ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையக் கூட்டம், கடந்த பிப்ரவரி 27ஆம் நாள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இலங்கை ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய  கொடுமையான போர்க்குற்றம் குறித்துத் தீர்மானத்தை ஆணையத்தின் முன் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது.

உலகறிய நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தி இருக்கிறது என்பதை வரலாறு பதிவு செய்துவிட்டது.

eelam_death_370போர் நடந்து கொண்டு இருக்கும்போது, அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்று திட்டமிட்டே, பாதுகாப்பு வளையம் அமைத்ததாகச் சொல்லி, அங்கு உயிர்ப்பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு வந்த மக்கள் மீது இரசாயனக் குண்டுகளைக் குறிபார்த்து வீசி, தமிழர்களைக் கொன்றொழித்த அரசு ‡ இலங்கை அரசு.

தமிழர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற காரணத்தினால், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசித் தரைமட்டமாக ஆக்கிய அரசு ‡ இலங்கை அரசு.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச் சந்திரன்.

2 வயதே ஆன இந்தச் சின்னஞ்சிறு மலரை அரக்கத்தனமாக, அருகில் நின்று ஐந்து குண்டுகளால் சுட்டுக்கொன்ற படத்தை இப்போது இலண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.

இந்தக் கொடூரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனிதநேய மிக்க நாடுகள் துடித்தன. மனித உரிமையாளர்கள் கொதித்தனர். உலகத்தமிழர்கள் ஒன்று திரண்டனர்.

ஆனாலும் மனித நேயத்தை மதிக்கத் தெரியாத நாடுகள் சில இலங்கைக்கு முட்டுக்கொடுக்கவும் செய்தன. இதனால், கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், தன்னையும் ஒரு மனிதன் என்று சொல்லிக் கொண்டு திரியும் ராஜபக்சே மீது, இப்போது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விட்டது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் 47. இதில் சரிபாதிக்கும் கூடுதலாக ஒன்றாவது; அதாவது 24 உறுப்புநாடுகள் தீர்மானத்தை ஆதரித்தால், தீர்மானம் வெற்றிபெறும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ் போன்ற நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்கும். சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தரலாம்.

ஆனாலும் உலகத்தமிழர்கள் பல நாடுகளையும் ஆதரவு கேட்டு அணுகிக் கொண்டு இருக்கிறார் கள்.

யாழ்ப்பாணப் பாதிரியார் பி­ப் இராயப்பா தலைமையில் 30 பாதிரியார்கள் இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இந்த 30 பாதிரியார்களும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் கள். ரோமன் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் தலைமை இடமான வாடிகன் பாதிரியார் ஒருவரே இதற்கான செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.

அதே சமயம் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க இலங்கையும் முயற்சிக்கிறது என்பதை மறுக்க முடியாது.

மகிந்த சமரசிங்க தலைமையில் ஜெனிவாவிற்கு ஒரு குழு சென்று ஆதரவு திரட்டுகிறது. இலங்கையில் குற்றவாளி என்று பதிவாகியிருந்தாலும், இனத்துரோகி என்ற காரணத்தால் இலங்கையில் அமைச்சராக்கப்பட்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் இக்குழுவில் இடம்பெற்ற ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கையின் உள் விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்றும், அப்படித் தலையிடும் இத்தீர்மானத்தை ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், அணிசேரா நாடுகள், இஸ்லாமிய நாடுகள், பொதுவுடைமை நாடுகள் ஏற்காது என்றும் இலங்கை அரசுக் கூறிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவை ஒருபோதும் நம்பக்கூடாது. இந்தியா ஒரு சுயநல நாடு. ஜெனிவா வில் இந்தியா இலங்கையை ஆதரிக்காது. இந்தியாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று இலங்கை தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின்  தலைவர் குணதாச அமரசேகா என்பவர் சொல்லியிருப்பது கருதத்தக்கது.

death_370அதே சமயம் ஈழப்படுகொலைப் போருக்கு, இந்தியா ஆயுத உதவிகளைச் செய்தது என்று இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாகச் சொன்ன நேரத்தில் கூட, மறுப்பு தெரிவிக்காத இந்தியா, அமெரிக்கா கொண்டுவந்துள்ள ஜெனிவா தீர்மானத்திற்கு என்ன நிலை எடுக்கப் போகிறது?

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்ப்பதாகவும், ஒவ்வொரு நாட்டின் மனித உரிமைகள் பற்றிய வழக்கமான ஆய்வின்போது, அந்த நாட்டைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் அண்மையில் இந்தியா கூறியிருக்கிறது.

அப்படிப் பார்க்கும்போது அடுத்த அக்டோபர் மாதம்தான் இலங்கையைப் பற்றிப் பேசமுடியும்.

இது இலங்கைக்குச் சாதகமான, ஆதரவான நிலைப்பாடு என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிகிறது.

ஈழத்தமிழர்கள் இந்தியாவுடன் இரத்த உறவு கொண்ட மக்கள் என்பதை இந்தியா உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மனிதாபிமான அடிப்படையில்கூட, ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா முனையவில்லை என்றும் கருத வேண்டியிருக்கிறது.

 ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.கழகத் தலைவர், கலைஞர் தொடர்ந்து வலியுறுத்துவதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மூலமும் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, "" ஒரு நாட்டின் மீது  தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் தீர்மானம் இது என்றும், சர்வதேச அளவில் வழக்கமான முறையில் அந்தந்தக் காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கருதுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதன் மூலம் இந்திய அரசு நேரிடையாக இலங்கை அரசை ஆதரிப்பதாக உள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமானது. இதை ஏற்க முடியாது'' என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதி, அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமரை வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகம் கட்சிவேறுபாடின்றி, ஒன்றிணைந்து தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ""இது இருநாடுகள் உறவு தொடர்பான வி­யம். இலங்கை சகோதர நாடு என்ற நட்புறவுடன் கூடிய அண்டை நாடு. இதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது'' என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சு முதல்வர் ஜெயலலிதா சொன்னதுபோல, இந்தியா இலங்கையை நேரடியாக ஆதரிப்பதாகவே அமைகிறது.

இரத்த உறவுடைய ஈழத்தமிழர்களுக்காக இந்தியா செய்ய வேண்டிய கடமையை, இன்று எந்த உறவும் இல்லாத அமெரிக்கா செய்கிறது. இதுவே இந்தியாவுக்குத் தலைகுனிவு.

அமெரிக்கத் தீர்மானத்தையாவது இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆதரிக்கத் தவறினால், அது இந்தியாவுக்கு அவமானம்.

போர்க்குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபெற்றே ஆகவேண்டும்!
வெற்றி பெறும் என்று நம்புவோம்!!
வென்றாக வேண்டும் நீதி! வீழ்ந்தாக வேண்டும் கொடுமை!!