சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் 25.01.2012 அன்று ஒரு கண்காட்சி நடைபெற்றது. அது இந்து ஆன்மீகச் சேவை மையத்தின் நான்காம் ஆண்டுக் கண்காட்சி.

இக்கண்காட்சியின் அமைப்புக் குழுத் தலைவர் ஆர்.நடராஜ்.

இவர் தமிழகக் காவல்துறையின் முன்னாள் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். இப்பொழுது தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் தலைவராக இருக்கிறார்.

இக்கண்காட்சியில் நடராஜ் பேசும்போது,"சட்டம் ஒழுங்கு, காவல்துறையினருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சறுக்கலில் இருந்து மீள்வதற்குக் கால அவகாசம் தேவை. சென்னை மாநகரைக் காக்கும் காவல்துறை, பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. ஆனால் திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலும்தான் சென்னை மாநகரின் சோதனைச் சாவடிகளாகும். காவல் துறையினர் தங்கள் பணியில் பக்தியைச் செலுத்தினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்" என்று பேசியிருக்கிறார்.

கடவுளை வணங்குவதும், பக்தி செலுத்துவதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் பிறர் தலையிடுவது நயத்தக்க நாகரிகம் அன்று.

ஆனால் அரசுப் பொதுத்துறையின் உயர் பொறுப்பில் உள்ள நடராஜின் மேற்சொன்ன பேச்சு, அவர் அரசு அதிகாரியா அல்லது அரசுத்துறையில் ஆன்மீகத்தைப் புகுத்த வந்த ஆன்மீகப் பிரதிநிதியா என்னும் ஐயத்தை எழுப்புகிறது.

சட்டம், ஒழுங்கு, காவல்துறையினருக்குப் பெரும் பிரச்சினை என்பதிலும், சென்னை மாநகரில் காவல்துறை பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் கடமையாற்றுகிறது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலும்தான் சென்னை மாநகரின் சோதனைச் சாவடிகள் என்று கூறியுள்ளார். இந்தப் பேச்சு அவர் முன்னர் பணியாற்றிய காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை.

சென்னை மாநகரத்திற்கே இவ்விரு கோயில்களும்தான் சோதனைச் சாவடிகள் என்றால், காவல்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள மற்ற சோதனைச் சாவடிகள் மாநகரில் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

மேலும் காவல் துறையினர் தங்கள் பணியில் பக்தியைச் செலுத்தினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற அவரின் பேச்சு நகைப்புக்குரியதாக உள்ளது.

காவல் துறையினர் தம் பணியில் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டுமா அல்லது பக்தியைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா?

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்கிறது இந்திய அரசியல் சாசனம். இந்திய அரசுப் பணி அதிகாரி ஒருவர் மதச்சார்புடன் நடந்துகொள்ளக் கூடாது என்பது அரசியல் சாசனத்தின் அறிவுரை.

மாறாகத் திருப்பதி திருமலை தேவஸ்தானம், ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சின்மயா மி­ன், மாதா அமிர்தானந்தமயி மடம், காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், ஈஷா அறக்கட்டளை, வேலூர் நாராயணி பீடம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, பிரம்ம குமாரிகள் அமைப்பு உள்பட 160க்கும் மேற்பட்ட இந்து ஆன்மீக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்து ஆன்மீகச் சேவை மையத்தின் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற்றதே எதிர்க்கப்பட வேண்டியதாகும். இந்நிலையில் அவருடைய பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது.

அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பெற்ற அரசின் அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட மத நிகழ்வில் பங்கேற்பதும், அதற்குச் சார்பாய் நின்று பேசுவதும் அறமன்று. தேர்வாணையக் குழுவின் தலைவராக உள்ள இவர், மத அடிப்படையில்தான் நியமனங்களைச் செய்வாரோ என்னும் ஐயம் எழுந்துள்ளது.

மத மாநாட்டில் கலந்துகொண்ட அவர், அரசுப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதுதான் விவேகம்.