டாக்டர் ஆர். நாகசாமி எழுதிய Mirror of Tamil and Sanskrit என்னும் நூல் தமிழறிஞர்களின் சினத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் ஆளாகி இருக்கிறது. இவர் 1970இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின் முதல் இயக்குனராகப் பதவி வகித்தவர். அவ்வப்போது கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் பல விவாதத்திற்குரியவையாகவே இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்நூல் இப்போது வெளிவந்திருக்கிறது.

அய்ம்பதாயிம் ஆண்டுகள் தொன்மையுடைய தமிழ் மொழியை, தமிழ் இன வரலாற்றை, தமிழ்ப்பண்பாட்டை அப்படியே திரித்துக் கூறியிருக்கிறார் நாகசாமி. சான்றுகள் இன்றி, அதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, வெறும் புனைவுகளால் இந்நூலை நிறைத்திருப்பது, ‘எந்நூலின்’ வளர்ச்சிக்காக என்பதை அறியாதவர்கள் அல்லர் நாம். எனவேதான் இதுபோன்ற வரலாற்றுப் புரட்டுவேலைகள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தமிழறிஞர்களின் கண்டனக் கூட்டம், 27.07.2012 அன்று மாலை, சென்னை, எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. முனைவர் பொற்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேனாள் துணைவேந்தர்கள், முதுபெரும் தமிழறிஞர்கள், தொல்லியல், மொழியியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவ்வரங்கில், மறத்தமிழ்ப்பெரியோர்களுடைய அறத்தமிழ்ச் சீற்றப்பொழிவின் சுருக்கம் இங்கே:-

முனைவர் பொற்கோ ( மேனாள் துணை வேந்தர்)

‘இந்தியா ஒன்றாக இருக்கட்டும்; வடமொழி மதிக்கப்பட வேண்டும்; வைதீக நெறி மதிக்கப்பட வேண்டும்; தமிழும் இருக்கட்டும். நீங்கள் வடமொழி மேலாதிக்கத்தையும், வைதீக மேலாதிக்கத் தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு நல்லதுதான்’ - இதுதான் நாகசாமி எழுதியுள்ள இந்நூலின் சாரம். நூலின் தலைப்பில்தான் தமிழ் இருக்கிறதே தவிர, நூலுக்குள் வடமொழியும், வைதீக நெறிகளும்தான் உயர்வாகப் பேசப்பட்டி ருக்கின்றன. தமிழும், தமிழர் நாகரிகத்தின் பெருமையும் எந்த இடத்திலும் பேசப்படவில்லை. தொல்காப்பியர் காலம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுதான். அதற்கு முன்னால் போக முடியாது என்று சொல்கிறார். எந்தச் சான்றும் காட்டவில்லை. இவர் சொல்லியிருக்கின்ற செய்திகள் அடிப்படையற்றவை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் எல்லாம் சமயச் சார்புடையவை என்று சொல்கிறார். ஆனால் அவை எல்லாம் சமயச் சார்பற்றவை என்று நிறுவப் பட்டுள்ளன. பிராமி என்னும் எழுத்தை பிராமணர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்கிறார். அசோகர் மற்றும் புத்தமதம் பற்றி இவர் சொல்லும் பகுதி நம்மைத் திடுக்கிட வைக்கிறது. அசோகர் புத்த மதத்தைப் பரப்பவில்லை, அசோகனுக்கும் பிராமணர்களுக்கும் எவ்வித விரோதமும் இல்லை. அசோகன் பிராமணர்களை மதித்திருக்கிறான், பாராட்டியிருக்கிறான் என்று எழுதுகிறார். அப்படி என்றால் அசோகரின் பேரன் பிருத்கிருதனை, புஷ்யமித்ர சுங்கன் என்னும் பிராமணன் வெட்டிக் கொன்றது ஏன்? ஒரு நேர்மையான ஆய்வாளர் என்றால் இதற்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டாமா? இன்னும் ஒரு படி மேலே போய் அசோசன் காஞ்சிபுரம் வரை ஆண்டான் என்கிறார்.

பிராமணர்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், மிக உயர்வாகவும், ஆர்வத்துடனும் பேசுகிறார். மற்றவர்களுக்கு வெறி இருக்கிறது, அதாவது தமிழ்வெறி, சாதி வெறி இருக்கிறது என்று சொல்கிறார். 63 நாயன்மார்களில் 13 பேர் பிராமணர்கள் என்று இவர் கணக்கிட்டுக் காட்டுகிறார். நாம் இதுவரை இப்படி கணக்கிட்டி ருக்கிறோமா? அனைவரையும் நாயன்மார்கள் என்றுதான் பார்த்தோம். இனிமேல் நாமும் இதுபோன்று கணக்குகளைப் பார்க்க வேண்டுமோ என்னவோ தெரியவில்லை.

தவறான காலக்கணக்குகளையும் காட்டுகிறார். பிராமியிலிருந்துதான் எல்லாமே வந்தது என்கிறார். தொல்காப்பியத்தில்தான் எழுத்து பற்றி, வரிவடிவம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. தொல்காப்பி யத்திற்கு முன் எழுத்துவடியில் எந்த நூலும் இல்லை என்பது நிறுவப்பட்ட உண்மை. அசோகனின் எழுத்து கி.மு. 3ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர் காலம் கி.மு.5லிருந்து 7வரை கணக்கிடக்கூடியது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகள் தந்திருக்கிறோம். ஆனால் இவர் எந்தச் சான்றுகளும் தராமல், தொல்காப்பியர் காலத்தைப் பின்னால் கொண்டு வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், இலக்கணம் தொடர்பாக நடந்த அகில இந்தியக் கருத்தரங்கில், தொன்மையான இலக்கண ஆசிரியர்களில் தொல்காப்பியரே காலத்தால் முந்தியவர் எனச் சான்றுகளைக் காட்டி பதிவு செய்திருக்கிறேன்.

இவை எல்லாவற்றையும் விடக் கேலிக்குரியது, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை (பார்வையாளர்களின் பலத்த சிரிப்பொலி) என்று எழுதியிருக்கிறார். வரலாறானாலும், கல்வெட்டுகளா னாலும் ஆராய்ந்து பார்க்காமல் எந்த முடிவையும் சொல்லக்கூடாது. ஏனென்றால், மகேந்திரவர்மன் தன் கல்வெட்டில் 23ஆம் புலிகேசியைத் தான் வென்றதாகக் குறிப்பிடுகிறான். அதேபோல் மகேந்திரவர்மனைத் தான் வென்றதாக புலிகேசி தன்னுடைய கல்வெட்டில் குறிப்பிடுகிறான். ஆய்வு முடிவுகள் வேறு பல செய்திகளைத் தருகின்றன. இவற்றை, வ.சு.ப. மாணிக்கனாரும், மீனாட்சி அம்மையாரும், ‘பல்லவர் வரலாறு’ என்னும் தங்கள் நூலில் எழுதியிருக்கிறார்கள். எனவே எதையும் ஆராயாமல் சொல்வதும், மனம்போன போக்கில் எழுதுவதும் சிறிதும் நாணயமில்லாத செயல், கடுமையான கண்டனத்திற்குரியது. மொத்தத்தில் இவருடைய கல்வெட்டு வாசிப்பு அறிவியல் தன்மையற்றது (unscientific reading) என்றே நான் சொல்வேன்.

நடனகாசிநாதன் (முன்னாள் இயக்குனர், தொல்பொருள் ஆய்வுத்துறை)

அவர்கள் எப்போதும் நம்மை அறிவிலிகள் என்றே பட்டவர்த்தனமாகச் சொல்லி வருகிறார்கள். நம் மதிப்பிற்குரிய ஐ.மகாதேவன் அவர்கள் குகைக் கல்வெட்டுகள் என்று ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் அந்த நூலின் தலைப்பை Old Tamil Inscription என்றுதான் வைத்திருந்தார். ஆனால் உள்ளே எல்லா இடங்களிலும் தமிழ் பிராமி என்றுதான் குறிப்பிடுகிறார். இவர்கள் எழுதும் நூல்களின் தலைப்பைப் பார்த்தால், தமிழுக்கு, தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர்கள், பாண்டித்தியம் பெற்றவர்கள், உலக அரங்கில் தமிழைப் பரப்புபவர்கள் என்றொரு எண்ணத்தை, மாயையை ஏற்படுத்திவிடுவார்கள். அத்தனை கெட்டிக்காரர்கள்.

நாகசாமியின் நூல் ஆங்கிலத்தில் இருக்கிறது. நம்மிடையே ஆங்கிலப் புலமை பெற்ற தமிழறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்நூலுக்குத் தக்க சான்றுகளுடன் முழுமையானதொரு மறுப்பை வெளியிட வேண்டும். அதை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையயன்றால் தமிழைப்பற்றிய தவறான கருத்துகள் வெளிநாட்டவரிடையே ஏற்பட்டுவிடும்.

அசோகர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தமிழகத்தில் படித்தறியக்கூடிய எழுத்து வடிவம் இல்லை என்கிறார் நாகசாமி. இது முழுக்க முழுக்கத் தவறானது. சமயோதயுக்த என்ற நூலில் பம்மி என்கிற எழுத்து வருகிறது. இந்த பம்மி என்பது பிராகிருதம். சமஸ்கிருதத்தில் பிராமி. இதே நூலில் தமிளி என்றும் வருகிறது என்று இவர் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். பம்மியைக் குறிக்கின்ற அதே நூலில்தான் தமிளியும் குறிக்கப்படுகிறது. அப்படி என்றால் தமிழ்நாட்டில் எப்படி தமிழ் எழுத்து இல்லாமல் இருந்திருக்கும்.

அண்மையில் ஆதிச்சநல்லூர், நெடுங்குளம், கொற்கை, மாங்குளம், அழகன்குளம் உள்ளிட்ட இடங்களில் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த பானை ஓடுகளில் எழுத்துகள் எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடங்களில் கிடைத்த நெல் மணிகளைக் கொண்டு, அறிவியல் ஆய்வு செய்தபோது, அதன் காலம் கி.மு.490 என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியயன்றால் கி.மு.5ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்து வழக்கில் இருந்திருக்கிறது. அசோகரின் காலத்தில் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் சொல்லும் பம்மியின் காலம் கி.மு.3. இது கி.மு. 5 என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த உண்மைகளை எல்லாம் இவர் அறிந்திருக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே மறைக்கிறாரா? ஆதிச்சநல்லூரில் அருமையான தடயம் கிடைத்தது. அதில் முதுமக்கள் தாழியின் உள்பக்கம் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதன் காலம் கி.மு. 400 என ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ் எழுத்தோடு கூடிய உரைகல் தாய்லாந்தில் கிடைத்திருக்கிறது. இவைபோன்ற கல்வெட்டுகள் வடநாட்டில் கிடைத்திருக்கிறதா? அங்கே அசோகனுக்கு முற்பட்ட காலத்தில் எழுத்தே கிடையாது என்கிறார் மெகஸ்தனிஸ். இதற்கு நாகசாமி போன்றவர்கள் முதலில் ஆதாரங்களைத் தேடட்டும். பிறகு தமிழைப்பற்றி பேசலாம்.

முனைவர் இராசேந்திரன் (முன்னாள் துணைவேந்தர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)

டாக்டர் நாகசாமி, நிகழ்காலத் தேவைக்கேற்ப கடந்த காலத்தைக் கட்டமைக்க முயல்கிறார். நாகசாமியின் இது போன்ற செயல்களுக்குத் தமிழறிஞர்கள் ஏற்கனவே தக்க சான்றுகளோடு மறுப்புகளைச் சொல்லி, அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி முடிந்துபோன மொழிப்பகையை இப்போது மீண்டும் மூட்டிவிட இப்போது என்ன தேவை வந்திருக்கிறது என்பதே நம் வினா.

இந்நூலின் முன்னுரையில், தமிழ் மொழிக்குச் செவ்வியல் தகுதி என்று எவை எவை சொல்லப்படு கின்றனவோ அவை எல்லாம் தமிழுக்குரியவை இல்லை என்கிறார். இவர்களின் பயணம் எதை நோக்கி என்பது நமக்குத் தெரிகிறது. ஒரு மொழி செம்மொழி என்பதற்கு, அந்த மொழியில் உள்ள நூல்கள் வேறு மொழியிலிருந்து உருவாக்கப்பட்டவையாக, மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக் கூடாது என்பது அடிப்படைத் தகுதி. அந்தத் தகுதி தமிழுக்கு இருக்கிறது என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆரிய இனம் - திராவிட இனம் என இரண்டாக இருந்திருக்கிறது. இந்த இரண்டு இனங்களுக்கான போராட்டத்தைக் காலம்காலமாக எடுத்துக்கொண்டு போயிருக் கிறார்கள். இன்று இந்த நெருக்கடி வந்திருக்கிறது. இந்நூலில் நாகசாமி, மொழியிலும், பண்பாட்டிலும் கைவைத்திருக்கிறார். இனத்தைத் தொடவில்லை.

மொழியில் எப்படி கைவைத்திருக்கிறார் என்றால், நீங்கள் உங்களுடைய தொன்மையான நூல் என்று சொல்கிற தொல்காப்பியத்தில் இருப்பவை எல்லாம் உங்களுடையவை இல்லை. எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. எழுத்து மட்டும்தான் உங்களுடையது என்று நாகசாமி சொல்கிறார்.

எழுதாக் கிளவி என்று சமஸ்கிருதத்தைச் சொல்கிறார்கள். எழுதினால் வேதத்திற்குக் கற்பு போய்விடுமாம். சரி வேதத்தை எழுத வேண்டாம், இராமாயணம், மகாபாரத்தையாவது எழுதியிருக்கலாம் இல்லையா? இந்தியாவில் முதல் ஆவணம் என்பது தமிழில்தான் இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

தமிழ் நாட்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகளில் தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’கரம் மாறாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே எப்படி? சமஸ்கிருதத்திற்கு ஏற்கனவே எழுத்துவடிவம் இருந்திருக்குமானால், பல்லவர்கள் ஏன் கிரந்த எழுத்தை உருவாக்கினார்கள்? எழுத்து என்ற ஒன்று இருப்பதையே அவர்கள் இங்குவந்துதான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து பண்பாடு. அகத்திணை, புறத்திணை என்பதெல்லாம் உங்களுக்குக் கிடையாது. இவையயல்லாம் வேதங்கள், உடநிடதங்கள் மற்றும் நாட்டிய சாஸ்திரத்தில் இருந்து வந்திருக்கின்றன என்கிறார்.

பண்பாடு என்பது வாழ்வியல் முறை பற்றியது. ஆரிய வாழ்வியல் முறைக்கும், திராவிட வாழ்வியல் முறைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. பண்பாடு என்பது வாழ்வியல் விழுமியங்களைப் பொறுத்தது. சிறப்பாகப் போற்றப்படுகின்ற விழுமியங்களை இலக்கணங்களில் பாடுபொருளாகக் காட்டுவது நம் மரபு. காதல் நம்முடைய பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்று.

‘ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழை அறிவுறுத்தும் பொருட்டு குறிஞ்சிப்பாட்டு பாடியிருக்கிறார் கபிலர் என்று சிலர் சொல்கிறார்களே, என்ன நியாயம்? அப்படியயன்றால், ஆரிய அரசனுக்கு அ, ஆவன்னா சொல்லிக்கொடுத்தாரா கபிலர்’ என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் தமிழறிஞர் வ. அய். சுப்பிரமணியம் கேட்கிறார். அப்படியில்லை, தமிழை அறிவுறுத்தல் பொருட்டு என்றால், காதலை, அகப்பொருளை அறிவுறுத்தல் பொருட்டு என்று பொருள் என்றார்கள். அகப்பொருள் பாடுபொருளான காதல் என்பது சமஸ்கிருதத்தில் இல்லை என்கிறார் வ.அய். சுப்பிரமணியம். வடமொழியில் காதலைச் சொல்கின்ற ஒரே இலக்கியம் காளிதாசனின் சாகுந்தலை மட்டும்தான். அதுவும் காதலித்தால் வாழ்க்கை சோகத்தில் முடியும் என்று காட்டுகிறது. ஆனால் சங்க இலக்கியத்தில், எந்தப் பாடலும் காதல் சோகத்தில் கொண்டு விடும் என்று சொல்லவில்லை.

சித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பெற்றுக் கொண்டவை என்கிறார். நமக்கு எழுகின்ற கேள்வி, சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சித்திரையும், விகாச நட்சத்திரத்தில் இருந்து வைகாசியும் இன்னபிற நட்சத்திரங்களில் இருந்து எஞ்சிய மாதங்களும் வந்தன என்கிறீர்களே, நட்சத்திரங்களின் பெயர்கள் இன்றும் மாறாமல் உச்சரிக்கப்படும்போது, அவை மாதப் பெயர்களாகும்போது மட்டும் மாறியது எப்படி?

சுருக்கமாகச் சொன்னால் நாகசாமி தன் விருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த விருப்பமானது, தமிழுக்கு விரோதமாக, உண்மைக்கு எதிரானதாக இருக்கிறது.

பேரா. மறைமலை இலக்குவனார்

சமஸ்கிருதம் என்பது பிராமணர்களுக்குரியது என்கின்ற மாயை உண்மையான அறிஞர்களுக்கு இருக்காது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது, அங்கிருந்த சமஸ்கிருதத் துறைத் தலைவரிடம், ‘என்ன கற்றுத் தருகிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் பாடத்திட்டத்தை எடுத்துக் காட்டினார். அங்கே அவர்கள் படிப்பது பவுத்த சமஸ்கிருதம் (Budhist Sanskrit). வடமொழிப் பட்டயப் படிப்பின் போது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் கோசாம்பி மற்றும் மற்றொரு பேராசியருடன் உரையாடும்போது, கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக, இந்தியத் துணைக் கண்டத்தில், படைக்கப்பட்ட எல்லாக் காவியங்களும் தென்னாட்டிலே படைக்கப்பட்டவைதான் என்று சொன்னார்கள்.

பார்சன் என்றொரு மிகச்சிறந்த படைப்பாளி. இவர் உலக நாடகத் துறையின் முன்னோடி என்று சொல்லத்தக்க தகுதியுடையவர். அவருடைய படைப்புகள் எல்லாம், திருவனந்தபுரம் அரண் மனையில்தான் கிடைத்தன. இலக்கியங்களைப் படைப்பதற்கு மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாப்ப தற்கும் தென்னகம்தான் தளமாக இருந்திருக்கிறது.

வேதக் கடவுளைத்தான் தொல்காப்பியர் பின்பற்றியிருக்கிறார் என்கிறார் நாகசாமி. நமக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவர் எழுதியிருக்கிறார். சமஸ்கிருதம் பிராமணர்களால் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதே தவிர, அவர்களின் மொழி அன்று என்பதை சமஸ்கிருதத்தை நன்கு படித்தவர்கள் அறிவார்கள். இந்திரவிழா நடந்தது எங்கே? சோழநாட்டில்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நம்முடைய தொன்மங்களை எல்லாம் இழிவான வையாகச் சித்தரித்து விட்டு, அவர்கள் உருவாக்கிய ராமனை மட்டும் ஒழுக்க சீலனாகக் காட்டி யிருக்கிறார்கள். எனவே அவர்கள் யாரையயல்லாம், எவற்றையயல்லாம் இழிவாகக் காட்டியிருக் கிறார்களோ, அவர்கள் எல்லாம், அவையயல்லாம் தமிழ்த்தொன்மம்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிஞர் ஜார்ஜ் ஹாட் நாகசாமியின் கருத்தைக் கடுமையாக மறுக்கிறார். அறிஞர் மிக்கேல் விட்ஸ்செட், ‘நாகசாமி சமஸ்கிருதத்தை நன்றாகப் படிப்பது நல்லது ’ என்கிறார். நாமும் சொல்கிறோம், முதலில் தமிழையும் நன்றாகப் படியுங்கள்.

பெ. மணியரசன் (பொதுச்செயலார், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி)

ஒரு சிறந்த கருத்தரங்கம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘எம்முளும் உளன் ஒருவன் பொருநன்’ என்கிறது புறநானூறு. அப்படி ஒரு போராளி அன்று, பல அறிஞர்கள், அறிவாயுதங்களை, கருத்தாயுதங்களை ஏந்தி வந்து இங்கே போர் முழக்கம் செய்திருக்கிறார்கள். நாகசாமி மொழியோடு நின்றுவிடவில்லை. அவருடைய அடித்தளம் இனப்பிரச்சினைதான். அவர் சொல்கிறார், தமிழும், சமஸ்கிருதமும் ஒன்றாகத்தான் இருந்தன, கொடுத்து வாங்கிக் கொண்டு இருந்தன. 50 ஆண்டுகளாகத்தான் வெவ்வேறானவை என்று பேசப்பட்டது. இந்த 50 ஆண்டுகள் என்றால் எது? தி.க., தி.மு.க. இவை ஓங்கி வளர்ந்த காலம். அதாவது, ஆரியத்திற்கு எதிராக இனப்போராட்டம் ஓங்கி வளர்ந்த காலம். இவருக்கு நாம் பதில் சொல்வதால் இவருக்கு விளம்பரம் தருகிறோம் என்று கருதவேண்டியதில்லை. இது ஓர் ஆதிக்க இனக் கருத்தியலை எதிர்ப்பது. இந்த எதிர்ப்புகள் பல வகைகளில் இருக்க வேண்டும். அறிவுத்தளத்தில், அரசியல் களத்தில் இந்த எதிர்ப்புகள் எழவேண்டும். தமிழ் உணர்வாளர்கள் நடத்துகின்ற ஏடுகள் இக்கருத்தை அதிகமாகப் பரப்புரை செய்ய வேண்டும். எங்களைச் சீண்டினால் நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

தமிழை dialect என்கிறார் நாகசாமி. பழங்குடி மொழியின் கிளைமொழியாக இருந்தது. சமஸ்கிருதம் வந்துதான் அதைச் செம்மொழியாக வளர்த்தது என்கிறார். எல்லா மொழிகளும், ஒரு காலத்தில் dialectஆக இருந்திருக்கும்தான். ஆனால் சமஸ்கிருதம் மொழியாகிவிட்ட காலத்திலும்கூட தமிழ் dialect ஆகவே இருந்தது என்று சொல்வதற்கு நாகசாமிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும். எத்தனை ஆயிரமாண்டுகள் ஆனாலும், ஆரியம் என்பது தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

முனைவர் பூங்குன்றன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முதுமுனைவர் இளங்கோ, முனைவர் ஜெயதேவன், பேராசிரியர் அரசேந்திரன், எழுத்தாளர் கோவை ஞானி, முனைவர் மதிவாணன், புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நாகசாமியின் கருத்துகளை சான்றுகளோடு மறுத்து உரையாற்றினார்கள்.

ஆரிய மாயை குறித்த விழிப்புணர்வினை மீண்டும் மக்களிடத்தில் பரப்புரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

தொகுப்பு: இரா.உமா