கடந்த செப்டம்பர் 7 ஆம்நாள், தில்லி உயர்நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்பு மிக்க, தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அபூர்வா என்பவரும், இன்னொரு மாணவரும், இந்திய அரசுக்கு எதிராகவும், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

நேரு பல்கலைக்கழகத்தில், ஸ்பானிஷ் மொழியில் பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பதற்காக அபூர்வாவும், எம்.பில். பட்ட வகுப்பில் சேர்வதற்காக இன்னொரு மாணவரும் விண்ணப்பித்திருந்தனர். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC)) சேர்ந்த அவ்விருவருக்கும், இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் தருவதற்குப் போதுமான தகுதி இல்லை என்று கூறிப் பல்கலைக்கழகம் அவர்களின் விண்ணப்பங்களைப் புறக்கணித்துவிட்டது. அதனை எதிர்த்தே அவர்கள் வழக்குத் தொடுத்திருந்தனர்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்னும் 93 ஆவது சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றம் 2006 இல் (Central Educational Institutions (Reservation in Admissions) Act 2006) கொண்டுவந்தது. அதன் அடிப்படையில்தான் அம்மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

எனினும், அப்பல்கலைக்கழகம், அச்சட்டத்தில் உள்ள தகுதி என்பதற்குப் புதுவிளக்கத்தை (Interpretation) அளித்து, அனுமதி மறுத்துவிட்டது.

பொதுப்போட்டிக்கான (OC) மாணவர் சேர்க்கைக்கான தகுதி 50% என்றால், பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40% போதும் என்பதே விதி. ஆனால் பல்கலைக்கழகமோ, தகுதி, மதிப்பெண் வரம்பு என்னும் இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பியது. பொதுப்போட்டியில் தேர்வு பெற்றுள்ள மாணவர்களில் கடைசியாகச் சேர்க்கப்பட்டுள்ள மாணவரின் மதிப்பெண்ணிலிருந்து (Cut off mark), 10 விழுக்காட்டைக் கழித்து, அதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான தகுதி என்று கூறியது. அதாவது, பொதுப்போட்டியில் 90% மதிப்பெண்கள் பெற்றவர்தான் கடைசி மாணவர் என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கு 80% மதிப்பெண் வேண்டும் என வரையறுத்தது. இந்த மதிப்பெண் வரம்பு என்பது, ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது. இந்த ஆண்டு 90% என்றால், அடுத்த ஆண்டு அது 92% ஆகக் கூடலாம், 85%ஆகக் குறையவும் செய்யலாம். ஆனால் தகுதி மதிப்பெண் என்பதோ என்றும் நிலையானது.

இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கக்கூடிய இந்த நிலையை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, தில்லி உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ராஜீவ் சகாய் முன் வந்தது.

பல்கலைக்கழகத்திற்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மொகிந்தர் ரூபால், செல்வி ப்ரீத்தா ஆகியோர், இடஒதுக்கீட்டிற்கு எதிராக, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, அசோக்குமார் தாக்கூர் என்னும் ‘மேல்சாதி’ மாணவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை எடுத்துக் காட்டினர். ஆனால் அந்த வழக்கோ, உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நீதிபதி ராஜீவ் சகாய் வழங்கிய தீர்ப்பிலிருந்து சில பகுதிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

பல்கலைக்கழகத்தின் அணுகுமுறையும், அதற்கு இந்திய அரசு வழங்கும் ஒப்புதலும், இடஒதுக்கீட்டுச் சட்டம் எந்த நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தையே தோற்கடித்துவிடும் என்கிறார் நீதிபதி. பல்கலைக்கழகம பின்பற்றியுள்ள முறை மோசமானது என்றும் அவர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

பொதுவகைப்பாட்டின்கீழ் உள்ள மாணவர்களின் போட்டியிலிருந்து, பலவீனமான வகைப்பாட்டின்கீழ் உள்ள மாணவர்களைப் பாதுகாப்பதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கமாகும் என்று தெளிவாக விளக்கியுள்ள நீதிபதி, இறுதியாக மாணவர்களின் மனுவை ஏற்றுக்கொண்டு, ஒரு வாரத்திற்குள் அவர்களைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறுவதற்கு, நாம் எவ்வளவு விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது என்பதையே இவ்வழக்கு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

(கலைஞர் தொலைக்காட்சியில், ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ பகுதியில், 08.11.2010 அன்று தோழர் சுபவீ ஆற்றிய உரை)