' இவரு பெரிய ஜில்லா கலெக்டரு'

' என்ன...கலேக்கட்டரு கணக்கா பேசுற '

' படிச்சிக் கிழிச்சி கலெக்டராகப் போறாளாக்கும் '

இப்பவும் கிராமத்துப் பக்கம் போனீங்கன்னா, இத மாதிரி டயலாக் கெல்லாம் கேட்கலாம். அம்புட்டு ஒசந்த வேலை கலெக்டரு வேலை. அம்புட்டு மதிப்பு அந்தப் பதவிக்கு.

இம்புட்டு மட்டு மருவாதி இருக்கிற கலெக்டரு பதவிய, ஒரு டி.வி. நாடகம் அசிங்கப் படுத்திக்கிட்டு இருக்கு. தெனமும் இராத்திரி 8.30 மணிக்கு, சன் டிவியில ஒளிபரப்பாகுற ' தங்கம் ' நாடகத்ததான் சொல்றேன். அதுல ஒரு வீட்லயே மூணு கலெக்டருங்க இருக்காங்க. அப்பா (ரிட்டேயரா யிட்டாரு), மகன், மருமகன்னு. புருசனும், பொஞ்சாதியும் கலெக்டரு வேலை பாக்குறதவிட, கோயில்ல நேத்திக்கடன் செய்ற நேரந்தான் அதிகம். கலெக்டரம்மாவோட அப்பா ஊரு தலைவரு. அவரோட வேலை கட்டப்பஞ்சாயத்து பண்றது. கட்டப் பஞ்சாயத்துப் பண்றது சட்டப்படி தப்புன்னு தெரிஞ்சும், எப்படி அந்த நாடகத்துல இத மாதிரி காட்டுறாங்கன்னு தெரியல.  மகளும், மருமகனும் கலெக்டரு, அப்பா கட்டப்பஞ்சாயத்து பண்றவரு. நல்ல குடும்பம்ல !

அந்த ஊருல எல்லையம்மன்னு ஒரு சாமி.  எல்லையம்மனுக்கு மொளகா அரச்சு பூசுனா, தப்பு பண்ணவங்க உடம்பு பூரா காந்தலெடுக்குமாம். அத வச்சி குத்தவாளிய அந்த அம்மன் காட்டிக் கொடுத்துருவாளாம். இந்த நாடகத்துல அந்த கலெக்டரு குடும்பமே எல்லை யம்மன சுத்தி சுத்தி மொளகா அரச்சி பூசிக்கிட்டுக் கெடக்கு. தப்பு பண்ற வங்கள எல்லையம்மனே கண்டு பிடிச்சித் தந்துருவான்னா, எதுக்கு கலெக்டரு உத்தியோகம்? அந்தப் பதவிய எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவு கேவலப் படுத்தியிருக்காங்க அந்த நாடகத்துல. சாமி கும்புடுறது அவுங்க அவுங்க தனிப்பட்ட நம்பிக்கை. ஆனா, முட்டாத்தனமான ஒரு காரியத்த, பெரிய பொறுப்புல இருக்குறவுங் களே செய்ற மாதிரி காட்டுறது, தப்பான முன்ணுதாரணமா ஆயிடாதா?

சினிமாவுலயும், கதைகள்லயும் வர்ற போலீசு, மிலிட்டரி, தொழிலதி பருங்களப் பாத்துட்டு நாமளும் அத மாதிரி வரனுமின்னு கங்கணம் கட்டிக்கிட்டு, சாதிச்சுக் காட்டுனவங்க இருக்காங்க. குடியயும், சிகரெட்டையும் கையிலகூட தொடாம நடிச்ச எம்.ஜி.ஆரப் பாத்துட்டு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம எத்தனையோ பேரு இருக்காங்க. தங்கப்பதக்கம் சவுத்ரி, மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் இவுங்கள மாதிரி நேர்மையான போலீசாகனும்னு நௌச்சி அப்படி ஆனவுங்க இருக்காங்க. அம்புட்டு ஏங்க, வைஜெயந்தி ஐ.பி.எஸ். பாத்துட்டு எத்தன பொம்பளப் புள்ளைக போலிசாயிருக்காங்க. இப்படி உருவாக்கறது எப்படியிருக்கு. அதவிட்டுட்டு..., கட்டப்பஞ்சாயத்து..., மொளகா..., எல்லையம்மன்னுட்டு.....

மனுசனாப் பொறந்தா, கொஞ்சமாச்சும் சமூகப் பொறுப்பு வேணும். அது யாராயிருந்தாலும் சரி. கட்டுறது வேசமா இருந்தாலும், அதுலயும் ஒரு கவுரத வேணா. காசு குடுத்தா எந்த வேசமாயிருந்தாலும், அது எப்படியிருந்தாலும் நடிச்சிடுறதா? காலங்காலமா அவுக மட்டுமே ஒக்காந்து வந்த பதவிகள்ல நம்ம புள்ளைகளும் ஒக்காரணும்னு,  மகாத்மா பூலே, அய்யா பெரியாரு, அம்பேத்கரு மாதிரி எத்தனையோ தலைவருங்க அரும்பாடுபட்டாங்க. தள்ளாத வயசுலயும் பம்பரமா சுத்துறாரே நம்ம ஆனைமுத்து அய்யா, எதுக்கு? நம்ம தலைமுறைகளும் கலெக்டரு, ஜட்ஜுன்னு பெரிய பெரிய பதவிகள்ல ஒக்காந்து நம்ம இனத்த ஒசத்தனும்னுதான.

சில கருங்காலிங்க இப்படி முட்டாத்தனமா செஞ்சா, அந்தப் பதவி மேல எப்புடிங்க மருவாத வரும். இருகோடுகள்னு ஒரு படம். அதுல சவுகார் சானகி அம்மா கலெக்டரா வருவாங்க பாருங்க... அடேயப்பா...என்ன மிடுக்கு, என்ன அதிகாரம்.. அதப் பாக்குற நமக்கு, ஆனா இப்படி ஒரு கலெக்டராகனுண்டான்னு தோணும். அதே மாதிரி, நம்ம கலைஞர் அய்யா கதை, வசனம் எழுதுன பாலைவன ரோசாக்கள் படத்துல லட்சுமி நடிச்ச கலெக்டர் வேசம்..அடடா..நேர்மைக்காக எத்தன சோதனைகள தாங்குவாங்க தெரியுமா...அதே படத்துல பத்திரிக்கக்காரரா வர்ற சத்தியராசு மாதிரி, உண்மையத் தயங்காம எழுதுற பேனாவக் கையில புடிக்கனும்னு ஆச வரும்.

மக்கள எழுப்பி முழிக்க வச்சாத்தான் அது கலை; இல்லைன்னா சமூகக் கொலை. அது எந்த வடிவத்துல இருந்தாலும் சரி. சனங்கள முட்டாளாக்குற கலை தேவையில்ல.