தமிழ் அல்லது திராவிடம் என்பது தென இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை,மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரைப்பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது.ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும்,அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடயாக நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வட இந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு,தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும்.

வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை;தமிழையே தங்கள் தாய் மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்கொண்டால், திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால்,தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்;அது மட்டுமன்றி,வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டதன் காரணமாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என்று ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
    
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, பக்கம்-95)

இந்துக்களும் மாட்டிறைச்சியும்

“வேத காலத்தில் பசு புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது.பசுவின் இந்தப் புனிதத்தன்மை காரணமாகவே அதன் இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி சம்ஹிதையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.”

ரிக்வேதகால ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக்கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதையும் ரிக்வேதத்திலிருந்தே தெள்ளத் தெளிவாகக் காண்கிறோம். ரிக் வேதத்தில் (X.86.14) இந்திரன் கூறுகிறான்:“அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும சமையல் செய்தார்கள்.” அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளும், காளை மாடுகளும், கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக்கடாக்களும் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் (X.91.14)கூறுகிறது. வாள் கொண்டோ அல்லது கோடரி கொண்டோ பசு கொல்லப்பட்டதாக ரிக் வேதத்திலிருந்து (X.72.6) தெரிகிறது.

இதற்கு ஒரே ஓர் உதாரணம் மட்டுமே இங்கு கூறுகிவோம்.தைத்ரீய பிராமணத்தில் வகுத்துரைக்கப்பட்டிருக்கும்,காமியாஷ்திஸ்களில்,காளைமாடுகளும் பசுக்களும் பலியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது மட்டுமன்றி,எந்தெந்த தெய்வங்களுக்கு எவ்வகையான காளைகளும் பசுக்களும் பலியாக அளிக்கப்பட வேண்டும் என்பதும் கூட விவரிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துகாட்டாக விஷ்ணுவுக்கு குள்ளமான காளைகளையும், விரித்ரனை அழித்த இந்திரனுக்குக் கீழ்நோக்கிய கொம்பும் நெற்றியில் வெண்புள்ளியும் கொண்ட எருதும், பு­னுக்கு கறுப்புப் பசுவும், ருத்ரனுக்கு செந்நிறப்பசுவும் பலியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.தைத்ரீய பிராமணம் பஞ்சாச்சரதிய -சேவை எனும் மற்றொரு வகையான உயிர்ப்பலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.திமிலில்லாத குட்டையான ஐந்து வயது நிரம்பிய கன்று ஈனாத இளம் பசுக்களையும் பலியிடுவது இதில் மிக முக்கியமான அம்சமாகும்.
 (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, பக்கம்-133,134)

சாமானியர்களின் நரகம் இந்து மதம்

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்து மதம் மனித நல முன்னேற்றக் கோட்பாடுடையது என்று கூறுவதற்கு முடியாததாக உள்ளது.எனவேதான் பால்ஃபோரின் மொழியில் சொல்வதென்றால் இந்து மதம் சாதாரண மனித இனத்தின் உள்ளார்ந்த வாழ்வினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகாது. அதனால் ஏதாவது செய்ய முடியுமென்றால், அது அவர்களை முடமாக்கிவிடக் கூடியது மட்டுமே. சாதாரண மனித உள்ளங்களுக்கு ஊட்டமளிக்கக்கூடியதோ, சாதாரண மனிதத் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதோ சாதாரண மனிதர்களின் நலிவுகளுக்கு உதவக் கூடியதோ இந்து மதத்தில் எதுவும் இல்லை.

பயனற்ற போராட்டத்திற்குப் பின் மரணமடையச் செய்யக் கூடிய,பிறப்பைத் தரும் இயற்கையின் நினைக்க முடியாத சக்தியை நேருக்கு நேராகச் சந்திக்கும் இருளில் நிறுத்துகின்றது. கொடூரமான மதப் புறக்கணிப்பைவிட எவ்வகையிலும் கொடுமையில் குறைவில்லாத வகையில் கடவுளோடு மனிதனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் செய்து விடுகிறது.

இந்து மதத்தின் தத்துவம் இத்தகையதுதான்;அது உயர்சாதி மனிதனின் சொர்க்கம்; சாமானிய மனிதனின் மீளமுடியாத நரகம்.

இந்து சமூக அமைப்பு சகோதரத்துவத்திற்கு எதிரானது.சமத்துவத்தை அது அங்கீகரிப்பதில்லை. சமத்துவத்தை அங்கீகரிக்காதது மட்டுமல்ல,சமமின்மையை அதிகாரப்பூர்வக் கோட்பாடாக்குகிறது. சுதந்திரம் கிடையாது. ஒவ்வொருவரது தொழிலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தொழிலை மேற்கொண்டு நடத்துவதே செய்யத்தக்கது. பேச்சு சுதந்திரம் இருக்கிறது. சமூக அமைப்பின் மேல் மட்டத்துக்கே பேச்சு சுதந்திரம் உண்டு. தாராளமான பெருந்தன்மையுடன் கூடிய சுதந்திரம் அன்று. வால்டேர் கூறிய தாராள மனப்பான்மையுடன் அன்று. நீ கூறியதை நான் முற்றிலும் மறுக்கிறேன். ஆனால் நீ மாற்றுக் கருத்துக் கூறும் உரிமையை என்னுயிர் ஈந்தும் காப்பேன் என்பது போலல்ல.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பின் 6ஆவது தொகுதியில், இந்து மதத் தத்துவமும் மனுதர்மமும் என்னும் பகுதியில் இருந்து)

ஏப்ரல் 14 - அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்