பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 7

மூலபவுத்தம் ஒன்றுதான் என்றாலும், பிந்தைய காலங்களில் பிரிவுகள் பல தோன்றிவிட்டன.

பவுத்தம் என்று பேசுவதை விடப் பவுத்தங்கள் குறித்துப் பேசுவது பயன் மிகுத்துத் தரும்.

அதற்குப் புத்தர் காலத்திற்குப் பிந்தைய கால பவுத்த வரலாற்றையும், புத்தரின் சமகால பவுத்த வரலாற்றையும் ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டுவது அவசியம்.

புத்தர் 80 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.மு.563ஆம் ஆண்டு பிறந்த அவர், கி.மு.483ஆம் ஆண்டு மறைந்தார். புத்தரின் மரணத்தைப் “பரிநிர்வாணம்” (பரிநிப்பான்) என்பார்கள் பவுத்தர்கள்.

புத்தர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்ட சுபக்தர் என்ற பவுத்தத் துறவி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

“அவர் (புத்தர்) இறந்துவிட்டார் என்று யாரும் கவலைப்படாதீர்கள். அவரிடம் இருந்து நாம் விடுதலை அடைந்து விட்டோம். இது சரியான வழி, இது தவறான வழி என்று நமக்குத் தொல்லை கொடுத்தவர் அவர். இப்பொழுது நாம் எதை விரும்புகிறோமோ அதைத் தடையில்லாமல் செய்யலாம். அவர் இறந்தது நன்மையே. அதற்காக ஏன் அழவேண்டும்? ஏன் புலம்ப வேண்டும்? அவர் இறந்தது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி அல்லவா?” என்று சுபக்தர் கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரமிட்டார்.

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த துறவி மகாகாசிபர், பின்னர் துறவிகளான ஆனந்தர், உபாலி ஆகியோருடம் பேசினார்.

புத்தருக்கு எதிராக ஒரு பவுத்தத் துறவியே இப்படிப் பேசுகிறார் என்றால், அது பவுத்தத்திற்கு எதிராக விழுந்த முதல் வித்து என்று இவர்கள் கருதினார்கள்.

எனவே புத்தரின் முதன்மைத் துறவிகளான மகாகாசிபர், ஆனந்தர், உபாலி ஆகிய இவர்கள் முதலாம் பவுத்தப் பேரவையைக் கூட்ட முடிவெடுத்தார்கள்.

புத்தரின் மறைவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட மன்னன் அஜாதசத்ரு உதவியுடன், தலைநகர் ராஜகிருகத்திற்கு அண்மையில், சதபானி மலைக்குகையின் வாயிலுக்கு அருகில் முதல் பவுத்தப் பேரவை கூடியது.

இம்முதலாம் பேரவையில் புத்தரின் அனைத்துக் கோட்பாடுகளையும் வினயபிடகம் - சுத்தபிடகம் - அபிதம்ம பிடகம் என்று மூன்று பிரிவுகளாகத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார்கள். இதுவே “திரிபிடகம்” என்று அழைக்கப்படுகிறது. பிடகம் என்றால் பிரிவு என்று பொருள்.

முதலாம் பேரவையில் தொகுக்கப்பட்ட இத்திரிபிடகம் எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை என்பது முக்கிய செய்தி.

இதைத் தொடர்ந்து அடுத்த 100 ஆண்டுகளில் இரண்டாம் பவுத்தப் பேரவை வைசாலியில் கூட்டப்பட்டது.

மகாவம்சம் தரும் தகவலின் அடிப்படையில் மக்கன் காலசோகனின் 10ஆம் ஆட்சியாண்டில், தட்சசீலத்தைச் சேர்ந்த பவுத்தத் துறவி ரேவதர் தலைமையில் சபகாமி, சால்கா, குஜ்ஜசோபித, யச, சம்புத்தசானவாசிக ஆகிய ஐந்து துறவிகள் இப்பேரவையில் முக்கியபங்கு வகித்துள்ளனர்.

இந்த இரண்டாம் பவுத்தப் பேரவையில், வைசாலியைச் சேர்ந்த வஜ்ஜியத் துறவிகள் ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். அதாவது, புத்தரால் உருவாக்கப்பட்ட துறவிகளுக்கான விதிமுறைகளைச் சொல்லும் வினய பிடகத்தைத் திருத்தி, மாற்ற வேண்டும் என்பது வஜ்ஜியர்களின் கோரிக்கை. அவர்கள் முன்வைத்த பத்துத் திருத்தங்கள் வருமாறு:

1. உணவுக்காக உப்பு சேகரித்து வைக்கக்கூடாது என்பது விதி. அதை மாற்றி உப்பைச் சேகரித்து வைத்துக்கொள்ள விதியைத் திருத்த வேண்டும்.

2. பகலில் உரிய நேரத்திற்குப் பின்னர் உணவு உண்ணக்கூடாது என்ற விதியை மாற்றி உண்ணலாம் என்று திருத்த வேண்டும்.

3. உணவு உண்ட பிறகு, மக்கள் அழைத்தாலும் ஊருக்குள் சென்று உண்ணக்கூடாது என்ற விதியை மாற்றி உண்ணலாம் என்று திருத்த வேண்டும்.

4. உபோசத போன்ற முக்கிய நாள்களில் துறவிகள், ஒன்றாகக் கூடி விருந்து உண்ணவேண்டும் என்ற விதியை மாற்றித் தனித்தனியாகப்போய் உண்ணலாம் என்று திருத்த வேண்டும்.

5. பெரும்பான்மைத் துறவிகள் இல்லாமல் சங்கக்கூட்டம் நடத்தக்கூடாது என்ற விதியை மாற்றி நடத்தலாம் என்று திருத்த வேண்டும்.

6. புத்தர் சொன்ன சங்க விதிகளை, நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதியை மாற்றி ஏற்காமலும் இருக்கலாம் என்று திருத்த வேண்டும்.

7. உணவுக்குப் பின் கடையாத பால் அருந்தக்கூடாது என்ற விதியை மாற்றி அருந்தலாம் என்று திருத்த வேண்டும்.

8. புளிக்காத கள் அருந்தலாம் என்ற விதியை மாற்றிப் புளித்த கள்ளும் அருந்தலாம் என்று திருத்த வேண்டும்.

9. துறவிகளுக்கான இருக்கை, படுக்கைகளையே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றி அனைத்தையும் பயன்படுத்தலாம் என்று திருத்த வேண்டும்.

10. தங்கம், வெள்ளி போன்ற உயரிய பொருள்களை நன்கொடையாகப் பெறக்கூடாது என்ற விதியை மாற்றிப் பெற்றுக்கொள்ளலாம் என்று திருத்த வேண்டும்.

இந்தப் பத்து திருத்தங்கள் குறித்து இரண்டாம் பேரவை கடுமையாக விவாதித்தது.

இவைகளுள் 8ஆவதாக வரும் கள் அருந்துவது குறித்த விதி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதைப்பற்றி பின்னர் பேசுவோம்

இறுதியில் பேரவைத் தலைவர், துறவி ரேவதர் அறிவித்தார். “இந்தப் பத்துத் திருத்தங்களும் புத்தருக்கும், பவுத்தத்திற்கும் எதிரானது. ஆகவே திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.”

உடனே வஜ்ஜியத் துறவிகள் பேரவையை விட்டு வெளியேறி, அவர்கள் ஒரு தனிப்பிரிவாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

முதன் முதலாகப் பவுத்தம் இரண்டாக உடைந்து பிளவுபட்டது, வைசாலியில்.

புத்தரின் மூலபவுத்தம் “ஸ்தவிரதம்” என்றும், பிளவுபட்டுப் பிரிந்த பவுத்தம் “மகாசாங்கியம்” என்றும் அழைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து அடுத்த 400 ஆண்டுகளில் பவுத்தம் 108 பிரிவுகளாகப் பிரிந்தன என்று சில பவுத்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த 108 பிரிவுகள் குறித்துச் சரியான தகவல்கள் இல்லை.

மாறாக 18 பவுத்தப் பிரிவுகள் பற்றிய செய்திகள் இருக்கின்றன.

1. ஸ்தவரதம் 2. மஹிசாசக் 3. விரிஜிபுத்ரக் 4. தர்மோத்தரி 5. பத்ரயாளிக் 6. சன்னகாரிக் 7. சம்மிதியக் 8. மகாசாங்கியம் 9. கோகுலிக் 10. ஏக வியாவ ஹாரிக் 11. பிரக்ஞப்தி 12. பாஹுலிக் 13. சைதன்ய 14. சர்வாஸ்தி 15. தர்மகுப்தி 16. காஸ்யபீய 17. சங்கராந்திக் 18. சூத்ரக் - இவை பதினெட்டும் பவுத்தப் பிரிவுகள்.

இவைதவிர சர்வாங்திகம், சவுந்திராந்திகம், யோகசாரம், மாத்திமிக் போன்ற பவுத்த தத்துவப் பரிவுகளும் இருந்தன.

இவைகள் அனைத்தும் தத்தனக்கென, தனித்தனிக் கொள்கைகள், நடைமுறைகளை வைத்துக் கொண்டு மூலபவுத்தத்தில் இருந்து வேறுபட்டு இயங்கின.

பிரிந்துபோன முதல் பவுத்தப் பிரிவான மகாசாங்கியத்தின் ஒரு பிரிவான சைதன்யத்தின் தலைமையிடம் தான்சயகடகம், ஆந்திரம். ஆந்திராவின் மேற்குப் பகுதியில் சம்மிதீய என்ற பிரிவும் இருந்தது.

ஆந்திராவில் பிறந்த சைதன்ய - சம்மிதிய ஆகிய இரண்டையும் இணைத்து( மூல பவுத்தமான ஸ்தவிரத்தை விட்டுவிட்டு) எஞ்சி இருந்த பவுத்தப் பிரிவுகளின் தத்துவக் கருத்துகளை எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய பவுத்தப்பிரிவு ஆந்திராவில் உருவானது.

அந்தப் பிரிவை மகாயானம் என்றார்கள்.

மகாயான பவுத்தப் பெரும்பிரிவு கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இதை உருவாக்கியவர் ஸ்ரீபர்வதம் என்று சொல்லப்படும் நாகர்ஜுனகுண்டாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகர்ஜுனர் என்பவர். இவர் ஓர் ஆரியர்.

மகாயானத் தோற்றத்தின் பின்னர், ஏனைய பவுத்தப் பிரிவுகள் மங்கத் தொடங்கின.

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தரால் உருவாக்கப்பட்ட பவுத்தம் “தேரவாதம்”. இது மூலபவுத்தம்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நாகர்ஜுனரால், புத்தரின் பெயரால் உருவாக்கப்பட்ட பவுத்தம் “மகாயானம்”. இது புதிய பவுத்தம்.

தேரவாதம், திராவிடம்.

மகாயானம், ஆரியம்.

- மீண்டும் சந்திப்போம்.