“என்னைத் தனியா இழுத்துட்டுப் போனதும் டி. சி. ஜெயஸ்ரீ... ஆவேசமா ஓடிவந்து என்னடி நினைச்சிகிட்டு இருக்கே... நீ என்னபெரிய இவளா? போலீசுக்கு டார்ச்சர் கொடுப்பதே உனக்கு வேலையாப் போச்சு. . உன்னாலதான் மதுரையில் ஈழப்பிரச்சினை பெரிசா ஆச்சு... உன்னையும் ஆயிஷாவையும் அடிச்சி உதைச்சி ஜெயில்ல போட்டோமே... அப்படியும் உன் கொழுப்பு அடங்கலைடீன்னு கேவலமா திட்டியதோட என் துப்பட்டாவைப் பிடிச்சி இழுத்து, ஓங்கி என் கன்னத்தில் பட்டுனு அறைஞ்சாங்க. அப்ப திமிராம இருக்க பெண் போலீசோடு சேர்ந்து ஆண் போலீசும் என்னை அழுத்திப் பிடிக்க... உனக்கு இவ்வளவு திமிராடீன்னு சொல்லிகிட்டே பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் கையிலிருந்த தடியைப் பிடுங்கி, என்னை எட்டி உதைச்சி கீழே தள்ளி... கண்மூடித் தனமா அடிச்சதோட... இவளை அடிச்சிக் கொல்லுங்கடீன்னு காட்டுக் கூச்சல் போட அதைக் கேட்டு மத்த காக்கிகளும் என்னை சுத்திவளைச்சு கம்பால் அடிச்சாங்க. ”

மதுரை மாநகரத்தின் காவல்துறை இணை ஆணையரான பெண் காவல் அதிகாரி ஜெயஸ்ரீ எப்படித் தன்னிடம் நடந்து கொண்டிருக்கிறார் என்று, மதுரை சட்டக்கல்லூரி மாணவி அகராதி அளித்துள்ள வாக்குமூலமே இது. அதனை நக்கீரன் இதழ் (2009 நவ. 11) மிகத் தெளிவாகப் பதிவு செய்து இருக்கிறது.

மாணவர்களின் உரிமைக்காக, இன உணர்வு மேலோங்க சக மாணவர்களை ஒன்று திரட்டியிருக்கிறார், மாணவப் போராட்டங்களை நடத்தி இருக்கிறார் அகராதி. இது தவறா? இது தேசவிரோதச் செயலா? அல்லது அவர்கள் தீவிரவாதிகளா?

மாணவர்களின் போராட்டம் என்றால் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நோக்கத்தைப் பரிசீலனைக்கு எடுத்து அமைதித் தீர்வு காணவேண்டிய கடமை களத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு இருக்கிறது. மாணவியை அடிப்பதும், தரக்குறைவாகப் பேசுவதும், பிரச்சினை பெரிதாகிவிட்டால், “அப்படிஎந்தச் சம்பவமும் நடக்கலையே, நான் அந்த ஸ்பாட்லயே இல்லையே” என்று சொல்வதும் ஓர் அதிகாரிக்கு அழகன்று!

கண்ணியம் மிக்க கடமையைக் காவலர்கள் செய்கிறார்கள் என்று தமிழக முதல்வர் சமீபத்தில் சொல்லி இருந்தார். கண்ணியமற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு ஜெயஸ்ரீ ஒர் எடுத்துக்காட்டு. அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, சட்டரீதியான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

மாணவர்கள் மட்டுமல்ல, மக்களும் நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள்.