பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 11

பஞ்சசீலத்தில் பொய்சொல்லக்கூடாது, களவு செய்யக் கூடாது என்பவை குறித்துப் பார்த்தோம். எஞ்சி இருக்கும் காமம் கொள்ளக் கூடாது - மது அருந்தக் கூடாது, கொல்லாமை யைக் கடைப்பிடிக்க வேண்டும் ஆகியவை குறித்துப் பவுத்தத்தின் பார்வையை இங்கு பார்ப்போம்.

புத்தர் சொன்னார் காமம் கொள்ளக் கூடாது என்று. நுட்பமாகத்தான் அவர் சொல்லியிருக்கிறார். காமம் என்றால் என்ன? மனிதர்கள் உள்பட, அனைத்து உயிரினங்களுக்கும் உடல் சார்ந்த ஓர் உணர்வு - காமம்.

மனித வாழ்வில் காமமும் அன்பும் ஒன்றிணையும் போது அங்கே காதல் பிறக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையை வழங்குவதுதான் காதல். அது இல்லறத்தில் நுழையும்போது, காமம் நெறிப்படுத்தப்படுகிறது. இல்லறத்தில் காமம் தவிர்க்க முடியாத ஒன்றாக நிலைபெற்று விடுகிறது.

புத்தரின் இல்லறத்தில், அன்புக்குத் துணைவி இயசோதையும், அவர்களின் காமத்திற்கு மகன் இராகுலனும் சான்றாக நிற்கிறார்கள். புத்தர் இதை அறியாதவர் அல்லர். அதனால்தான் இல்லறம் துறந்த பவுத்தத் துறவிகளுக்குக் காமத்தை விலக்கு என்று சொன்ன அவர், அந்த விதியை இல்லறத்தார் மீது திணிக்கவில்லை, தவிர்க்கவும் சொல்லவில்லை. இது தனிமனித வாழ்வியல் பார்வை.இன்னொரு பார்வையும் இருக்கிறது. அது ஆரியத்திற்கு எதிரான சமூகம் அல்லது இனம் சார்ந்த பார்வை எனலாம்.

“ஆரியரின் இன்றைய வழித் தோன்றலுக்கு அன்றைய ஆரிய சமூகத்தில் இருந்த பாலியல் ஒழுக்கக்கேடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகும்” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

ஆரிய புராண மரபுப்படி பிரம்மா படைப்புக் கடவுள். பிரம்மாவுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருந்தனர். அவர்களில் தட்சன் என்ற மகன், தன் உடன் பிறந்த சகோதரியை மணந்தான்.

இவர்களுக்குப் பிறந்த பெண்ணை, பிரம்மாவின் இன்னொரு மகன் மாரீசிக்குப் பிறந்த காசிபன் மணந்தான் என்கிறது மகாபாரதம், ஆதிபருவம்.

ரிக்வேதத்தில் வரும் அண்ணன் யமன், தங்கை யமி பற்றிய உடலுறவு செய்தியை ஹரிவம்சம் விவரிக்கிறது. அது அண்ணன் தங்கை காமக் கதை.

அதே, ஹரிவம்சம், வசிட்டன் தன் பருவம் எய்திய மகள் சத்ரூபையையும், மனு தன் மகள் இளையையும், ஜானு தன் மகள் ஜானவியையும், சூரியன் தன் மகள் உஷை யையும் மணந்ததாகச் சொல்கிறது. இது அப்பா மகள் காமக் கதை.

தட்சன் தன் மகளை, தன் தந்தை பிரம்மனுக்கு மணம் முடித்தான் என்றும், தெளசித்திரன் தன் 27 மகள்களைத் தன் அப்பனுக்கு மணமுடித்தான் என்றும் ஹரிவம்சம் கூறுவதைக் கேட்கிறோம். இது தாத்தா பேத்திகளின் காமக் கதை.

ஆரியர்கள் அசுவமேத யாகம் என்ற ஒரு யாகம் நடத்தினார்கள். அதில் குதிரை பலி யிடப்படும். யார் குதிரையைப் பலி கொடுக்கி றானோ, அவனின் மனைவி, அக்குதிரையுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது ஒரு கேவலமான காமத்தின் அடையாளம்.

இன்றும் கூட சிவனுக்கும், விஷ்ணு வுக்கும் அதாவது இரண்டு ஆண்களின் காமத்தில் பிறந்த ஐயப்பன் கடவுளாக்கப் பட்டுள்ள கதையை அறிவோம்.

மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் எவ்வகையிலும் பயன்படாத காமக் கதைகளால் அறிவு மயங்கும், பேதமை மேலோங்கும். இங்கே காமம் கடவுள் காட்சியில், ஆதிக்கத்தின் அடையாளமாக மாறுகிறது. கவைக்கு உதவாத இத்தகைய காம புராணக் கதைகளை கணக்கில் கொள்ளக் கூடாது, விலக்க வேண்டும் என்பதுதான் பவுத்தத்தின் உயர் பார்வை.

பஞ்சீலத்தின் அடுத்த செய்தி மது அருந்தக் கூடாது.

டாக்டர் அம்பேத்கர் சொல்வதைக் கேட்போம், “மது அருந்தும் பழக்கம் ஆரியரிடையே பெருவழக்காக இருந்தது. சோமபானம், சுராபானம் என மது இருவகைப்பட்டது. சோமபானம் யாகங்களுக் குப் பயன்பட்டது. சோமபானம் அருந்துவது ஆரம்பக் காலத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோருக்கு மட்டுமே உரியது. பின்னர் அந்த உரிமை பிராமணர், சத்திரியர் ஆகியோருக்கு மட்டுமே என்றாயிற்று. வைசியர் இதில் இருந்து விலக்கப்பட்டனர். சூத்திரர் அனுமதிக்கப்படவில்லை. சோமபானம் தயாரிக்கும் முறை பிராமணர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகக் காப்பாற்றப்பட்டது. சுராபானம் பிராமணர் உள்பட அனைவரும் அருந்தினர். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அளவுக்கு மீறி மது அருந்தி தன்னிலை மறந்து, தனக்கு மட்டுமே தெரிந்த இறந்தோரை உயிர்ப்பிக்க வல்லதும், தேவர்களால் உயிரிழந்த அசுரர்களை உயிர்ப்பிக்கக் கூடியதுமான மந்திரத்தை தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கட்சனுக்குக் கற்றுக் கொடுத்தார். கிருஷ்ணனும், அருச்சுனனும் அளவுக்கு மீறி மது அருந்தியதை மகாபாரதம் குறிப்பிடுகிறது.”

அம்பேத்கர் சொன்ன இந்தச் செய்தியில் சோமபானம் தெய்வீகத்துடன் காட்டப்ப டுவதைக் கவனிக்கலாம். சோமபானம் வைசியருக்கும், சூத்திரருக்கும் விலக்கப்பட் டுள்ளது. வர்ணாசிரமம் இங்கேயும் தலைதூக்கு வதைக் காணலாம்.

கெளசிதகி கிருஹ்ய சூத்திரம், “விதவைகள் அல்லாத நான்கு அல்லது எட்டு(ஆரிய)ப்பெண்கள் திருமணத்திற்கு முன்னாள் இரவு மதுவும் உணவும் அருந்திய களிப்புடன் நான்கு முறை நடனமாட வேண்டும்” என்கிறது.

கி.பி.7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில், அகிசந்திரா, மதுரா ஆகிய நாடுகளில் வாழும் மக்களில், ஆரியப் பெண்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதைக் காண்கிறோம் என்று தந்திரவார்த்திக நூலில் குமரிலபட்டர் கூறுகிறார்.

மகாபாரதம் வனப்பருவத்தில் விராடனின் மனைவி சுதேசனை, தன் பணிப்பெண் மூலம் சைரந்திரியக் கீசகன்அரண்மனையில் இருந்து மது வரவழைத்து அருந்தியதைப் பார்க்கி றோம். ஆரிய ஆண் பெண்களின் இச்சமூக இழிவு மதுக்கலாச்சாரம்,பின்னர் ஆரியர் அல்லாத திராவிடர்களையும் பற்றிக் கொள்கிறது.

அதனால்தான் பவுத்தம் மது அருந்து வதைத் தவிர்க்கும்படிக் கூறுகிறது. இதை ஆரிய கலாச்சாரத்திற்கு எதிரான பவுத்தத்தின் குரலாகப் பார்க்க முடிகிறது. பஞ்சசீலத்தில் புத்தர், கொலை செய்யக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். இதைக் கொல்லாமை என்பார்கள்.

பிற உயிர்களைக் கொலை செய்யக் கூடாது என்று அவர் கூறியதை, உயிர்களைக் கொன்று அதன் இறைச்சியைச்  சாப்பிடக் கூடாது என்று புத்தர் சொன்னதாகக் கதை கட்டி விட்டார்கள். இறைச்சி சாப்பிடக்கூடாது என்று புத்தர் எங்கும் யாரிடமும் சொல்லவில்லை. அதை அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.

இங்கே புத்தரின் கொல்லாமையின் பொருள் அல்லது விளக்கம் என்ன?

ஆரியர்களின் கலாச்சாரத்தில் வேள்வி யாகம் என்ற சடங்கு முதன்மை பெறுகிறது. வேள்வி நடத்தினால் தீமை அகன்று நன்மை பிறக்கும் என்பார்கள். ஆரியர்களின் வெற்றிக்கு அசுவமேத(குதிரை)யாகம் நடத்துவார்கள். இத்தகைய வேள்வியின் போது, மாடுகள், குதிரைகள், ஆடுகள் என்று வாய்பேசா உயிரினங்களைக் கணக்கில்  அடங்காமல் உயிர்ப்பலி கொடுப்பார்கள்.

பவுத்த நூலான சுத்தநிபாதம் தரும் புள்ளிவிபரச் செய்தியின்படி, கோசல நாட்டு மன்னன் பசநேதி, ஆரியப் பூசாரிகளின் மூலம் நடத்திய வேள்வி யாகத்தின்போது, 500 எருதுகள், 500 காளைகள், 500 பசுக்கள், 500 செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஒரே நேரத்தில் கொலை செய்து பலி கொடுத்திருக்கிறான்.

அசுவமேத யாகத்தின்போதும் இது போன்றுதான் குதிரைகளைக் கொன்று வேள்வி நடத்தியிருக்கிறார்கள் ஆரியப் பூசாரிகள். இந்த மகாப் படுகொலை பாதகத்தை ஆரியம் செய்யக் காரணம் என்ன?

மேலுலகத்தின் பேரின்பத்தைப் பெறுவ தற்காகவும், இந்த உலகத்தில் பல்வேறு பேறுகள் பெற்றுக் கொள்வதற்காகவும் இப்பலி தரப்படுவதாக ஆரியம் சொல்கிறது.

உண்மையில் இது ஒரு ஏமாற்று வேலை. சொல்லப்போனால், உடல் உழைப்பு இல்லாத புரோகிதக் கூட்டம், இந்தக் கொலை யாகங்களை நடத்துவதன் மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முற்பட்டு இருக்கிறார்கள்.யாகங்கள் நடத்துவதே புரோகிதர்கள் பொருள் ஈட்டுவதற் கான ஒரே வழி. யாக வேள்வியின் போது, ஆடு, மாடுகள், தங்கம், உயர்ந்த ஆடைகள், தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களைத் தானம் என்ற பெயரில் கட்டணமாக வசூலித்தார்கள் புரோகிதர்கள்.

1000 பசுக்கள் பலி கொடுத்தால் அல்லது தானமாகக் கொடுத்தால் அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கதையளந்தார்கள் ஆரியப் பூசாரிகள். இப்படிக் கூட்டம் கூட்டமாக, எந்த ஒரு பயனும் இல்லாமல் உயிர்களைக் கொன்று பலி கொடுப்பதைப் புத்தர் எதிர்த்தார். அதனால்தான் அவர் உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அறிவுறுத்தினார் பஞ்சசீலத்தின் மூலமாக.

பொய், களவு, காமம், மது, கொலை இவைகளைத் தனி மனித நன்னெறிக்காகப் புத்தர் சொன்னாலும் கூட, அதில் அம்பேத்கர் சொன்னதுபோல, மறைபொருளாக அல்லது அனுமான அடிப்படையில் ஆரிய பண்பாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிராகவே புத்தரின் - பவுத்தத்தின் பஞ்சசீலம் அமைந்து இருக்கிறது.

ஆரியத்திற்கு எதிரான பவுத்தத்தின் போராட்டத்தில் இதுவும் அடங்கும்.   

- தொடரும்