சில பார்ப்பன ஏடுகளும், ஜெயா, கேப்டன் தொலைக்காட்சி களும், எதிர்க்கட்சிகளும், தி.மு.க. எதிர்ப்பாளர்களும், தினந்தோறும் ' ஸ்பெக்ட்ரம் ' பற்றியே பேசிக்கொண்டுள்ளனர். 1,76,000 கோடி ரூபாயை, மேனாள் அமைச்சர் ராஜா கொள்ளையடித்து, அதில் பெரும்பகுதியைக் கலைஞரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டதைப் போன்ற, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக அவர்கள் பெரும்பாடுபடுகின்றனர்.

a_rajaகடந்த நான்கரை ஆண்டு காலத் தி.மு.கழக ஆட்சியில், குறை சொல்வதற்கு ஏதும் கிடைக்காததால், 'ஸ்பெக்ட்ரம்' என்பதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்னும் நம்பிக்கையிலேயே, ' ஸ்பெக்ட்ரம் ' ஒவ்வொரு நாளும் ஊதிப்பெருக்கப்படுகின்றது.

உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. கிராமங்களில் உள்ள மக்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம், அவசர உதவிக்கு 108, நூறு நாள் வேலைத்திட்டம், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, அரசிடமிருந்து பெற்ற வண்ணத் தொலைக்காட்சி முதலியன குறித்துத்தான் பேசுகின்றனரே அல்லாமல், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை எந்தத் தாக்கத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. நகர்ப்புறம் சார்ந்த, பெரும்பாலும் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குப் போகாத, ஒரு பகுதியினர்தான் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

எனினும், உண்மை என்ன என்று விளக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அந்த அடிப்படையில் சில எளிமையான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன :

* 1993 ஆம் ஆண்டு வரை, கம்பிகளின் (Cable) மூலமே, தொலைபேசிகளில் செய்திகள் பரிமாறப்பட்டன. 94க்குப் பிறகு, கம்பிகளே இல்லாமல், அலைக்கற்றைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் கம்பியில்லா வான்பேசியும் (Wireless), செல்லிடப்பேசிகளும் (Mobile) வந்தன. அந்த அலைக்கற்றையைத்தான் ஸ்பெக்ட்ரம் என்கிறோம்.

*   இவற்றை 1G, 2G, 3G ஸ்பெக்டரம் என்று கூறுவர் (G- Generation). 1G‡ முதல் தலைமுறை, 2G ‡ இரண்டாம் தலைமுறை, 3G ‡ மூன்றாம் தலைமுறை எனப் பகுக்கின்றனர். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பேசக் கூடிய, இன்றும் காவல்துறையினர் கையில் வைத்துள்ள வயர்லெஸ்தான் முதல் தலைமுறை அலைக்கற்றை. அதாவது 1ஜி ஸ்பெக்ட்ரம். ஆனால் அதனை அவ்வாறு அழைக்காமல், ' வயர்லெஸ் ' என்றே அழைத்தனர்.

*  இப்போது நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகள், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் (  2G Spectrum ). இப்போது வந்து கொண்டிருக்கின்ற, எதிர் முனையில் பேசுகின்றவரின் படத்தையும் காட்டுகின்ற, ஏராளமான புள்ளி விவரங்களை உடனுக்குடன் தரக்கூடிய, புதிய செல்லிடப் பேசிகள், மூன்றாம் தலைமுறை அலைக்கற்றைகள் ( 3G Spectrum ).

*  மூன்றாம் தலைமுறை அலைக்கற்றைகள், இப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. எந்த நிறுவனம் கூடுதல் பணம் தருகின்றதோ, அதற்கு அந்த உரிமம் (லைசென்ஸ்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைக்கும் ஏலம் விட்டிருந்தால், பல ஆயிரம கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்திருக்கும். அப்படிச் செய்யாமல், முதலில் வருபவருக்கு முதலில் வழங்கப்படும் என்று அறிவித்ததால் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் என்று இந்தியத் தலைமைக் கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை கூறுகின்றது. இதனையே ஆங்கிலத்தில் CAG Report  என்று கூறுகின்றனர்.

*  முதலில், அது வெறும் அறிக்கைதானே ( Report ) தவிர, குற்றப்பத்திரிகை ( Charge sheet ) அன்று என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அறிக்கைகள் ஆண்டுதோறும் வெளிவந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அரசின் நடவடிக்கையால், பல கோடி ரூபாய் நாட்டுக்கு நட்டம் என்று இதே தணிக்கையாளர் அறிக்கை கூறியுள்ளது. அப்போதெல்லாம் எந்த ஊடகமும் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

*   இப்போதும், 59 பக்கங்களைக் கொண்டுள்ள CAG அறிக்கையில், எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் '    ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

*  வருவாய் இழப்புக்கு, ' ஏலம் ' விட வேண்டாம் என்று எடுத்த கொள்கை மாற்றம்தான் ( policy shift ) காரணம் என்கிறது அந்த அறிக்கை.

* அந்தக் கொள்கை மாற்றத்தை முன்மொழிந்தவர் யார்? ஏற்றுக் கொண்டவர் யார்?

*      ஒவ்வொரு துறையிலும், ஆட்சியில் உள்ள அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும். அதற்குத் தேசியக் கொள்கை ( National Policy) என்று பெயர். கல்விக் கொள்கை, உணவுக் கொள்கை, ஜவுளிக் கொள்கை எனப் பல்வேறு கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கை களை எல்லாம், அரசால் நியமிக்கப்படும், அனுபவம் உள்ள வல்லுநர் குழுவே எடுக்கின்றது.

*     தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை (  2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத் தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' (  NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர்.

*  அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படை யில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன.

*  அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99 ' என்று பெயர்.

*  எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா  தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை.

*  1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.

*   மற்ற அமைச்சர்களைப் போலவே, ராசாவும் செயல்பட்டிருக்கும் போது, ராசா மீது மட்டும் பாய்வது ஏன்?

*      முன் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையின் (  CAG Report ) முகவுரையில், ' இந்தத் தணிக்கை, 2003 ‡ 04 முதல் 2009 ‡ 10 காலத்தை  உள்ளடக்கியுள்ளது ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆ.ராசா பொறுப்பில் இருந்த 2007 ‡ 10 காலத்தை மட்டும் குறிவைத்து ஆய்வு செய்திருப்பது ஏன்?

*    வருவாய் இழப்புக்கு, TRAI என்னும் அமைப்பையோ, நாடாளுமன்றத்தையோ, அமைச்சரவையையோ குற்றம் சொல்லாமல், ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் பொறுப் பாக்குவது ஏன்?

* அந்த அறிக்கையே, வருவாய் இழப்பு பற்றிய எங்கள் மதிப்பீடு, ' உத்தேசமானதுதான்' ( Presumptive ) என்று குறிப்பிடுகிறது. மேலும், தன் முகவுரையில், நாங்கள் குறிப்பிட்டுள்ள தொகை விவாதத்திற்குரியதே ( However, the amount of loss could be debated ) என்றும் கூறுகிறது.

*   வருவாய் இழப்புத் தொகை, எப்படியயல்லாம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:‡ எஸ் டெல்        ( S Tel ) என்கிற நிறுவனத்திற்கு உரிமம் கொடுத்தது தவறு. அது சரியான அனுபவம் உள்ள நிறுவனம் அன்று. 18 கோடி ரூபாய்க்குப் பதிலாக, வெறும் 10 இலட்சம் ரூபாயைத்தான் அது ' பங்கு முதலீடாகக் ' ( Share capital ) கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகின்றது (பக்.42). ஆனால் அதே அறிக்கை, இன்னொரு இடத்தில் ( பக்.52 ), வேறு மாதிரியான ஒரு தகவலைத் தருகின்றது. எஸ் டெல் நிறுவனம், 05.11.2007 ஆம் நாளிட்ட தன் கடிதத்தில் 6000 கோடி ரூபாய் தருவதாகவும்,  பிறகு அதே நிறுவனம் 27.12.2007 ஆம் நாள் கடிதத்தில், குறிக்கப்படும் தொகையைவிட, 13,752 கோடி ரூபாய் கூடுதலாகத் தருவதாகவும் எழுதியுள்ளது. அந்தத் தொகைகளையும், அதே மாதிரி வேறு நிறுவனங்களிடம், வேறு தொகைகளையும் பெற்றுக்கொண்டிருந்தால், அரசுக்குப் பல கோடி ரூபாய் இலாபம் கிடைத்திருக்கும். அவற்றைப் பெறாததால், 53,523 கோடி ரூபாய், வருவாய் இழப்பு என்கிறது.

*    நிறுவனமே உருப்படியில்லாதது என்று கூறிவிட்டு, அந்த நிறுவனம் கொடுப்பதாய்க் கூறிய தொகையை வாங்காததால், 53 ஆயிரம் கோடிக்கு மேல் நட்டம் என்றால் என்ன செய்வது?

*    இப்படிப் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கூட்டிச் சேர்த்துத்தான், 1,76,000 கோடி வருவாய் இழப்பு என்கிறது அந்த அறிக்கை.

*    இறுதியாக ஒன்று ‡

TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது?

அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான். ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

*     1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்தால், நாட்டுக்கு வருவாய் இழப்பு இருக்கவே செய்யும். உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?

*  மக்கள் நலத்திட்டங்களில் ஏற்படும் வருவாய் இழப்பையயல்லாம், ஊழல் என்று கூறத் தொடங்கினால், சத்துணவுத் திட்டம், விவசாயிகளுக்கான கடன் ரத்து, குடிசைவீடு மாற்றுத்திட்டம் எல்லாம் ஊழல் என்றாகி விடும். மக்களைக் கொடுமைப்படுத்தும் அரசே ஊழல் இல்லாத அரசு என்று சொல்வார்களோ?

-----------------

Pin It

சில வருடங்களுக்கு முன்பு தேவதாசி முறையை ஒழித்ததில் அந்தச் சமூகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு கருத்தை மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் வாசந்தி அவர்கள் வெளியிட்டார்கள். இப்படிக் கூடப் பேச முடியுமா என்று நாம் அதிர்ந்து போனோம். மூவாளூர் இராமாமிர்தம் அம்மையாரின் தியாகங்களும், முத்துலட்சுமி அம்மையார் நடத்திய கடும் பயணமும் நமது மனக்கண்ணில் ஊர்வலம் நடத்தின. மூவாளூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கையில் ஒரு காட்சி. அந்த அம்மையாருக்கு அவரது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரே வீட்டிற்கு அழைத்து விசம் தந்து விடுகிறார். அதனை அறிந்த பின்னும், அந்தப் பெண்மணி மீது சினமேதும் கொள்ளாமல் மன்னித்து விடுகிறார் அம்மையார். நாம் மேற்கூறிய வாசந்தியின் வாசகத்தைப் படித்தபோது, அந்த விசம் கொடுத்த பெண்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள் என்று தோன்றியது. நாம் தொடர்ந்து நடத்தியாக வேண்டிய பயணம் இன்னும் தொலைதூரமிருக்கும்போது இப்படித்தான் சில கற்கள் நம்மை இருக்கும் இடத்திலேயே விழ வைத்து விடுகின்றன.

இரண்டு வருடமிருக்கும் எனக் கருதுகிறேன். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெண்கள் கலந்தாய்வு ஒன்றில் (பெண்களின் உடற்கூறு மற்றும் மருத்துவம் பற்றிய கலந்தாய்வு) பங்கேற்றபோது, ஒரு பெண்மணி, 'கழிவு இரத்தப் போக்கு' பற்றிப் பேசும்போது பண்டைய காலத்தில் ஓய்வெடுத்துக்கொள்ள அவர்களை ஒதுக்கி வைத்த சமூகம் வழி செய்தது என்றும், நாகரிக சமூகம் அந்த வெளியை எடுத்து விட்டது என்றும் வாதிடத் தொடங்கினார். அங்கிருந்த பெண்கள் அதனை உணர்ச்சிப்பூர்வமாக மறுத்திட்டனர். பழம் சமூகங்களில் அவ்வாறு பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்கள் எவ்வளவு தனிமை நிறைந்ததாகவும், அபாயம் நிறைந்ததாகவும் இருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா என்ற உணர்ச்சி மிக்க கேள்விகளில் அந்தப் பெண்மணி தனது பேச்சின் தவற்றை உணர்ந்து கொண்டார். ஏனெனில் அவரும் பெண்.

'கர்ப்பப் பை' எங்கள் உடலுக்குள், எங்கள் தோலுக்கும் சதைக்கும் கீழ் இருக்கிறது. ஆனால் சமூக வெளியில் அது எங்கள் தோலும் சதையும் கிழிந்து இரத்தம் கொட்டக் கொட்ட ஆண்களின் கைகளில் சிறையுண்டு கிடக்கிறது. பெண் வயதுக்கு வருகிறாளாம், (ஆணுக்கும் வயதுக்கும் எப்போதும் தொடர்பில்லை. அய்ந்திலும் அறுபதிலும் அவர் இராசாதானாம்) பூப்பெய்துகிறாளாம், பருவமடைவதால் தீட்டுப்பட்டு விடும் பெண்ணை இவர்கள் புனித நீரால் தூய்மைப்படுத்துகிறார்களாம். தங்கள் ஊரில் ஆறுகளும், குளங்களும் மாசுபடுவதைத் தடுக்கத் துப்பில்லாத இவர்கள் வீட்டுக்குள் பெண்ணைத் தூய்மைப்படுத்துகிறார்களாம். இந்த நிகழ்ச்சி இன்றும் வீட்டுக்கு வீடு நடந்து கொண்டிருக்கிறது. மாதவிடாய் நேரத்தில் மட்டுமன்று, இந்த சமூகத்திற்கு வாரிசு பெற்றுத் தரும்போதும் பெண் தீண்டத்தகாதவள்தான். எவ்வளவு நன்றி கெட்ட சமூகம் இது என்று சிந்தித்துப் பாருங்கள். பிறகெப்படி சமூக அவலங்கள் தீரும்?

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு'. தீண்டாமையை ஒழிக்கக் கிளம்பிய எத்தனை வீரர்கள் பெண்ணின் மீதான இந்தத் தீண்டாமை குறித்து குறைந்த பட்சம் ஒரு சில வார்த்தைகளையாவது உச்சரித்திருக்கிறார்கள்? தீண்டாமையின் மூலங்களைப் பற்றி எழுதும்போது அம்பேத்கர் இதனைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பெண்ணுக்கும், ஆணுக்குமே விடுதலை வேண்டுமென்றால் பெண்ணின் கர்ப்பப்பைக்கு விடுதலை வேண்டும் என்று முழங்கிய ஒரே தலைவராகப் பெரியார் மட்டுமே உலக வரலாற்றில் நிற்கிறார். என்ன செய்ய, அந்தத் தலைவர் தோன்றிய நமது மண்ணிலேயே, தீண்டாமை ஒழிப்பை மேடையிலே பேசுகிறவர்களே பூப்புனித நீராட்டு விழா பத்திரிகை அடித்து நம்மிடமே நீட்டுகிறார்கள். இதில் தீண்டாமைக்கு ஆளான சமூகங்களும் இப்போது புதிதாக விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

இப்படிப் பெண் மீதான தீண்டாமைக்கு அடித்தளமாக இருக்கும் மாதவிடாய் பற்றி நமது தோழர்களில் சிலரே கூடத் தவறான சில கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களின் இலக்கு  நாப்கின் தயாரித்து விற்கும் கார்ப்பரேட்டு நிறுவனங்களைத் தாக்குவது. இதிலிருந்து பினனோக்கிப் பயணித்து, இவர்கள் எந்த இடத்தில் போய் நிற்கிறார்கள் என்றால், மாதவிடாய் காலம் பெண்களுக்கு துன்பம் மிகுந்தது. அச்சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு அவசியம். எனவே பெண்களை அச்சமயங்களில் எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. அவர்கள் முன்பு போல தனியிடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு, தங்கள் இரத்த ஒழுக்கை துணி வைத்துத் துடைத்து, அதனைச் சுத்தம் செய்து காயப்போட்டு உலர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். இன்று மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக இருப்பதால், முன்பு போல் தங்களைப் பாதுகாக்க நமது முன்னோர்கள் காட்டிய வழியில் உலக்கையையும் வைத்துக் கொள்ளலாம். துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் துப்பாக்கி கார்ப்பரேட்டுகளால் தயாரிக்கப்படுவது. இவ்வாறு மாதத்தில் மூன்று நாட்களிலிருந்து ஏழு நாட்கள் வரையிலும் இருக்க வேண்டி வரும் என்பதால், பெண்கள் எல்லா வேலைகளுக்கும் செல்லலாம் என்ற முதலாளித்துவ பரப்புரையிலிருந்து விடுபட்டுப் பெண்களால் முடிந்த (ஆண்களால் மனப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட) ஆயா, ஆசிரியர் மற்றும் செவிலியர் பணிகளுக்கு மட்டும் பெண்களை அமர்த்த அரசு ஆணையிட வேண்டும். காலங்காலமாக இருந்து வருவதைப் போல விவசாயக் கூலிகளாகவும், தோட்டக் கூலிகளாகவும், வீட்டு வேலைகளுக்கும் பெண்கள் செல்லலாம். கார்ப்பரேட் விவசாய முறை அமலுக்கு வந்தால் அதன்பின் இதில் கருத்து கூறுவது பற்றி யோசிக்கிறோம்.

இந்தச் 'சிந்தனையின் பாதை எங்கே போகிறது' என்று புரிகிறதா தோழர்களே? உங்களது அனைத்துப் போராட்டங்களிலும் முதல் பலி நாங்கள்தானா? ' வர்ணாசிரமம் வேண்டும், ஆனால் தீண்டாமை ஒழிய வேண்டும்' என்று காந்தியார் சொன்னதற்கும், 'மாதவிலக்கு வேண்டும் ஆனால் தீண்டாமை வேண்டாம்' என்று நீங்கள் சொல்வதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? உங்களைப்போலவே சங்கராச்சாரியாரும், 'பாரதப் பண்பாடும் பெண்மையைப் போற்றிதானே வீட்டுக்குள் இருக்கச் சொன்னார்கள்' என்று சொன்னதற்கும், 'பெண்ணின் உடற்கூறு ஒத்துக் கொள்கிற பணிகள் மட்டும்' என்று நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

பெண்ணின் கழிவு இரத்தப் போக்கு, அது சார்ந்த உடலியல் பிரச்சினைகள், இவை குறித்த மருத்துவப்  பார்வை நமது முன்னோர்களிடமிருந்தது, முதலாளித்துவ சமூகத்திற்கு இல்லை என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள். ஆனால் உண்மையில் நமது முன்னோர் சமூகமாகட்டும், இன்றைய முதலாளித்துவ சமூகமாகட்டும் இரண்டுமே ஆணாதிக்க சமூகமாகத்தான் இருந்து வருகிறது என்ற உண்மையையும், இதில் பெண்ணின் உடற்கூறியல் பற்றிய அறிவியல் சிந்தனை மிக மிகத் தொலை தூரத்தில் இருக்கிறது என்ற உண்மையையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

முதலில் தமிழருக்கென்று சாதியம் சாராத ஒரு பொதுவான முன்னோர் சமூகத்தின் சுவடுகளை இன்று நாம் தேட இயலுமா? நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாதியம்தானே நமது முனனோர் பாரம்பரியமாக இருக்கிறது? இதில் மாதவிலக்கு நேரத்தில் வீட்டுக்குள் வராதே என்று சொன்ன நமது முன்னோர் பாரம்பரியம், மாதவிலக்கு நேரத்தில் வயற்காட்டில் களை எடுக்க வராதே என்று ஏன் சொல்லவில்லை? ஏன் விவசாயக் கூலிக்கு இரத்தப் போக்கு நிகழும்போது இடுப்பு வலிக்காதா? இல்லை உச்சி வெயிலில் களை எடுப்பதும், நாற்று நடுவதும் இரத்தப்போக்கிற்கு உளுந்தக் களி சாப்பிடுவது போல் பாராம்பரிய மருத்துவ முறைகளா?

பெண்ணின் இரத்தப் போக்கு பண்டைய சமூகத்தில் மனிதனின் அறியாமையிலிருந்து பார்க்கும்போது பல்வேறு உணர்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது. அதில் அடிப்படையான உணர்வாக அச்சம் இருந்திருக்க வேண்டும். மனிதன் எதைக் கண்டு அச்சப்பட்டிருக்கிறானோ, அதையயல்லாம் அடக்க நினைக்கிறான். எனவேதான் இரத்த ஒழுக்குடன் நின்ற பெண்ணை அவன் தனிமைப்படுத்த நினைத்திருக்கிறான். இந்தப் பயணத்தினூடே சமூகத் தலைமை பெண்ணிடமிருந்து ஆணுக்குக் கைமாறிய வரலாறும் நிகழ்ந்திருக்கிறது. நிச்சயமாக இந்தத் தலைமை திட்டமிட்ட ராக்கெட் பயணம் மாதிரி எல்லாம் நிகழ்ந்திருக்க இயலாது. எனவே பெண்ணே விரும்பி ஓய்வெடுத்திருக்கலாம் அல்லது ஆணால் ஒதுக்கப்பட்டிருக்கலாம். இதை எல்லாம் கறாராக மானுடவியல் ஆய்வாளர்களே சொல்லிவிட முடியாது.

ஆனால் இன்றைய சமகாலப் பெண்களின் அனுபவத்திலிருந்து ஒன்றை  உறுதியாகச் சொல்ல முடியும். மாதக் கழிவு இரத்தப் போக்கு நேரங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியான நிலையைத் தோற்றுவிப்பதில்லை. மாதவிடாய் நிற்கும் நேரங்களும், மகப்பேறு நிலைகளும் கூட அப்படித்தான். இது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். இதில் பொதுவாக சிறுவயதிலிருந்து நல்ல உணவு எடுத்துக் கொள்கிற, சிறுவயதிலிருந்து தனது ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்துகிற வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு இப்பிரச்சனைகள் குறைவாகவும், பொதுவாக பலவீனமாக பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட உளவியல் உள்ள பெண்களுக்கு இப்பிரச்சனைகள் அதிகமாகவும் உள்ளன. இந்தப் பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக நாம் அணுக வேண்டும். நீங்கள் சொல்லுகின்ற பண்டையச் சமூகம் உளுந்தங்களியைப் பெண்ணின் முதல் இரத்தப்போக்கு துவங்கும் போதிலிருந்து அவள் 'பிள்ளை பெறும்' வரை மட்டுமே வலியுறுத்துகிறது. ஏன் அவளுக்குத் திருமணம்  முடிந்து பிள்ளை பெறும் வரை, அவளை ஒரு தன்னல நோக்குடன் பாதுகாக்கிறது ஆணாதிக்க சமுதாயம். நமது அருந்தமிழ்ப் பண்டைய சமூகத்தைத்தான் சொல்கிறேன். ஆனால் கழிவு இரத்தப்போக்கு நின்று போன பின்புதான், பெண்கள் அதிக கால்சியமும், இரும்புச் சத்தும் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும் என்று இன்றைய மருத்துவ உலகம்தான் எங்களுக்கு அறிவுறுத்துகிறது.

தோழர்களே! இரத்தப்போக்கு நின்று, உடல் சுகமும், பிள்ளை பெற்றுத் தருவதையும் நிறுத்திய பிறகு, நாங்கள் வாழ்வதற்கான வெளியை நீட்டிப்பது குறித்து சிந்திக்கிற அறிவியலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். யாருக்குத் தேவைப்படுகிறதோ, யாருக்கு மருத்துவம் தேவைப்படுகிறதோ அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை மிக்க வாழ்வு மட்டுமே இதற்குத் தீர்வாகும்.

கார்ப்பரேட்டுகளின் நாப்கின் விளம்பரம் பெண்ணின் இரத்தப்போக்கு மீதான சமூகத்தீட்டை உடைத்தெறிந்து குப்பைத் தொட்டியில் போட்டது என்பதையும், இன்றைய கணவன்மார்களும், சகோதரர்களும் எந்தத் தயக்கமுமில்லாமல் கடையில் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நாப்கின் வாங்கிச் செல்கிறார்கள் என்பதையும் மறுப்பது அறிவு நாணயமல்ல. நாப்கின் பயன்படுத்துவதில் கர்ப்பப்பையின் ஆரோக்கியம் மேம்பட்டதா இல்லையா என்பது மட்டும் விவாதமன்று. நிச்சயமாக நாப்கின், பெண்ணின் சமூக வெளியை விரிவாக்கியது. நாப்கினிலுள்ள சில வேதியியல் செயல்பாடுகளினால் ஏற்படும் பாதிப்பை விட, இந்த வெளி எங்களுக்குத் தேவையாய் இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்காக வேலைக்குச் செல்லும்போது மட்டுமன்று, சமூகப் பணிகளுக்கு வரும்போதும்கூடத்தான். கடைசியாக இவர்கள் சொல்லுகின்ற ஒரு கருத்துக்கு வருகிறேன். இந்த விளம்பரங்களால் பெண்கள் அந்த சமயத்தில் கூட ஓய்வெடுத்துக் கொள்ள முடியாமல், அப்போதும் வேலை செய்கிற நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் என்ற வாதம் கருணை மிக்கதுதான். இதற்கான விடை பெண்களின் வாழ்க்கையின் மீது தன்னாட்சி செலுத்துகிற உரிமை பெண்களுக்கு இருக்கிறதா என்பதில்தான் இருக்கிறது.

பெண்ணின் உடற்கூறு பற்றிய பெண்ணிய சிந்தனை கொண்ட மருத்துவ அறிவியலை இன்றுகூட நாம் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. தான் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது பிள்ளை பெற வேண்டும், தான் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையில்லாத பெண், தனது வியாதிகளுக்கான மூலங்களை எப்படி அறிவாள்? எங்கே தேடுவாள்? இவ்வளவு ஏன், தான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் உரிமையே இங்கு பெண்ணுக்குக் கிடையாது. தனது கணவனுக்கு முன் சாக வேண்டும் என்று ஆசைப்படத்தான் நீங்கள் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். நான் எழுதுவது ஒவ்வொன்றும் நடப்பு மட்டுமே. ஒவ்வொரு பெண்ணும் நீண்ட நாள் வாழ வேண்டும் ( தீர்க்க சுமங்கலியாகவோ, அல்லாமலோ) என்று ஆசைப்பட ஒரு சமுதாயத்தை முதலில் கட்டுவோம். அந்தச் சமூகத்தில்தான் பெண்ணின் உடல் பற்றிய சரியான சிந்தனை முகிழ்க்க முடியும்.

--------------------------------

Pin It

தோழர் சுப.வீரபாண்டியன் ' கலைஞர் தொலைக்காட்சி'யில் வழங்கிவரும் கருத்து ரைகளின் தொகுப்பான, ' ஒன்றே சொல் நன்றே சொல் ' 4,5,6 தொகுதிகளின் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. 26.12.2010 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வெளியீட்டு விழாவுக்குத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமை ஏற்றிருந்தார். நிகழ்வின் தொடக்கத்தில் கவிஞர் ரத்திகா, விழாவுக்கு வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்றார்.

ondre-sol-nandre-solதமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு, ஒன்றே சொல்! நன்றே சொல்!! நூல் தொகுதிகளை வெளியிட, தொழிலதிபர் திரு வீ.கே.என் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலினை வெளியிட்ட அமைச்சர் பேசும்போது, " தலைவர் கலைஞர் அவர்கள் பேச்சு, செயல் என அனைத்துத் தரப்பினரையும் தன்னுடன் வைத்திருக்கிறார். சுபவீ அவர்கள் செய்திகளை மக்களிடம் சொல்கிறார். அதற்கான தளத்தை நாங்கள் உருவாக்கித் தருகிறோம்.ஸ்பெக்ட்ரம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சுபவீ மக்கள் மத்தியில் இதுகுறித்துப் பேசினால்போதும், மக்கள் உண்மைநிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள் " என்று உரையாற்றி, ஒன்றே சொல் நன்றே சொல் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கருத்துரையாற்றிய பேராசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசும்போது, சொல் என்ற சொல் உருவாக்கிய தாக்கம் பற்றியும், உலக வரலாற்றில் சொல் ஏற்படுத்திய மாற்றங்கள், உலகத் தலைவர்களின் சொல் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். ஒன்றே சொல் நன்றே சொல் நூலின் சில கட்டுரைகளையும் குறிப்பிட்டுப் பேசித் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நூலாசிரியர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் நிறைவில் தன் ஏற்புரையை நல்கினார். இவர் தன் ஏற்புரையின் போது, "ஒன்றே சொல் நன்றே சொல் என்ற தலைப்பே, தலைவர் கலைஞர் கொடுத்த தலைப்புதான். இன்று இத்தலைப்பு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றார். "ஸ்பெக்ட்ரம் பற்றிய உண்மைகளை மக்களிடம் சொல்லும்போது, ஆ.ராசா பணம் கொடுத்திருக்கிறார். அதனால்தான் ராசாவுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்கிறார்கள். நான் மறுக்கவில்லை. ராசா கொடுத்திருக்கிறார். பணம் அல்ல, அண்ணல் அம்பேத்கர், தந்தைபெரியார் பற்றி அவர் பேசிய தொகுப்பு நூல்களை எனக்குக் கொடுத்திருக்கிறார்" என்று பேசிய நூலாசிரியர், ஒன்றே சொல் நன்றே சொல் நூல் குறித்தும் தன் ஏற்புரையை ஆற்றினார்.

கவிச்சுடர் கவிதைப்பித்தன், கல்வியாளர் தங்கம்மூர்த்தி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியைக் கவிஞர் ஆங்கரை பைரவி தொகுத்தளித்தார். வானவில் பதிப்பகம் சுப.புகழேந்தி நிகழ்ச்சி நிறைவில் வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொறுப்பாளர்கள், விடுதலை வேங்கைகள் இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறையத் திரண்டிருந்தனர் !

--------------------------------------------------

Pin It

34 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. இப்புத்தகக் காட்சி சனவரி 4 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இதில் 650 அரங்குகள் பல்வேறு புகழ்பெற்ற பதிப்பகங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சி, ஒவ்வோர் ஆண்டும் பொங்கலை ஒட்டி நடைபெறும் சென்னைப் புத்தகக் காட்சிதான். இந்தியாவின் முன்னணி பதிப்பகங்களின் வெளியீடுகளை ஒரே கூரையின் கீழ்க் கொண்டு வந்து கொடுக்கிறது சென்னைப் புத்தகக் காட்சி.

1977 ஆம் ஆண்டு, முதல் சென்னை புத்தகக் காட்சி தொடங்கப் பட்டது.  இது டிசம்பர் 14 முதல் 24 வரை நடைபெற்றது. இக்காட்சியில் 22 அரங்குகள் இடம்பெற்றன. கொஞ்சம் கொஞ்சமாக இது விரிவடைந்து இன்று 650 அரங்குகளைக் கொண்ட புத்தகக் காட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்குத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) அரும்பணியே காரணம்.

தொலைக்காட்சியும், இணையத்தளமும் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் மக்களிடையே  புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவிடவில்லை. வெறும் 22 அரங்குகளுடன் தொடங்கப்பட்டு இன்று ஏறத்தாழ 1 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியே இதற்குச் சான்று.

அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும். புத்தகம் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் என்றார் ஓர் அறிஞர். புத்தகங்கள் அறிவாயுதங்கள். தங்களுடைய இன வரலாற்றினைத் தெரிந்து கொள்ளவும், இனிவரும் உலகினை எதிர்கொள்ளவும், நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் வழங்க வேண்டிய முதல் முகாமையான சொத்து புத்தகங்கள்தான்.

புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, சிந்தனையைத் தூண்டும், அறிவை வளர்க்கும் நல்ல புத்தகங்களைத் தெரிவு செய்யக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அவர்களை அவையத்து முந்தியிருக்கச் செய்வது நம்முடைய கடமை.

புத்தகங்கள் அறிவாசான் அம்பேத்கரையும், பேரறிஞர் அண்ணாவையும், மார்க்சியப் பேராசான் கார்ல் மார்க்சையும் நமக்குப் புடம் போட்டுத்தந்தன. நம்முடைய பிள்ளைகளிலும், அம்பேத்கரும், அண்ணாவும், கார்ல் மார்க்சும் இருக்கக்கூடும்.

கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.குடும்பம் குடும்பமாகப் புத்தக்காட்சிக்குச் செல்வோம். புத்தகங்களில் முதலீடு செய்வோம், செய்வதற்கும் கற்றுக் கொடுப்போம்.

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துகள்!

Pin It

கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக நாடுகளில் இந்தியாவில்தான் தங்கத்தை மிக அதிகமான அளவு ஆபரணத்திற்காகப் பயன்படுத்துகின்றோம். குறிப்பாகத் திருமணத்திற்கும் மற்றும் பல நல்லகாரியங்களுக்கும் தங்க அணிகலன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வசதி குறைவானவர்களும் தங்கத்தைக் கட்டாயம் திருமணச் சடங்குக்காக வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது தவிர வணிகத்தில் மற்ற பங்குகளின் விலை சரியும் போது பாதுகாப்பிற் காகவும், பங்குகளில் வந்த இலாபத்தினையும் தங்கத்தில் முதலீடு செய்யும் வணிகர்கள், உலகப் பங்குச் சந்தையில் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறாகத் தங்கத்தின் தேவையை இரண்டு வகைப்படுத்தலாம்.

1.ஆபரணத்திற்கான தேவை (Physical demand for Gold )

2. முதலீட்டிற்கான தேவை ( Investment demand for Gold )

ஆனால் இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், ஆபரணத் தங்கத்திற்கான விற்கும் விலை வணிகத்தின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது. உதாரணத்திற்கு, சில சமயம் 5 நாட்களில், 10 விழுக்காடு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனப் பத்திரிகைகளில் செய்தி படிக்கின்றோம். நகைக் கடைக்குச் சென்றால், 10 விழுக்காடு அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டும். சமூகத்தில் 5 நாட்களில் என்ன மாறியிருக்கக் கூடும்? வருமானம் 5 விழுக்காடு உயர்ந்திருக்குமா? பண வீக்கம் உயர்ந்திருக்குமா? நாட்டில் யுத்தம் நடை பெற்றிருக்குமா? அப்படி எதுவுமே நடந்திருக்காது.

உலகப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பங்குகளாக வாங்கிக் குவித்திருப்பர். பொதுவாக மார்கழி மற்றும் தை மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும். காரணம் தை மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும். அதனால் தங்க ஆபரணங் களுக்கான தேவை அதிகரிக்கும். இது தங்க நகை வியாபாரிகளின் நன்மைக்கே!

இன்றைய நிலையில் தங்கத்தின் தரமான விலை இந்திய ரூபாய் மதிப்பில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். கீழ்கண்ட வரைபடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கான இந்திய ரூபாயின் பணவீக்க உயர்வும், தங்கத்தின் விலை மதிப்பும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 2005 இல் இருந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதைக் காணலாம். இது முற்றிலும் உலகப் பங்குச்சந்தை வணிகத்தின் மூலமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 2005 முதல் நவம்பர் 2010 வரை, இந்திய ரூபாயின் பணவீக்கம் 60.77 விழுக்காடு ஆகும். இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை 232.76 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஜனவரி 2005 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 595.98. நவம்பர் 2010 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 1983.20. பணவீக்க உயர்வின் விழுக்காட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தங்கத்தின் விலை இன்றைய நிலையில் கிராம் ஒன்றிற்கு 958.16 ரூபாயாகத்தான் இருக்க வேண்டும்.

ஏற்பட வேண்டிய குறைந்த பட்ச விலை திருத்தம் 30 விழுக்காடு ஆகும். இனி தங்கத்தின் விலை குறையத் தொடங்கி தரமான விலையை நோக்கி வணிகத்தில் நகரும். எனவே குறைந்தது தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு ரூபாய் 1388.24 க்கு வரவேண்டும்.

------------------------------

Pin It