அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் மீதான தாக்குதலை ஜெயலலிதா இன்னும் கைவிடவில்லை. முதலில், மாற்ற நினைத்தார். முடியவில்லை. இப்போது சிதைக்க முயல்கிறார்.

கல்வியாளர்களும், அறிவியலாளர்களும், ஆய்வாளர்களும், மாணவர்களும் தங்கள் அறிவை விரிவு செய்வதற்கு, நாள்தோறும் நாடி வரும் நூலகச் சோலையாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, திருமண மண்டபமாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறது ஜெயலலிதாவின் அரசு. ஜுலை ஒன்றாம் தேதி அந்நூலக அரங்கத்தில் ஒரு திருமணம் நடந்திருக்கிறது.

நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்றபோது, ‘நூலகங்களில் உள்ள அரங்கங்களை, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது ஏன்’ என்று அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நூலகத்தை நடத்தப் போதிய பணம் இல்லை. அதனால்தான் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடுகிறோம்’ என்று விடையளித்திருக்கின்றனர்.

நீதிபதிகள் இப்பொறுப்பற்ற செயலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், ஒன்பதாம் தேதிக்கு வாங்கப் பட்ட முன்பணத்தையும் உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், இனிமேல் நூலக அரங்கத்தை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே திருமணமானவர் களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ‘விலை இல்லாத’ (அம்மாவின் புதிய கண்டுபிடிப்பு) திருமணங்கள் நடத்தி வைக்கவும், அன்னதானத் திட்டத்திற்கும் செலவழிக்க முடிகிறபோது நூலகத்தைப் பராமரிக்கப் பணம் இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

ஓராண்டு சாதனை என்று சொல்லி, அரசுப் பணத்தை வாரியிறைத்து, நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கத் தெரிந்தவர் களுக்கு, ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் நூலகத்தைப் பராமரிப்பதற்குப் பணம் ஒதுக்க மனம் வரவில்லை என்பதுதான் உண்மை.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் என்.ஆர்.சிவபதி(தமிழகப் பள்ளிக் கல்வி-விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்), தமிழகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ‘கல்விப் புரட்சி’யை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருக்கிறார். 

மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பென்சில், புத்தகப் பை, காலணி எல்லாம் தருகிறாராம் ஜெயலலிதா. அதைத்தான் மாண்புமிகு அமைச்சர் கல்விப்புரட்சி என்கிறார் போலும். அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில், ஓர் அரசு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? ஆனால் இன்றைய கல்வி முறையானது, வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற வைக்கின்ற, மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக்குகின்ற மோசமான கல்வி முறை என்பதைக் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அதையும் தாண்டி, நம் பிள்ளைகள் சுயமாகச் சிந்திக்கவும், இன உணர்வும், மொழி உணர்வும் பெற்று, உலக அரங்கில் வல்லுனர்களாக வலம்வரவும் நூலகங்களே அவர்களுக்கு உதவுகின்ற உற்ற நண்பன் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

மரங்களை வெட்டிக் கடத்துபவர்கள், ஆற்றின் அடியில் அடித்துச் செல்லப்படும் பெரிய மரத் துண்டுகளை மறைக்க, மேலே மரத்தூள்களைத் தூவுவார்களாம். ஜெயலலிதாவின் கல்விப் புரட்சியும் அந்த வகையாகத்தான் தெரிகிறது.

கடந்த மாதம் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெறவிருந்த ஓர் இலக்கியக் கூட்டத்தை (பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியார் பிறந்தநாள் நிகழ்ச்சி) நடத்தவிடாமல் இடையூறு செய்தது ஜெயா அரசு. இப்போது, அண்ணா நூலக அரங்கத்தைத் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்வது.

தனக்கென ஒரு நாடு, மரபு வழிப்பட்ட வரலாறு, தொன்மங்கள் என எதையும் கொண்டிராத ஆரியம், தன் பிழைப்புக்காக, மாற்றார் வரலாறுகளை, தொன்மங்களை உள்வாங்கிச் செறித்தும், திரித்தும் வந்திருக்கிறது. அது முடியாத சூழலில் சிதைக்கவும் தயங்கியதில்லை.

இன்று தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சமச்சீர்க் கல்வியை எதிர்த்தனர். தமிழ்ப் புத்தாண்டை தையிலிருந்து சித்திரைக்கு மாற்றினர்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதாவின் நெஞ்சில் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதில் நேரடியாக எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். அதனால்தான், பார்ப்பன மூளை குறுக்கு வழியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது.

எந்த ஒன்றும் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்தால்தான் நிலைத்து நிற்கும். இல்லையயன்றால் அழிந்து விடும். இந்த வாய்ப்பாட்டைத்தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வந்தேறி ஜெயா செயல்படுத்தி வருகிறார்.

எட்டு ஏக்கர் நிலப்பரப்பில், எட்டு மாடிகளோடு அமைந்திருக்கும் இந்நூலகத்தில், 12 இலட்சம் நூல்கள் வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடங்கும் போதே, ஐந்தரை லட்சம் நூல்களோடு தொடங்கப்பட்டது. கூடிய விரைவில், மீதமுள்ள ஆறரை லட்சம் நூல்களும் வாங்கி வைக்கப்படும் என்று அன்றைய அரசு சொல்லியிருந்தது. நூலகத்தையே சிதைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடத் துடிக்கும் ஜெயலலிதா, மேலும் புதிய நூல்களை வாங்கி வைப்பாரா? பாரதிதாசன் செம்மொழி நூலகத்திலிருந்த ஆயிரக்கணக்கான நூல்களுக்கு நேர்ந்த கதியைத்தான் நாம் அறிவோமே. இன்னொரு யாழ் நூலகத் துயரத்தைத் தமிழினம் சந்திக்கும்படிச் செய்துவிடுவாரோ ஜெயலலிதா என்ற அச்சம் ஏற்படுகிறது.

நூலகத்திற்கு வாங்கப்படும் பருவ இதழ்களிலும் கை வைத்திருக்கிறார்கள். சில குறிப்பிட்ட பருவ இதழ்கள் வாங்குவது நிறுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிய வருகிறது. நாட்டு நடப்புகளை, அரசின் செயல்பாடுகளின் பின்னால் இருக்கின்ற அரசியலைத் தத்தம் கொள்கைகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து செய்திகளை மக்களுக்குத் தருபவை பருவ இதழ்கள். மக்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது பாசிச அரசியல். அதைத்தான் ஜெயலலிதா செய்து வருகிறார்.

வேலை செய்வதற்கு எப்படி நல்ல சூழல் வேண்டுமோ, அப்படிப் படிப்பதற்கும் மிக நல்ல சூழல் முக்கியம். காற்று, வெளிச்சம் போன்றவை போதுமானவையாக இருக்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் ஒளி வெள்ளம் பாய்கின்ற வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முழுவதும் குளிரூட்டப்பட்ட படிப்பறைகளில் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் படிக்கமுடியும். காலையில் நூலகத்திற்குள் நுழைந்தால், வெளி உலகையே மறந்து இரவு வரை அங்கேயே அமர்ந்து படித்துக் கொண்டிருக்கத் தோன்றும். காலை முதல் இரவு வரை ஓரிடத்தில் இருக்கின்ற போது, கழிப்பறை வசதி மிக மிகத் தேவையான ஒன்றாகிறது. அதை மனத்தில் கொண்டே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கழிப்பறைகள் நவீனமாகவும், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பொதுவாக, சுத்தமான கழிவறை வசதி இல்லாத பொதுஇடங்களுக்கு மக்கள் செல்ல விரும்புவதில்லை. நூலகத்தைச் சிதைத்தல் என்னும் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கழிப்பறைப் பராமரிப்பில் அக்கறை காட்டாமல் இருக்கிறது ஜெயா அரசு. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக் கானவர்கள் வந்து போகும் இடத்தில், கழிப்பறைப் பராமரிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பது அரசுக்குத் தெரியாதா? அப்படியிருந்தும், நூலகத்தில் இப்படி ஒரு சுகாதாரமற்ற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஜெயா அரசின் நோக்கம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால்தானே நீண்ட நேரம் நூலகத்தில் இருந்து படிப்பார்கள். கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால், படிக்கும் நேரம் குறைந்து, படிப்படியாக வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பிறகு பயன்பாடில்லாத நூலகம் என்று சொல்லி மூடுவிழா நடத்துவது எளிதாகிவிடும் அல்லவா?

தனியார் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் தரமான நூல்களுடன் கூடிய நூலகங்கள் இருக்கின்றன. ஆனால் அரசுக் கல்வி நிறுவனங்களில் அந்த வசதி இல்லை. அங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் அரசு நடத்தும் நூலகங்களையே தங்களின் ஆராய்ச்சிக்கும், மேற்படிப்புக்கும் நம்பியிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு வேடந்தாங்கல் போன்றது. பொருளாதார, அரசியல் வல்லுனர் களாகவும், கல்வியாளர்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாகவும் தமிழர்கள் உருவா வதற்கு இந்நூலகம் அடித்தளமிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அம்மையாரின் ஓராண்டு ஆட்சியிலேயே, ஓராயிரம் முறை நீதிமன்றம் தலையிட்டுத் தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றி இருக்கிறது. இன்னும் மிச்சமிருக்கின்ற நான்காண்டு களுக்கு, எதிர்க்கட்சியினரும், ஜனநாயக அமைப்புகளும், மக்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை திருமண மண்டபமாக்கிய அம்மையாரின் ஆணவச் செயல் மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கிறது.