jayalalitha 299

தயங்கி நின்ற கர்நாடக அரசு, சரியான முடிவை எடுத்துள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் இரண்டு நீதிமன்றங்களும், இரண்டு விதமான தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றன. எனவே, இது இயைபுநிலைத்(concurrent judgement)) தீர்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் மேற்முறையீட்டுக்குச் செல்வதென்பது மிக இயல்பான ஒன்றாகும்.

மேலும் வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. சாதாரணக் கணக்குப் பிழையில் தொடங்கி, மிகப் பெரிய சட்ட நுட்பங்களை உள்ளடக்கிய பிழைகள் வரையில், அனைத்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கைப் பொறுத்தளவு, வெறுமனே மேல் முறையீடு செய்வது என்பதற்கு முந்தைய கட்டமாக, வழங்கப்பட்டுள்ள  உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை கோரப்பட வேண்டும்.

அவ்வாறு தடை கோரப்பட்டு அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமாயின், உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பு வரும்வரை மீண்டும் ஜெயலலிதா குற்றவாளியாகவே கருதப்பட்டு மீண்டும் பதவி இழக்க நேரிடும்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவசரப்பட்டு, வரும் ஜூன் 27ஆம் தேதி சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவது மக்கள் வரிப்பணத்திற்கு ஏற்படுத்தப்படும் இன்னொரு பேரிழப்பு என்றே கருதத் தோன்றுகிறது. 2001இல், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தபிறகும்கூட, உடனே முதல்வராகப் பதவி ஏற்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின்பே அப்பதவியை ஏற்றார். ஆனால் இப்போது முதல்வராகப் பதவி ஏற்றதில் அவர் காட்டிய வேகம் அல்லது பதற்றம் பல்வேறு விதமான ஐயங்களுக்கு இடம் அளிக்கிறது.

ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு, 43 நாள்களுக்குப் பிறகுதான் திருவரங்கம் தொகுதி காலியாக இருக்கிறது என்று சட்டப் பேரவை செயலாளர் அறிவித்தார். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் 17ஆம் தேதி காலையில், தன் பதவியில் இருந்து விலகினார். அன்று மதியமே, அதனை அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டார். மாலையிலேயே செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். அனைத்தும் ஒரே நாளில் 17ஆம் தேதி நடந்து முடிந்தது. அந்தப் பதினேழாம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தனை விரைவுக்கும் காரணம், கர்நாடக அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லாது என்று ஜெ. தரப்பு நம்பிக் கொண்டிருந்ததுதான் என்று கூறுகின்றனர்.

ஜூன் 1ஆம் தேதி அந்த நம்பிக்கையில் இடி விழுந்துவிட்டது.

Pin It