நூல் அறிமுகம்

பெரியாரின் நண்பர்
டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
ஆசிரியர்: பழ. அதியமான்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூ.375
2012, ஏப்ரல்

பழ. அதியமான் அவர்கள் தாம் எழுதிய ‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ நூலினை, அந்நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனேயே எமக்கு அஞ்சலில் அனுப்பி வைத்தார். வெளியீட்டு விழாவிற்கும் நாம் சென்றிருந்தோம். சுப. வீரபாண்டியன் ஒரு விபத்தில் சிக்கி முழுநலம் பெறாத நிலையிலும், அதியமானின் நூலைத் திறனாய்வு செய்து பேசினார். ஒரு நூலைப் படிக்கிறபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் தோன்றும். இன்னும் செய்திகள் கூடுதலாகவோ, குறைவாகவோ கிடைக்கக்கூடும். குறைகள், பிழைகள் என நூலினுள் தெரியலாம். ஏற்கனவே ஒரு முறை நூலைப் புரட்டிப் பார்த்து வைத்திருந்த நமக்கு, உமாவின் தொலைபேசி மீண்டும் ஒரு முறை நூலை ஆழமாகப் படிக்கும்படி செய்துவிட்டது.

பழ. அதியமான் எமக்கு ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’ நூலின் மூலம் அறிமுகமாயிருந்தார். பொதுவாகவே அதியமான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அதன் ஆழத்திற்குச் சென்று முத்துகளைக் குவிப்பதில் வல்லவர். அந்த வகையில் ‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ அமைந்திருப்பது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. நூலின் அட்டையில் நாயுடுவைவிட, ‘பெரியாரின் நண்பர்’தான் பெரியதாகவும், பளிச்செனவும் தெரிகிறது. இந்நூல் 476 பக்கங்களைக் கொண்டது. 8 அத்தியாயங்களில் 269 பக்கங்களில் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு முடிந்து விடுகிறது. மீதமுள்ள 207 பக்கங்களில் பின்னிணைப்புகள், துணை நூற்பட்டியல் ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன.

எம்முடைய பட்டறிவில், தனிப்பட்ட தலைவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவர்களில் முன்னணியில் இருப்பவர் - நிற்பவர் தனஞ்செய்கீர்! தமிழில் இப்போது அந்த வகையில் பழ. அதியமான் பிறைக்கீற்றாய்த் தோன்றி வருகிறார். இவ்வரலாற்று நூலில் நன்றி தெரிவிக்கும் பகுதியில் அதியமான் தான் பட்ட பாட்டை பஞ்சுதான் படுமோ என்று சொல்லி இருக்கிறார். ஒரு தலைவரைப் பற்றிய அனைத்துப் பரிமாணங்களையும் - நல்லவை, அல்லவை, சிறந்தவை எனக் காய்த்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு நாயுடுவை நமக்கு நூலாசிரியர் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

1919-1957 வரை சுமார் 40 ஆண்டுகள் தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், இந்து மகா சபை ஆகியவற்றின் உள்ளும் புறமுமான சமுதாய, அரசியல் நிகழ்வுகளை நூல் முழுக்கக் காண முடிகிறது. அதுவும் நாயுடுவின் அரசியல் உஷ்ணம் காலப் பகுப்புச் செய்யப்பட்டு அந்தந்தத் தலைப்பின் கீழ் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது நூலின் பெருஞ்சிறப்பாகும்.

நாயுடு பத்திரிகை ஆசிரியர். அதுவும் அவ்வேடு புகழ்பெற்ற ‘தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்றதாகும். அதில் ம.பொ.சி. மட்டுமன்று, என்.டி. சுந்தரவடிவேலு போன்றவர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். நூலெங்கும் செய்திகளின் குவியலாகத் தோற்றமளிக்கிறது.

நூலுக்குரிய கதாநாயகர் சிறந்த பேச்சாளர் மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும் பணியாற்றியவர். அவர் பேச்சும் எழுத்தும் படிப்போருக்கு நல்விருந்தாகவும், கால நிலையை அறிந்து கொள்கிற கருவூலமாகவும் திகழ்கின்றன. நாயுடு, பிரபஞ்சமித்திரன், ஆந்திர பிரஜா தெலுங்கு நாளிதழ், இந்தியன் எக்ஸ்பிரஸ்(1932) ஆகிய ஏடுகளையும் நடத்தி இருக்கிறார். ராம்நாத் கோயங்காவுக்கு முன்பே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை அந்தப் பெயரிலே முதன் முதலாக நாயுடுதான் நடத்தி இருக்கிறார் என்பதை இந்நூலால் அறிய முடிகிறது. பழ.அதியமான் இந்நூலில் நாயுடுவின் பல பேச்சுகளைப் பதிவு செய்து இருக்கிறார். அத்தகைய பேச்சுகளுள் ஒன்று, இக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. அப்பேச்சின் ஒரு பகுதி வருமாறு:-

“அணுகுண்டைவிட அரசியல் அதிகாரம் அதிக வலிமையுடையது. அணுகுண்டு மக்களை அழித்துவிடும். மாண்டாருக்குத் துயரமில்லை. நீதியற்ற அரசியல் ஆதிக்கமோ மக்களை அல்லல்படுத்தி துயரத்தில் ஆழ்த்திவிடும். ஆகையால் இந்நாட்டின் ஆட்சி நல்ல ஒழுக்கமுள்ள திறமைசாலிகள் வசம் இருக்கும்படி ஓட்டர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்”. (பக்.187)

இப்போதும் பொருந்தி வருகிற பேச்சு. இது மட்டுமா? இன்னொன்றையும் மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்துக் கூறியிருக்கிறார் நாயுடு. அவரின் அந்த எச்சரிக்கை - கணிப்பு உண்மையாகிப் போனதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாயுடு 1952இல் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்றபோது, ‘அங்குள்ள தமிழர்கள் தம் மக்களைக் காக்க, ஆயுதம் ஏந்தும் காலம் ஒருநாள் வரும்’ என்று பேசினார். (பக்.191). அது உண்மையாகிவிட்டது அல்லவா? இப்படிப்பட்ட பல பதிவுகள் நூலினுள்ளே விரவிக் கிடக்கின்றன.

கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு என்றோ, கே.வி.ரெட்டி என்றோ, கே.வி. ரெட்டி நாயுடு என்றோ எதாவது ஒன்றைப் பயன்படுத்தி இருக்கலாம். மூன்று பெயரும் ஒருவரையே குறிக்கின்றன. முதல் இரண்டு பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் வெவ்வேறு நபர்கள் என்று படிப்போர்க்குக் குழப்பம் ஏற்படக் கூடும். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கலாம். சில இடங்களில் நூலாசிரியரின் மதிப்பீடுகள் அரசு அலுவலர்கள் மேலதிகாரிக்கு எழுதும் குறிப்புகள் போல், பட்டும்படாமலும் இருக்கின்றன.

மதிப்பீடுகள் தவறாகக் கூட கணிக்கப்படலாம். ஆனால் அவை கறாராக முன் வைக்கப்பட வேண்டும். விமர்சகர்கள் அதை நேர் செய்து கொள்வார்கள். அப்படி நேராமலும் மதிப்பீடுகளை வரலாற்று நூலாசிரியர்கள் செய்ய வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.

நூலின் பின்னிணைப்புகள் மிகவும் பயன்படத் தக்கவையாகும். நாயுடுவின் வாழ்க்கை நிகழ்வுகளின் படங்களை பழ. அதியமான் பதிவு செய்து இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். நாயுடு உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்க, அவர் முகத்தைப் பெரியார் தன் கரத்தால் தொட்டுப்பார்ப்பது போல் உள்ள படம் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. அது குறித்து அதியமான் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பட்டப்படிப்பே படிக்காத மூவர் - பெரியார், திருவிக, வரதராஜுலு ஆகியோர் மக்களால் நாயக்கர், முதலியார், நாயுடு என அழைக்கப்பட்டனர். இம்மூவரில் ஒருவர் - திருவிக, முதல் சுற்றிலேயே அரசியலிலிருந்து விலகிவிட்டார்.

போராட்ட வீரரான நாயுடு அரசியலில் ஈடுகொடுத்து இறுதி வரை போராடினார். காமராசரை முதல்வராக முன்மொழிந்த நாயுடு, தாமே அப்பதவிக்கு வர இயலும். ஆனால் அவர் விலகி நின்றார். பெரியார், திருவிகவின் மரணத்தின் போது 200 மைல்களுக்குக் காரில் பயணம் செய்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார். இரங்கல் உரையாற்ற ஏற்பாடு செய்யப்படவில்லை. நாயுடுவின் இறுதிப் பயணத்திலும் பெரியார் பங்கேற்றார். இரங்கல் உரை ஆற்றினார். நூலில் அவ்வுரை பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நூலினுள் எம்மால் மறக்க முடியாத, நெஞ்சில் பதிந்த கருத்தாக இருப்பது - மாநில சீரமைப்பின் போது, நாயுடு அவர்தம் கருத்தைச் சொல்கிறதுபோது, தமிழ்நாட்டின் தனித்தன்மையை எடுத்துரைத்தார்:

“தமிழ்நாட்டைப் பொருத்தவரை மொழி இயக்கம் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டின் இடம் தனித்தன்மை வாய்ந்தது. அயலவராலோ, வட இந்தியராலோ அது எப்போதும் முழுவதும் ஆளப்படவில்லை. அசோகர் காலத்தில் கூட அது சுதந்திரத்துடன் தனியாக இருந்தது. பிரிட்டிஷ்தான் முதலில் ஆண்டு, அதை இந்தியாவுடன் இணைத்தது”.

இதே கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் கூறுகிறபோது, “கனிஷ்கருடைய காலடியும், அசோகருடைய ஆட்சியதிகாரமும், அக்பருடைய ஆதிக்க நிழலும் படாத நாடல்லவா நம்நாடு” என்று குறிப்பிட்டார்.

இப்படிப் படிப்பவருக்குப் பல நினைவுகளை ஊட்டக்கூடிய மிகச் சிறந்த நூலாக பழ. அதியமானின் ‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ திகழுகிறது. 20ஆம் நூற்றாண்டின் அரை நூற்றாண்டை நம் மனக்கண்முன் கொண்டு வந்து காட்டும் காலக் கண்ணாடியாக நாயுடுவின் வரலாறு திகழுகிறது. வாங்கிப் படித்து விட்டுப் புத்தகப் பேழையில் வைக்க வேண்டிய கருவூலம்.