உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு, முன்னுரிமையோடு, இடஒதுக்கீட்டையும் இணைத்துக்கொண்டு சட்ட முன்வடிவாக அறிமுகமாகி இருக்கிறது.

தமிழ் மொழி மூலம் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். தமிழக ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, செப்டம்பர் 7 ஆம் தேதியிட்ட அரசிதழில் வெளிவந்த, தமிழ் மொழி மூலமாகப் படித்த நபர்களை, அரசின் கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்தல் அவசரச் சட்டத்திற்குப் ( தமிழ் நாடு அவசரச்சட்டம் 3/2010 ) பதிலாக இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட இருக்கிறது.

தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா, தமிழ்வழிக் கல்வி சோறு போடுமா என்றெல்லாம் அறிவு நாணயமற்றுப் பேசியவர்களுக்கும், எழுதியவர்களுக்கும், இந்தச் சட்டமுன் வடிவு அறிவிப்பின் மூலம் தகுந்த விடை சொல்லி இருக்கிறார் முதல்வர் கலைஞர்.

தமிழ்நாட்டில், தமிழ் வழியில் படிப்பவர்கள்தான் அதிகம். தமிழ் ஒரு அறிவியல் மொழி, கணினி மொழி என்று உலக அளவில் உரத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழ் வழியில் பொறியியல் கல்வியினைத் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. தொடக்க ஆண்டிலேயே அதிகமான மாணவர்கள் அதில் சேர்ந்திருக்கின்றனர். இவை எல்லாம் பெற்றோர்களின் தயக்கங்களைத் தகர்த்தெறிந்து,தமிழ் வழிக்கல்வியின் பால் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்நிலையில் இந்த அறிவிப்பு, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த 20% இடஒதுக்கீடு என்பதை அரசு வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, தனியார் துறைகளிலும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இதனால், வளைகுடா நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் நிலை மாறும். வெளிநாட்டு வேலை மோசடிக்கும் இடமின்றிப் போகும்.

1938 இல் தொடங்கிய மொழிப்போர் இன்னும் முடிந்துவிடவில்லை. ஓலைச் சுவடியில் தொடங்கி ஒருங்குறி வரை தமிழின் தனித்தன்மையை அழிக்க,உச்சிக் குடுமிகள் ஊளையிட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இந்தச் சூழலில் கலைஞரின் தலைமையிலான தமிழக அரசின் இந்த இடஒதுக்கீடு, மொழி காப்புப் போரில் மற்றொரு கவசமாகும். நீண்ட காலமாகத் தமிழ் அறிஞர்களும், தமிழுணர்வாளர்களும் எழுப்பி வந்த கோரிக்கை, இன்று இடஒதுக்கீட்டோடு நிறைவேற இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்குத்தான் அதை வரவேற்கக் கூட மனம் வரவில்லை. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற அதே நேரத்தில், அதன் நல்ல திட்டங்களை மனந்திறந்து வரவேற்பதுதான் நேர்மை என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

தமிழக அரசின் இந்த சட்டமுன்வடிவு விரைவில் சட்டமாக வேண்டும். எல்லாத் துறைகளிலும், மக்கள் நலத்திட்டங்களிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் முன்னோடியான மாநிலம் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறது கலைஞரின் அரசு.