நூல் மதிப்புரை - என்னருமை ஈழமே !

நூலாசிரியர் : கவிஞர் ஈரோடு தமிழன்பன்

புதுக்கவிதையில் “காவியம் ” சாத்தியமா?

இந்தக் கேள்விக்கு விடைதேட வேண்டு மானால் சற்றுப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

புதுக்கவிதை தமிழுக்கு ஒரு இறக்குமதி வடிவமாகத்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அது மேலை நாட்டின் இருபதாம் நூற்றாண்டு வடிவம். இரண்டு உலகப்போர்களால் வாழ்க்கையும், சமூகமும் நசிந்து போனபோது, உருவாக்கப்பட்ட வடிவம் அது. அவலங்களையும், அழிவையும் கண்டு, அவநம்பிக்கை கொண்டவர்கள் விரக்தியின் விளிம்பில் நின்று தேர்ந்தெடுத்த வடிவம். இந்த வடிவத்தை மேற்கொள்ள ஒரு நியாயம் கற்பிக்கப் பட்டது. மரபு வழிக்கவிதை அலங்கார குணம் உடையது. வருணனை என்னும் ஒப்பனை மிக்கது. சொற்களை உபரியாகத் தருவது. அழிந்த வாழ்க்கை யின் சோகங்களைச் சொல்ல, அலங்காரமும், வருணனையும், மிகுதியான சொற்களும் ஏன் என்று கேள்விகேட்டனர். சோகத்தை நேரடியாக, பட்டென்று, பளிச்சென்று சொல்ல மரபுவடிவம் உகந்தது அல்ல என்று கூறி மாற்று வடிவமாகப் புதுக்கவிதையைக் கண்டார்கள். தன்னுள்ளே ஓர் உலகத்தைக் கண்டு அதனுள்ளே மூழ்கிக்கிடந் தார்கள்.

மேலை நாட்டில் பிற்போக்குக் குணத்தின் வாரிசாக வந்த புதுக்கவிதையை, தமிழ் நாட்டில் வரவேற்றவர்கள் பிற்போக்குப் பார்வை உடையவர்களே. மேலை நாட்டின் சூழ்நிலையையும், தமிழகச் சூழ்நிலையையும் வேறுபடுத்திப் பார்க்க அவர்களால் முடியவில்லை. மேலைநாட்டுப் புதுக்கவிதைக்காரர்களுக்கும் தமிழ்நாட்டில் அதை அறிமுகம் செய்த புதுக்கவிதைக்காரர்களுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை, இருதரப்பினரும் சமுதாய நோக்கு இல்லாதவர்கள் என்பதுதான் ! மோசமான உள்ள டக்கத்தால் மட்டும் அல்ல, புதுக்கவி தைக்காரர்கள், தமிழும் தமிழ் மரபும் அறியாத வர்கள் என்ற குற்றச் சாட்டாலும் புதுக்கவிதை தொடக்க காலத்தில் எதிர்க்கப் பட்டது. உரை நடையை உடைத்துப் போட்டால், அல்லது வளைத்துப் போட்டால் அதுதான் புதுக் கவிதை என்று நையாண்டி பேசும் நலிந்த நிலையில் புதுக்கவிதை இருந்தது.

புதுக்கவிதையின் வடிவம் பிற்போக்காளர் களுக்கு மட்டுமே உரிய சொத்து அல்ல புற உலகைக் காட்டவும், சமுதாயப்பிரச்சினைகளை முன்னெ டுக்கவும், புதுக்கவிதை வடிவத்தைப் பயன்படுத் தலாம் என்ற எண்ணம் தமிழ் உணர்வாளர் களிடமும் சமுதாயப்பார்வை உடையவர்களி டமும் காலப்போக்கில் எழுந்தது. சமுதாயப் பிரச்சினைகளைச் சுற்றிவளைத்துச் சொல்லாமல் நேரடியாகச் சொல்ல ஏற்றவடிவமாய் முற்போக்கா ளர்களும் கண்டார்கள்.

புதுக்கவிதையின் உள்ளடக்கம் மாறுதலுற்றது. அது புதிய பரிமாணத்தைப் பெற்றது. தமிழ் உணர்வும், சமுதாய அக்கறையும், முற்போக்குச் சிந்தனையும் பிற்காலத்தில் புதுக்கவிதைகளில் எளிதாக நுழைந்து சிம்மாசனம் போட்டுக் கொண்டன.

புதுக்கவிதை என்னும் நவீன இலக்கிய வடிவத்தைத் தமிழ் இலக்கிய மரபோடு இணைத்து எழுத முன்வந்தவர்களில் தலைமை பீடத்திற்கு உரியவர் திறனாய்வு நோக்கில் தமிழன்பன். நெருடாவையும், பாரதிதாசனையும் “பேருக்கு” முன்னோடியாகக் கொள்ளாமல், மெய்யாகக் கொண்டதால், வெற்றி அவருக்குச் சிரமமில்லாமல் கிடைத்தது.

புதுக்கவிதையை அங்கீகரித்தவர்களும், புதுக்கவிதையை மனப்பாடம் செய்து ஒப்பிக்க முடியாது, காவியம் எழுத முடியாது என்று கூறினர். முதல் கூற்றை முறியடித்த சிலருள் தமிழன்பன் ஒருவர் என்றால், இரண்டாம் கூற்றை முறியடித்த முதல்வர் தமிழன்பன் தான்.

புதுக்கவிதையில் காவியம் எழுத முடியுமா என்றால் காவியம் எழுத முடியும் என்று உறுதியாய் விடை சொல்ல வந்த படைப்புதான் “ என் அருமை ஈழமே ”.

காவியத்தின் இலக்கணமும் மாறும் ! சிலப்பதிகாரமே அப்படிப்பட்ட காப்பியம்தான்.

காவியம் பற்றிய பழைய கருத்தியலை மனத்தில் தேக்கி வைத்துக்கொண்டு “ என் அருமை ஈழமே ” என்ற படைப்பைப் பார்க்கக் கூடாது. புதுக்கவிதை என்ற வடிவத்தில் புதுக்காவியம் தோன்ற முடியும். அந்த நம்பிக்கையோடு தமிழன்பன் படைப்பைப் பார்க்க வேண்டும்.

“ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன், தென் தமிழகத்து, இடுப்பில் இருந்த குழந்தை ”

என்று தொடங்கி, இலங்கையின் வரலாற்றை நூல் முழுவதும் ஆங்காங்கே சொல்லிக்கொண்டே போகிறார் கவிஞர். இது வெறும் வரலாறு அல்ல. ஈழத் தமிழனின் உரிமைப் போரைப்படம் பிடிக்கும் வரலாறு. சில கவிதைகளைப் படிக்கும்போது கண்கள் குளமாகின்றன. அடுத்த கவிதையில் கண்கள் குளமாவது மாறி, கோபக்கனல் பற்றி எரிகிறது. தொடர்ந்து பல வகையான உணர்வுகளுக்கு வாசகன் உட்பட நேர்கிறான்.

ஈழப்பிரச்சினை ஏற்கனவே சிக்கலானப் பிரச்சினை. அமெரிக்காவைப் பின்லேடன் தாக்கிய பிறகு சர்வதேச நாடுகளின் முகமே மாறிப்போனது. மத்திய அரசுக்கு முகமே இல்லாதுபோனது. தமிழ்நாட்டில் எல்லோருக்கும் முகம் இருந்தது. ஆனால் முகமூடியோடு இருந்தது. சேறும் சகதியுமான ஈழப்பிரச்சினையில் சேற்றில் கால் பதிக்காமல் “ என் அருமை ஈழமே ” என்ற ஒற்றைக் குரலை முன்னுக்கு வைத்துக்கொண்டு சாமர்த்தியமாக நடந்திருக்கிறார் தமிழன்பன். இந்தச் சாமர்த்தியம் இரண்டாம் தர சாமர்த்தியம் அல்ல. மூன்றாம் தர தந்திரம் அல்ல. இந்த நூலின் உயர்ந்த நோக்கத்தைக் காப்பாற்றும் கடும் முயற்சி ! பிரச்சினைகளில் அவர் சிக்கி இருந்தால், நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கும். ஈழப்பிரச்சினையில் தமிழனை ஒன்று பட்டுச் சிந்திக்க வைத்தது எதாவது உண்டென்றால் அது இந்த நூல் மட்டுமே. தமிழன்பன் முன்னுரையும் இதற்கு ஆதாரமாக அமைகிறது.

“ ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஈழத்தமிழர்கள் சொல்லவில்லை. ஈழப்போராளிகள் சொல்லவில்லை. உலகெங்கும் உள்ள தமிழர்களும் விடுதலை விரும்பிகளும் சொல்லவில்லை. இலங்கை அரசு, அதை ஆதரிக்கும் அரசுகள் சொல் கின்றன. எந்த விடுதலைப்போரும் விடுதலை அடையும் முன் முடிவுக்கு வருவதில்லை என்பது உலகவரலாறு தெரிவிக்கும் உண்மை ” . “ இலங் கையை ஆதரிக்கும் அரசுகள் ” என்று அவர் பெயர் சொல்லவில்லை. பெயர் சொல்லி இருந்தால் நூலின் நோக்கம் திசைமாறி இருக்கும் ! நோக்கம் நொண்டியாகக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதே சமயம் அத்தகைய அரசுகள் உண்டு என்பதைப் பதிவு செய்து, தன் நேர்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஈழத்தில் இவ்வளவு நடந்தும் உலகம் கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கவிதைகளில் வெளிப்படுகிறது.

“வேர்கள், பிடுங்கி எறியப்படுகின்றன, பூமி, மெளனம் சாதிக்கிறதே ”

அடுத்து கூறுகிறார் -

“நட்சத்திரங்கள்தட்டித் தகர்க்கப்படுகின்றன, விண், கண் திறக்கவில்லையே...., இன்னும் இப்படி எவ்வளவு காலம் ? ”

இப்போதும் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்திறக்கும் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. எப்போது திறக்கும் என்று கேட்கிறார். இதற்கெல்லாம் அடிப்படையில் யார் காரணம்? பதில் வருகிறது.

“ நாம் மட்டும், இங்கே இருக்கிறோம், கதைகள் கேட்டுக்கொண்டும், மகாத் தொடர்கள் பார்த்துக்கொண்டும், பங்குச் சந்தை நிலவரம், பார்த்துக்கொண்டும், சோறு தின்றுகொண்டும் , சோம்பல் முறித்துக் கொண்டும் ”

எது எப்படி இருந்தால் என்ன, எல்லாருக்கும் பொதுவான ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறதே. அது பற்றியும் சொல்கிறார்.

“பார்வை செத்த உலகுக்கும், ஏழை நாடுகளுக்குப் பாடைகள் தயாரிக்கும், ஐ.நா. சபைக்கும் , ஈழமே உனது பூமியில், என்ன நடக்கிறது என்பது தெரியவே தெரியாதா?”

யாரும் பூனைக்கு மணி கட்ட வராவிட்டால் யார்தான் அதைச்செய்வது? புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது. அவர்கள் வந்த இடமே வைகுண்டம் என்று இருக்கலாகாது, தங்கள் வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டும் என்கிறார்.

“புகலிடம் எல்லாம், புகழிடமல்ல, அவையெல்லாம், நகலிடம் !, ஒருவனுக்குத் தாயகமே , அசலிடம்”

ஒரு கவிதையைப் படித்து முடித்தவுடன் அடுத்த கவிதையைப் படிக்க முடியவில்லை. நம்மிடம் உணர்வுகளும், சிந்தனைகளும் போட்டி போட்டுக்கொண்டு, நம்மை உணரவும், யோசிக்கவும் செய்கின்றன. அதன் பின்னர்தான் அடுத்த பக்கத்திற்கு நகர முடியகின்றது. இதயம் கனக்கிறது, வலி தெரிகிறது, மூளை சுறுசுறுப்பாகிறது. பின்னர் நம்மைநாமே ஆறுதலுக்கு உட்படுத்திக் கொண்டுதான் அடுத்த கவிதையை அதே அனுபவத்தோடு வாசிக்க முடிகிறது.

தமிழன்பன் தன் படைப்பில் எல்லாவற் றையும் பதிக்கிறார். இலங்கையின் அன்றைய வரலாறு தொடங்கி நேற்றைய வரலாறு வரை எல்லாம் பேசப்படுகின்றன. முக்கிய நிகழ்வுகள் எல்லாம் வரிசையாய்ச் சொல்லப்படுகின்றன.

அதே சமயம் இவையாவும், வெறும் பதிவுகள் அல்ல. சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பாரி அல்ல. இந்த நூல் இருட்டில் கிடைத்த கை விளக்கு. இருட்டு நிரந்தரம் அல்ல என்று சொல்கிறது ஒரு கவிஞனின் வாக்கு ! கவிஞனின் வாக்குப் பொய்க்காது.

- சிகரம் ச. செந்தில்நாதன்

Pin It