chokkalingam

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன மாதிரி, ‘மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடா’த்தான் இந்த ஒலகம் இன்னைக்கும் இருக்கு. இல்லன்னா, நடுமண்டையில நச்சுன்னு ஆணி அடிக்கச் சொல்லுமா மனுச புத்தி? சொல்லி யிருக்கே! போதையில பொலம்பிட்டுக் கெடந்த சொக்கலிங் கத்துக்குப் பேய் பிடிச்சிருக்குன்னு, ஒரு மந்திரவாதி முன்னாடி கொண்டுபோயி நிறுத்துறாங்க. திருநெல்வேலி டவுனச் சேந்த அவருக்கு வயது 60. தில்லானா மோகனாம்பாள் படத்துல, நம்ம பாலையா ஐயா சொல்றாப்ல, பாவம் பித்த ஒடம்பு போலருக்கு, போதை அதிகமாயி, சொக்கலிங்கத்த தூக்கிடிச்சி. இது புரியாம, பேய ஓட்றம் பேர்வழின்னு, துருப்பிடிச்ச 3 இஞ்ச் ஆணிய, போதையில இருந்த சொக்கலிங்கத்தோட நடு மண்டையில வச்சி, சுத்தியலால அடிச்சி இறக்கிட்டாப்ல. அது போயி மூளையைக் குத்திக் குதறி, ரத்த ஓட்டத்த தடுத்துட்டதால, பக்க வாதம் வந்து, ஒரு பக்க ஒடம்பு ஒச்சமாப் போச்சி. அதுக்கப்புறம், பாளையங்கோட்ட கவருமெண்டு ஆசுபத்திரியில மந்திரவாதி அடிச்ச ஆணிய மருத்துவருங்க புடுங்கிப் போட்டு வைத்தியம் பாத்தப்பொறகு, சிறுக சிறுக ஒடம்பு தேறிட்டு வருதாம். இது ரெண்டு வாரத்துக்கு முன்ன (04.07.2014) பத்திரிகையில வந்த சேதி. வராதது எம்புட்டோ...?

ஒரு பக்கம் நம்பவே முடியாத அளவுக்கு அறிவியலோட வளர்ச்சி அதுபாட்டுக்கு ஒசர ஒசர போயிட்டு ருக்கு. இன்னொரு பக்கம், பேயி, பிசாசு, பில்லி சூனியம்னு பாதாளத்துல விழுந்துட்டிருக்கு. செவ்வா கெரகத்துல போயி குடும்பம் நடத்த முடியு-மான்னு ஆராய்ச்சி பண்ணிட்டே, செத்துப்போன அப்பத்தா கூட பேசனுமா... வாங்கன்னு வெளம்பரம். எங்க அப்பத்தா, எங்கூட பேசாம, ஏன் ஓமூலமா பேசனும்? எங்க ரெண்டுபேருக்கும் எதாச்சும் ஜென்ம சண்டையா? கேட்டா, மீடியம்னு சொல்லி மக்கள  மடையங்களாக்குறது.

அறிவியல்னு சொல்லியே அடிமுட் டாள்தனமான காரியத்துக்கெல்லாம், மக்கள தலையாட்ட வச்சிடுறாங்க. காலையில டிவி பொட்டிய தொறந்தா, எல்லா சேனல்லயும், யாரோ ஒரு ஜோசியர், வடக்க சூலம், தெக்க மூலம்னு அள்ளிவிட்டுட்டுருக்காரு. அதுக்கப்புறம், ‘பெயரியல் பேராசான்’கள் வருவாங்க. அம்மா, அப்பா வச்ச பேருல இருந்து, ஒரு எழுத்த உருவியோ இல்ல சொருகியோ, பேர மாத்தி, அடுத்த பில்கேட்சு நீதான்னு புளு கிட்டு, பணத்தயும் பு-டுங்கிட்டு அனுப் பிடுவான். நம்மாளு, அத அப்பிடியே அச போட்டுக் கிட்டே விட்டத்தப் பாத்துட்டு ஒக்காந் துட்ருப்பாரு. இதுலயும் விதவிதமா ஏமாத்துறாய்ங்க... ஒருத்தரு, போர்டுல எழுதிப் போட்டு தலயெழுத்த அழிப்பாரு, ஒருத்தரு கம்ப்யூட்டர்ல ரெண்டு தட்டு தட்டி ஒருவழி ஆக்கிடுவாரு... இன்னொரு அம்மா கையில நெறய சீட்டுக்கட்ட வச்சிட்டு... குறிகேட்டவரோட வாழ்க்கைய அப்படியே கலச்சிப் போட்டு நேராக்கிரும்...இப்பிடி விதவிதமா....

அப்புறம் ராசிக்கல்லு மோதிரம்... அஞ்சு விரல்லயும் அஞ்சு விதமான கல்லு பதிச்ச மோதிரம். தங்கத்துலதான் போடணும்னு கட்டாயம் இல்ல. ஏன்னா... தங்கம் விக்கிற வெலயில... தங்கத்துலதான் போடணும்னு கண்டிசன் போட்டா, கல்லு விக்கிறது எப்பிடி. கல்ல வித்து கல்லா கட்டணும்... அம்புட்டுத்தேன்!

வேட்பாளர தேர்ந்தெடுக்க சாதகம்... எத செஞ்சாலும் ஒம்போதுல இருக்கற மாதிரி பாத்துக்கணும்... தீர்மானம் உள்பட, கோட்டையில கொடியேத்துற நேரத்தக்கூட மாத்தணும்...னு, கான்வென்ட் படிப்பே கன்னா பின் னான்னு யோசிக்கிறப்போ... மத்தவங்கள என்னத்த சொல்ல? புதையல் எடுக்கிறேன்னு பச்சப்புள்ளைங்கள கடத்திட்டுப் போயி, நரபலிங்கற பேர்ல, துடிதுடிக்கக் கொன்னுபோடுற கொடு மைய, ‘வெங்காயம்’னு ஒரு படம் அப்பிடியே தோலுரிச்சிக் காட்டுச்சி. என்னத்தக் காட்டி என்ன செய்ய, முட்டாள்தனத்துக்கு வேற வேற மூளையா இருக்கு?

நேத்திக்கடன்னு சொல்லி, தலையில தேங்காய ஒடைக்கிறது, குழியில கொழந்தயப் போட்டு எடுக்கிறதுன்னு மூடநம்பிக்கையோட எல்லைக்கு அளவே இல்லாம போச்சி. எத்தன ஆண்டுகளா... எத்தன போராட்டம்...எவ்வளவு பிரச்சாரம்....-? ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகள் எல்லாமே, காலத்துக்குத் தக்கமாதிரி, புதுசு புதுசா மாறிக்கிடுது.

மொத்தத்துல மூடநம்பிக்கைகள் மனுசங்களோட மூளைய கொதறிட்டு இருக்கு.

மகாராட்டிரா மாநிலத்துல மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்துருக்காங்க. நரேந்திர தபோல்கர், பல ஆண்டுகளா போராடினதோட பயனா, 2013ஆவது ஆண்டு அந்த சட்டத்தக் கொண்டு வந்தது மராட்டிய அரசாங்கம். ஆனாலும், இன்னிய தேதி வரைக்கும் தபோல்கர கொன்ன குற்றவாளிகள கண்டுபிடிக்க முடியல. புனே, போலீஸ் கமிஷனர் என்ன பண்ணாருன்னு தெரியுமா... மந்திரவாதியக் கூப்பிட்டு, குறி கேட்டாராம்.  எதுக்கு? மந்திர தந்திரங்கள ஒழிக்கணும்னு ஓயாம போராடி, சமூக விரோதிகளால யாரு சுட்டுக்கொல்லப்பட்டாரோ... அந்தப் பகுத்தறிவுவாதி தபோல்கர கொன்னது யாருன்னு, மை போட்டுப் பாக்கச் சொல்லிக் கேக்கிறாராம் புனே மாநிலத்தோட போலீசு கமிசனரு. இது எப்பிடி இருக்கு?