ஒரு எதிர்ப்புக் குரலும், ஒரு சிறு முணகலும்கூட எழாமல் போய்விட்டன?

விழாவின் மற்றொரு சறுக்கல், தென்னிந்தியத் திரைப்பட வரலாறு தேடிக்கொண்ட அவப்பெயர், தனக்குப் பெருமை தேடித்தந்த மூத்த முன்னோ டிகளில், மிகவும் குறிப்பிடத்தக்க பலரையும் புறக்கணித்தது. அவர்களுள் முதன்மையானவர், இன்றளவும் திரைப்படத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் தி.மு--.க., தலைவர் கலைஞர். நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணிநேரங்கள் இருக்கும்போதுதான், அவருக்கு அழைப்பிதழே கொடுக்கப் பட்டுள்ளது.

75 படங்களுக்குத் திரைக்கதை & வசனம் எழுதியவர், 21 படங்களுக்குப் பாடல் இயற்றியவர், 29 படங்களைத் தயாரித்தவர், 20 வயதில் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தவர், இன்றுவரை அத்துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர், சுருக்கமாகச் சொன்னால், 60 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பட வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பன்முகக் கலைஞன் - கலைஞர். அவருடைய பெயர் கூட உச்சரிக்கப்படாமல், திரைப் படத்துறையின் நூற்றாண்டு விழா நடந்து முடிந்திருக்கிறது.

கலைஞரைப் புறக்கணித்தவர்களால், அவருடைய பராசக்தியைப் புறக்கணிக்க முடியவில்லை. முடியவும் முடியாது. காரணம், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் என்னும் சிறந்த நடிகர் களைத் தமிழ் திரையுலகிற்குக் கொடுத்தது கலைஞரின் பராசக்திதான். தமிழ்த்திரைப் படத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றதும் கலைஞரின் பராசக்திதான். ஆனாலும் கலைஞரின் பெயரைத் தவிர்த்தே, பராசக்தி பேசப்பட்டது. நூற்றாண்டு விழா விளம்பரங்கள், பதாகைகள், ஒளிப்படத் தொகுப்புகள் எல்லாவற்றிலும் கலைஞரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தினத்தந்தியின் ராஜவிசுவாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. திரைப்படத் துறையின் நூற்றாண்டை ஒட்டி, 100 ஆண்டுகளில் அத்துறையில் சாதித்தவர்கள் என தினத்தந்தி வெளியிட்ட தொடர் பட்டியலில் கலைஞரின் பெயர் இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் கதை வசனம் எழுதியவர் களைக் குறிப்பிடும்போதும், பராசக்தியில் சிவாஜியின் நடிப்பை மட்டுமே சொன்ன தந்தியின் தந்திரத்தை என்னவென்று சொல்வது!

தி.மு.க., ஆதரவு திரைப்படக் கலைஞர்களும் புறக்கணிப்புக்கு ஆளாகி யிருக்கின்றனர். இசையில் தமிழர்களுக்கு உலகளவில் பெருமை தேடித்தந்த, 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு விருது வழங்கப்படவில்லை. காரணம், கலைஞர் எழுதிய செம்மொழி பாடலுக்கு இசை அமைத்தார் என்பதுதான்-. அதேபோல, வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், வடிவேலு உள்ளிட்ட மேலும் பலருக்கு இதே காரணத்திற்காக அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை. நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகாந்திற்கும் அழைப்பு இல்லை. எல்லாம் ‘அம்மா’வின் ஆணைப்படியே நடந்துள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

திராவிட இயக்கம் தந்த நடிகர்களின் வரிசையில், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கு முதலில் விருது வழங்கித் தன்மானத்தைச் சற்றேனும் காப்பாற்றிக் கொண்டனர். தன் வாழ்நாளின் இறுதிவரை தன்மானத்தோடு வாழ்ந்தவர், நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் நடிகவேள் எம்.ஆர்.இராதா. அவர் நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்த முத்திரைப் படங்களில் முதன்மையானது. அதன் திரைக்கதை வசனத்தை எழுதியவர் திருவாரூர் தங்கராசு. அவருக்கும் அங்கே இடமில்லை. இத்தனைக்கும் எம்.ஆர். ராதாவின் மகன் ராதாரவி நடிகர் சங்கத்தின் பொருளாளர், மருமகன் சரத்குமார் தலைவர், மகள் ராதிகா புகழ்பெற்ற நடிகை. பணத்திற்காகவும், பதவிக்காகவும் ஜெயலலிதாவின் அடிபணிந்து கிடக்கும் இவர்களைக் காட்டிலும், பணம், புகழ் என எதற்கும் அடிபணியாமல் வாழ்ந்த அந்த மாபெரும் கலைஞனை, வேறு யாராலும் அவமதிக்க முடியாது!.

அண்ணாவின் படங்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாமத்தைச் சாத்திவிட்டார் அம்மையார். பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லும் கலைவாணர் என்.எஸ்.கே.யின் படங்கள் திரையிடப் படவில்லை. எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி’ இடம்பெறவில்லை. இன்றைய தலைமுறை அறிந்திராத பல அருமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்க வேண்டிய நூற்றாண்டு விழா, கோடிகளை வாரியிறைத்து நடத்தப்பட்ட நூற்றாண்டு விழா புரட்சித் தலைவியின் புகழ் பாடுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கலைஞரை புறக்கணிப்பதாக எண்ணிக் கொண்டு, ஒட்டுமொத்த கலைத்துறையையும் அவமதித்துவிட்டார், முன்னாள் ‘கலைச்செல்வி’.  கற்றோரைக் கற்றோரே காமுறுவர்! கலைஞர்களை கலைஞரே அடையாளம் காண்பர்! எல்லோராலும் கலைஞர்களைப் பெருமைப்படுத்திவிட முடியாது!.

Pin It