இலங்கையில் எந்த நேரமும் வெடிகுண்டுகள் வெடிக்கலாம் என்று வெடிபொருள் நிபுணர்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். யாருடைய வெடிகுண்டுகள், எதற்காக வெடிக்கலாம் என்பதை மட்டும் அவர்களால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

கடந்த காலங்களிலும் வெடித்தன குண்டுகள். இனவெறி தலைக்கேறி ஈழத்தமிழர்களைப் பூண்டோடு அழிக்க, இரசாயன வெடிகுண்டுகளும் வெடித்தன ஈழத்தில், வெடிக்கச் செய்தவன் இனவெறி இராசபக்சே.

கொலைவெறி அடங்கா இலங்கை அரசு இப்போது ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி, கல்குடா, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டு, பொட்டுவில், அம்பாறை போன்ற பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் வெடிகுண்டுகளைப் பெருமளவு வைக்கத் தொடங்கி இருக்கிறது. அவை சீனாவுக்குச் சொந்தமானவை

 இலங்கை அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சாலைகள் அமைக்கவும், கட்டுமானப்பணி காரணங்களுக்காகவும் இவ்வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாக அறிவித்தது. சாலைகள் அமைக்க வெடிகுண்டுகளா? சாலைகள் அமைக்கும் மூலப்பொருள்களில் வெடிகுண்டும் ஒன்றா?

அழிப்பதற்குத்தான் குண்டுகள் பயன்படும். கட்டுமானம் கட்ட குண்டுகள் பயன்படுகின்றன என்ற செய்தியை இலங்கைதான் முதன்முதலாகச் சொல்கிறது.

தென் கிழக்காசிய வல்லாண்மைப் போட்டியில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தச் சீனா முயல்வது உலகறிந்த செய்தி.

இந்தியாவின் வட மேற்கில் பாகிஸ்தானுடன் உறவு. தெற்கே இலங்கையுடன் உறவு.

இலங்கைக்கு உதவுவது போன்று அங்கே தன் கால்களை வலுவாக ஊன்றி இருக்கிறது சீனா.

சீனாவின் குறி இந்தியா. சீனாவின் கைப்பாவை இலங்கை.

இங்கே ஒரு செய்தியைக் கவனிக்க வேண்டும்.

சீனாவின் இறக்குமதிகளான வெடிபொருள்கள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள், குற்றவாளிகள் என இவைகள் ஒன்றுமே சிங்களர்கள் வாழும் தென் இலங்கையில் வைக்கப்படவில்லை. மாறாக அனைத்துமே தமிழர்கள் வாழும் ஈழப்பகுதிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.

இராசபக்சேவின் நோக்கம் ஈழத்தமிழர்களை முற்றாக அழிப்பது. ஆனால் சீனாவின் நோக்கம் இந்தியாவை பணியச் செய்ய இலங்கையைத் தன் கைப்பிடியில் வைத்திருப்பது. இப்பொழுது சீனாவின் பிடியில் இலங்கை. சீனாவின் வெடிபொருள்கள் இலங்கையின் காவல் நிலையங்களில்.

நேற்று இராசபக்சேவால் வெடிக்கச் செய்த குண்டுகள் ஈழத்தில். நாளை சீனாவால் குண்டுகள் வெடிக்குமானால் அது சிங்களத்தையும் உள்ளடக்கும். இராசபக்சேவுக்கு இனவெறி முக்கியம். சீனாவுக்கு இலங்கையின் அடிமைத்தனம் முக்கியம்.

நாளை குண்டுகள் வெடிக்கலாம் என்று சொன்ன வெடிகுண்டு நிபுணர்கள், சீனாவை நினைக்காமலா சொல்லி இருப்பார்கள்?