ஆயிரமாண்டுகாலத் தீண்டாமையை ஐந்தே நிமிடங்களில் குறுகத் தரித்த குறள்போலக் காட்சிப்படுத்துகிறது வறண்ட விழிகள் என்னும் குறும்படம்.

காக்கைகள் கரையும் ஒலியுடன், வேலிக்கருவை மரங்களுக் கிடையே ஆங்காங்கே தென்படுகின்றன சில குடிசைகள். அந்த முள்ளுக் காட்டுக்குள் நெளிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் செருப்பில்லாத கால்களுடன் ஓரு சிறுமி தண்ணீர்க் குடம் சுமந்துகொண்டு போகிறாள். பள்ளிக் கூடம் முடிந்து வந்து, வீட்டுக்குத் தேவையான தண்ணீரை எடுக்கிறாள் என்பது அவள் அணிந்திருக்கும் பாதிச் சீருடையில் தெரிகிறது.கொண்டுவந்த தண்ணீரைக குடிசைக்கு வெளியில் இருக்கும் ஒரு பாத்திரத் தில் ஊற்றி, கொஞ்சம் பாத்திரங்களை விளக்கிக் கழுவி வைத்துவிட்டு, காலியான குடத்துடன் மீண்டும் தண்ணீர் எடுக்கச் செல்கிறாள். குடிசையின் வாசலில் வயதான பெரியவர், ஆண்டைமார்களின் துணிமணிகளுக்குப் பெட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் அழுக்கு மூட்டையைச் சுமந்து வருகிறார். இந்தக் காட்சிகளே அவர்களின் சமூகப்படிநிலையைப் படம் பார்த்துக் கொண்டிருப் பவர்கள் புரிந்து கொள்ள, போதுமான வைகளாக உள்ளன.

தண்ணீர் எடுக்கச் செல்லும் அந்தச் சிறுமி, குடத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தும், குடத்தைக் கொண்டு, இருபுறமும் வளர்ந்துள்ள வேலிக்கருவைச் செடிகளை அடித்து விளையாடிக் கொண்டும் நடக்கிறாள். துருதுருவென்று துள்ளல் நடைபோட்ட அவளுடைய கால்களின் வேகம் திடீரென்று குறைகிறது. அய்யோ கொடிய வி­ப்பாம்பு ஏதேனும் வழியில் குறுக்கிட்டுவிட்டதோ என்று நாம் பதறுகின்றபோதே, பெரியபெரிய வீடுகள் இருக்கின்ற ஊரின் தெருவுக்குள் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி நுழைகிறாள். முள்ளுக்காட்டிற்குள்கூடத் துள்ளிக் கொண்டுவந்த பிள்ளை, ஊருக்குள் நுழைய அச்சப்படுகின்ற நிலை.

தயங்கித் தயங்கி குழாயடியில் வந்து குடத்தைத் தன் உடலுடன் இறுக்கிப் பிடித்தபடி நிற்கிறாள். ஒரு குடத்தில் தண்ணீர் விழுந்துகொண்டிருக்கிறது. அருகில் யாரும் இல்லை. இதோ நிறைந்தும் விட்டது. யாராவது குடத்தை எடுக்க வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறாள். எவரும் வருவதாகத் தெரியவில்லை. தண்ணீர் நிறைந்து வழிந்துகொண்டே இருக்கிறது. வெறித்த கண்களுடன் வழிந்தோடும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அந்தச் சிறுமி.

வறண்ட விழிகளுடன், கனத்த இதயத்துடன் காத்திருக்கிறோம்.... என்ற வரிகள் திரையில் தோன்ற படம் முடிகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா எனச் சொல்லிவிட்டு, சாதிக்கொடுமைகளை மட்டுமே பரிசளிக்கிறீர்களே !

தீண்டாமை ஒரு பாவச் செயல் எனச் சொல்லிவிட்டு, தீயைவிடக் கொடூரமாய்த் தீண்டாமையால் சுடுகிறீர்களே!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனச் சொல்லிவிட்டு, பிறப்பில் பேதம் காட்டிப் பிஞ்சுகளை வெம்பச் செய்கிறீர்களே!

இது நியாம்தானா எனக் கேட்பதுபோலத் தோன்றுகிறது அந்தச் சீருடைச் சிறுமியின் வெறித்த “வறண்ட விழிகள்”.

சிறுமி யாழினியின் மிகைப்படுத்தல் இல்லாத இயல்பான நடிப்புக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். காட்சிகளே கதை சொல்லும் சாட்சிகளாகக் காட்டியிருக்கும் இயக்குனருக்கு நம்முடைய சிறப்பான பாராட்டுக்கள்.