அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்த இதழ் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்போது, தமிழர் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் கடந்து போயிருக்கும். இந்தத் தலையங்கம் எழுதும் வரை, பொங்கலுக்கான உற்சாகத்தையும், பரபரப்பையும் காணமுடியவில்லை. எப்போதும் 10 நாள்களுக்கு முன்னதாகவே, துணி விற்பனையும், கரும்பு, மண்பானை, அடுப்பு போன்ற பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு அந்தப் பரபரப்புகள் கொஞ்சம் குறைவாகத்தான் தென்படுகின்றன.

தொடரும் கூடங்குளம் பிரச்சினை, வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சினை, இதெல்லாம் போதாதென்று அடிப்படைத் தேவைகளின் விலை உயர்வு என கடந்த ஆறு மாத காலங்களில் தமிழக மக்கள் சந்தித்துவரும் நெருக்கடிகளின் எதிரொலியாகக் கூட இது இருக்கலாம்.

சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம் போட்டுள்ள, பார்ப்பன சூழ்ச்சியைத் தாண்டி, பல்வேறு தமிழ் அமைப்புகள், தை ஒன்றில் தமிழ்ப்புத்தாண்டையும், பொங்கல் விழாவையும் சிறப்பாகக் கொண்டாட அணியமாகி வருகின்றன. மகிழ்ச்சி தரக்கூடிய, பாராட்டப்படவேண்டிய முயற்சிகள்.

பொருள் பொதிந்த, முழுமையான பொங்கல் விழாக் கொண்டாட்டங்களைக் காணவேண்டுமானால் கிராமங்களுக்குப் போகவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அனைவராலும் அது முடியாது. அந்த வாய்ப்பை பெருநகரங்களில் வாழும் மக்களுக்குத் தந்தது சென்னை சங்கமம் என்று சொன்னால் மிகையாகாது. வீடியோ கேம்களுக்குள் தொலைந்துபோய்க் கொண்டிருந்த குழந்தைகளுக்கு, நம் மண்ணின் கலைகளை அறிமுகப்படுத்தியது சென்னை சங்கமம்.

பொங்கலை முன்னிட்டு, பத்துநாள்களும் சென்னையின் பூங்காக்களும், முக்கிய தெருமுனைச் சந்திப்புகளும் கிராமியக் கலைகளால் திருவிழாக்கோலம் பூண்டு நின்றக் காட்சியினை இந்த ஆண்டு காணமுடியவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞரின் மகள் கனிமொழி உருவாக்கி நடத்தியது என்ற காரணத்தினால், பாடப்புத்தகத்தில் இருந்த சென்னை சங்கமம் என்ற சொல்லையே அடித்துவிடச் சொன்ன, அக்கிரகாரத்து அராஜக ஆட்சியில், சங்கமமாவது, சமத்துவமாவது.

சென்னை சங்கமம் நடந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யும் பெரியவர் ஒருவர், "போன வருசம் இந்நேரமெல்லாம் இந்த இடம் திருவிழா மாதிரி இருந்திச்சி. இப்ப...' என்று பெருமூச்செறிந்ததைப் பார்க்க முடிந்தது. இது தனி ஒருவரின் ஏக்கமன்று. சென்னை சங்கமம் தந்த மகிழ்ச்சியினை உணர்ந்து பார்த்த மக்களின் ஏக்கம்...ஏமாற்றம்.

தமிழனுக்கென்று இருக்கின்ற ஒரே விழா தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மட்டும்தான். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கத் திட்டமிட்டு செயல்படும் திக்குதிசை இல்லா கூட்டம் இதையும் விழுங்கிவிடக் காத்திருக்கிறது. அதன் முதல் படிதான் சென்னை சங்கம் இல்லாத இந்த ஆண்டு பொங்கல் விழா. இப்புத்தாண்டு மீண்டும் சங்கமத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்.