நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா, பெரும் போராட்டங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது.

நூறாவது ஆண்டு மகளிர் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 9 அன்று, நிறைவேறிய அம்மசோதாவுக்கு ஆதரவாக 189 உறுப்பினர்களும் எதிராக ஒருவரும் வாக்களித்துள்ளார்கள்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, மாநிலங்கள் அவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் அம்மசோதாவைக் கிழித்து எறிந்து, அவை மரபுக்கு மாறாக ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த வீர்பால்சிங், நந்தகிஷோர்,அமீர் ஆலம்கான், கமல்அக்தர், சுபால் யாதவ், சபீர் அலி, லோக் ஜனசக்தி இஜாங்அலி ஆகிய 7 உறுப்பினர்கள் அவை இடைநீக்கம் செய்யப் பட்டார்கள்.

தொடக்கத்தில் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த திரிணாமுல் கட்சி உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது அவையைவிட்டு வெளி யேறிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்விரு கட்சிகளின் தலைவர்கள் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய இரு பெண்களும், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்கு முகம் சுழித்திருக்கிறார்கள் என்பதுதான்.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு இப்படி ஓர் எதிர்ப்பு ஏன் எழவேண்டும்?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா இப்பொழுதுள்ள பொதுவான நிலையில் நிறைவேற்றப்பட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த, இஸ்லாமியப் பெண்கள் பெரிதும் பின்தள்ளப் படுவார்கள். ஆகவே அவர்கள் முன் உரிமை பெறும் வகையில் உள் ஒதுக்கீடு செய்யவேண் டும். அவ்வாறு இல்லாமல் இம்மசோதா நிறைவேறக் கூடாது என்று லாலுபிரசாத் யாதவும், முலாயம்சிங் யாதவும் கூறுகிறார்கள்.

இவர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். கட்டாயம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

இன்னொருபுறம் இம்மசோதா குறித்துத் தங்களிடம் கலந்து பேசவில்லை என்று ஒரு நொண்டிச் சாக்கைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் மாயாவதியும், மம்தாவும்.

இங்கே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய செய்திகளை இவர்கள் ஏன் சிந்திக்க மறந்து போனார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆரிய வர்ணாசிரமத்தாலும், ஆணாதிக்கத்தாலும், அழுத்தப் பட்டு, நொறுக்கப்பட்டு ஓர் அடிமைச் சமூகமாக இருக்கிறது பெண்சமூகம். வீட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்யும் வேலைக்காரியாகவும், சமூகத்தில் ‘பொட்டச்சிதானே அவள்’ என்று பேசுமளவுக்கும் இருப்பவர்கள் பெண்கள். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூகத் தளங்களில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவர்கள் பெண்கள். இதை ஊரறியும், நாடறியும், நாமும் அறிவோம்.

இப்படிப்பட்ட சமூக ஒடுக்கு முறைகளில் இருந்து, இன்று, பெண்கள் முன்னேறத் தொடங்கி இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரித் தேர்வு முடிவுகளில் பெண்களின் தேர்ச்சி, ஆண்களின் தேர்ச்சி விழுக்காட்டை விட அதிகம்.

அலுவலகங்களில் ஆண்களுக்கு இணையாக செயலாற்றுவதில் பெண்கள் சளைக்கவில்லை. தரையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதில் இருந்து, விண்வெளியில் பறக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் அப்படி அவர்களின் திறமைகளும், அறிவும், நுட்பமும் கண்கூடாகத் தெரிந்தும் கூட, ஆணாதிக்கம் அவர்களை விட்டு அகலுவதாக இல்லை. சமத்துவம் என்பது பேச்சளவில், எழுத்தளவில் -நடைமுறையில் இல்லை. அதனால் சமூகநீதி அடிப்படையில்கள் பெண்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் அவர்கள்.

அப்படி அவர்களின் திறமைகளும், அறிவும், நுட்பமும் கண்கூடாகத் தெரிந்தும் கூட, ஆணாதிக்கம் அவர்களை விட்டு அகலுவ தாக இல்லை. சமத்துவம் என்பது பேச்சளவில், எழுத்தளவில் -நடைமுறையில் இல்லை. அதனால் சமூகநீதி அடிப்படையில் பெண்களுக் கான உரிமைபற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அதன் விளைவாக 1974 ஆம் ஆண்டு, மத்திய கல்வி மற்றும் சமூகநலத்துறை அமைச் சகத்திடம், பெண்கள் நிலைகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில், முதன் முதலாக நாடாளு மன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தில் 73,74 ஆம் சட்டத்திருத்தங்கள் மூலம் ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையும் உருவானது.

பின்னர் 81 வது அரசமைப்புத் திருத்த மசோதாவாக முதன்முதலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா செப்டம்பர் 12 ஆம் நாள் 1996 ஆம் ஆண்டு, 11 ஆம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது பிரதமர் தேவகவுடா. அன்று மகளிர் மசோதா நிறைவேறவில்லை.

அடுத்த மூன்று மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிந்துரையின்படி டிசம்பர் 6, 1996 ஆம் நாள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 1998 ஜுலை 13 ஆம் நாள் 12 ஆம் மக்களவையில் மகளிர் மசோதா தாக்கல்செய்த போது, ராஷ்ட்ரிய ஜனதாதள உறுப்பினர் சுரேந்திரபிரசாத் யாதவ் மசோதாவைக் கிழித்தெறிந்தார்.

1999 ஆம் ஆண்டு 13 ஆம் மக்களவையிலும் எதிர்க்கட்சியினரின் அமளியால் இம்மசோதா நிறைவேறவில்லை.

2003 ஆம் ஆண்டு இருமுறை இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் இதே நிலைதான் நீடித்தது.

2005 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் உமாபாரதி உட்பட சிலரின் எதிர்ப்பால் அப்போதும் வழிஇல்லாமல் போயிற்று.

2009 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இம்மசோதாவை நிறைவேற்றப் பரிந்துரை செய்திருந்தது. 2010 பிப்ரவரி 25இல் இம்மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இறுதியாக மார்ச் 8 ஆம்நாள் இம்மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவையில், மறுநாள் இம்மசோதா நிறைவேறியிருக்கிறது.

மகளிர் பிரதிநிதித்துவம் என்று முதன் முதலாகப்பேசப்பட்ட 1974 முதல் 36 ஆண்டுகளாக ; முதன் முதலாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட 1996 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்ப்பு எதிர்ப்பு என்று இம்மகளிர் மசோதா நிறைவேறாமலேயே போயிற்று என்பது பெரிய தலைகுனிவு. எதிர்க்கட்சியினர் சிலர் உள்ஒதுக்கீடு கேட்பது நியாயமானது. அதை அனைத்து அரசியல் கட்சியினரும் ஏற்று ஒருமனதாக நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யக் கட்சிகள் தயாராக இல்லை. ஆகவே இன்றைய நிலையில் பொது மசோதாவாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையயல்லாம் பார்க்காமல், சிந்திக்கா மல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிச் சொல்லி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேறாமல் பார்த்துக் கொள்ளுவது என்ன நியாயம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் “பெண்களுக்கு இருந்த சமத்துவமற்ற நிலை மாறி, சமத்துவத்திற்கு வழி பிறந்திருக்கிறது” என்று இம்மசோதா நிறைவேறியதை வரவேற்றுச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இம்மசோதா எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் மக்களவையில் தாக்கல் செய்யப் படும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அடுத்து வரும் செய்திகள் சட்ட முன்மொழிவைத் தாக்கல் செய்வதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தைக் கிளப்புகிறது. தடைபல கடந்தேனும் அச்சட்டம் நிறைவேறும் என்ற ஆவலோடு நாடு காத்திருக்கிறது.

- எழில்.இளங்கோவன்