திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் அறிவியல் மலர் வெளியீட்டு விழா 09.12.2010 வியாழன் மாலை 6 மணிக்குத் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.

ariviyal-malarஇவ்விழாவிற்குத் தமிழ்நாடு அரசு அறிவியல் தமிழ் மன்றத் துணைத்தலைவர் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மலர்க்குழு உறுப்பினர் பொள்ளாச்சி மா. உமாபதி வரவேற்புரை ஆற்றினார். அறிவியல் மலரைத் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வெளியிட, கல்வியாளரும், ஊடகவியலாளரு மான திரு ரமேஷ் பிரபா பெற்றுக்கொண்டார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் மலர் அறிமுக உரையாற்றினார். “ அறிவியல் பார் வையுடன் பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்பிய பெரியாரின் பிள்ளைகளான நாங்கள் அறிவியல் மலரை வெளியிடுகின்றோம். பஜனைகள் மூலம் எல்லாம் நடக்கும் என்றால், வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், பசிக்கிறவனுக்கு உணவைக் கொடு,  தாகத்தில் இருப்பவனுக்குத் தண்ணீர் கொடு   என்பதே நம் கோரிக்கை. அறி வையும், உழைப்பையும் நம்புகிற மனிதன் தான் முன்னேறே முடியும். 1931 இல் மனிதனின் சராசரி வயது 23தான். இன்று 60ஐத் தாண்டி யிருக்கிறது. இதற்குக் காரணம் அறிவியலா, பஜனைகளா? கடல் மூன்றுவிதமான நீர்களால் ஆனது. அதனால்தான் இலக்கியங்கள் கடலை முந்நீர் என்றன. ஆற்றுநீர், மழை நீர், ஊற்று நீர் என மூன்று நீர்கள் கடலில் வந்து சேர்கின்றன. இவற்றிற்கு உவர்ப்புச் சுவை கிடையாது. ஆனால் கடல் நீர் உப்புக் கரிப்பது எப்படி? இதுபோன்ற ஆழமான வினாக்களுக்கு விடை சொல்வதுதான் அறிவியல். இன்று மதம் அறிவியலிடம் சரணடைந்து விட்டது.ஆன்மீகம் தன்னுடைய நம்பிக்கைகளுக்கு அறிவியல் முகமூடி அணிந்து கொள்ளத் தொடங்கிவிட்டது என்று தம்பி வினோத்குமார் தன்னுடைய அறிவியல் போர் என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதை சூடோ சயின்ஸ் என்று சொல்வார்கள். இது அறிவியலுக்கும் மதத்திற்குமான இரண் டாம் கட்டப் போர் என்று வினோத்குமார் கூறுகிறார். அது உண்மைதான். அறிவியல் அறிவு வேறு, அறிவியல் பார்வை வேறு. அறிவியல் அறிவுடன், அறிவியல் பார்வையும் வளர்க்கப்பட வேண்டும். இந்த அறிவியல் மலரின் நோக்கமும் அதுதான் ” என்று சுப.வீரபாண்டியன் தன் உரையில் குறிப்பிட்டார்.

மலரை வெளியிட்ட வழக்கறிஞர் அருள்மொழி , “ அறிவியல் புரிந்து விட்டால் வாழ்க்கை எளிமையாகிவிடும். நம்முடைய அறிவியல் அறிவு எல்லாம் இன்று மறைக்கப்பட்டு ஓர்அறிவற்ற சமூகமாக அடையாளம் காட்டப்படுகிறோம். ஒரு ஊருக்கே பிரசவம் பார்த்த மருத்துவச்சியின் பிள்ளைக்கு, இரண்டு மதிப்பெண் குறைந்து விட்டால், மருத்துவம் படிக்கத் தகுதியில்லை என்று சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோம். அதனால்தான் ஐயா பெரியார் கேட்டார், உஷ்ண தேசத்துப் பாம்புக்கு வி­ம் அதிகம் ; உஷ்ண தேசத்துத் தாவரங்களுக்கு வீரியம் அதிகம் ; உஷ்ண தேசத்து மனிதன் மட்டும் எப்படி அறிவற்றவனாக இருக்க முடியும்?. பரதம், இசை போன்ற கலைகளை மட்டுமல்ல, மருத்துவம் உள்ளிட்ட அறிவியலை எல்லாம் நம்மிடம் இருந்து பறித்து, மதத்தின் பேரால் மறைத்து விட்டனர். அதைத்தான் மறை, வேதம் என்கின்றனர். கலாச்சேத்திராவை தொடங்கிய ருக்மணி அருண்டேல், பரதக் கலையைக் கற்பதற்கு முன்புவரை, அது நம் தமிழர்களின் கலையாகத்தான் இருந்தது. அந்த அம்மையார் அதை ஏதோ அவாளுக்குரியது, நம்முடைய பிள்ளைகளுக்கு எல்லாம் பரதம் வராது என்பது போன்ற நிலையை ஏற்படுத்திவிட்டார். அவர் கற்றுக்கொண்டதே வழுவூர் ராமையா பிள்ளை என்பவரிடம்தான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். இப்படி அவாள்களால் மறைக் கப்பட்ட உண்மைகள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறது. அதை நம்முடைய பிள்ளைகளுக்குத் தெளிவாக்க வேண்டும்.

போராட்டங்கள் மட்டும் போதாது, மக்களை அறிவுசார் நிலையிலும் தயார்ப்படுத்த வேண்டியதும் மிக முக்கிய மானது. சொல்ல வேண்டிய செய்திகளை எளிமையாக, பார்ப் பதற்கு அழகான வடிவத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட பணியை ‡ அறிவியல் செய்திகளை அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்கின்ற பணியை ‡ இந்த அறிவியல் மலர் செய்கிறது. பிறந்தநாள் , திருமண நாள்களுக்குப் பரிசாக இதை வாங்கிக் கொடுக்கலாம். அவ்வளவு சிறப்பான செய்தி களைக்  கொண்ட இம்மலர் படித்துப் பாதுகாக் கப் பட வேண்டிய ஒன்று ” என்று  விரிவாகப் பேசினார்.

இவ்வறிவியல் மலரில், கடைசியில் இடம் பெற்றுள்ள வினோத்குமாரின் அறிவியல் போர் என்ற கட்டுரை, மேடையில் பேசிய அனைவரின் கருத்திலும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. அக்கட்டுரையாளர்  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொன்னேரி நகரச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா நிறைவில் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் சிங்கராயர் நன்றியுரை ஆற்றினார்.

Pin It