தமிழருவி மணியன், ஜுனியர் விகடன் வார இதழில் நாம் எங்கே போகிறோம் என்று ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். விதவிதமான செய்திப் பிழைகளும், வெறுப்பின் வெளிப்பாடுகளுமாய் அத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ் பற்றி எழுதியிருந்த போது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு தகவலை அவர் வெளியிட்டிருந்தார். 1998 வரையில், கல்விக் கூடங்களில் தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவது குறித்து, அதற்கு முன்பு மூன்று முறை முதல்வராக இருந்த கலைஞர் சிந்திக்கவே இல்லை என்பது அவருடைய குற்றச்சாட்டு.

Tamilaruvi_manianமணியன் செய்திகள் தெரியாதவர் இல்லை. கலைஞர் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் எப்போதும் அவருக்குள்ள வெறுப்பு காரணமாக அவர் அப்படி எழுதியிருக்கக்கூடும். எனவே, அவருக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பது நம் நோக்கமில்லை. இருப்பினும் தமிழ் மக்களுக்கு உண்மை உரைக்க வேண்டிய கடமை நம் அனைவ ருக்கும் உள்ளது.

முதல் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற காலத்திலேயே 1970 ஆம் ஆண்டே கல்லூரி வரை தமிழே பயிற்று மொழி என்னும் சட்டத்தை அவர் முன்மொழிந்தார். 1970 நவம்பர் 30 அன்று தமிழ்நாடு சட்டமன் றத்தில், அவரால் முன்மொழியப்பட்ட அச்சட்ட முன்வடிவை, ம.பொ.சி. வழி மொழிந்தார். சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் காங்கிரசார்

அத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். 10.12.1970 அன்று மதுரையில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில், கலைஞர் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைய தமிழ்த்தேசியத் தலைவர்களும் அன்று அக்கூட்டத்தில் இருந்தனர். இராஜாஜியின் சுதந்திராக் கட்சி அத்தீர்மானத்தைக் கடுமையாகச் சாடியது.

சட்ட மன்றத்தில் இது குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விநாயகத்திற்கும், முதல மைச்சருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதி :

விநாயகம் : இந்தியைத் திணிப்பதாகக் கூறியவர்கள் இப்போது தமிழைத் திணிக்கலாமா? ஆங்கிலம் படிக்காமல், புறநானூறு படித்திருக்கிறேன் என்றால் சிம்சன் போன்ற தனிப்பட்ட கம்பெனிகளில் வேலைக்கு எடுத்துக் கொள்வார்களா ?

முதல்வர் கலைஞர் : தமிழ் பயிற்சி மொழி என்பது புறநானூறு, அகநானூறு படிப்பதல்ல. தமிழ், அகநானூறு, புறநானூறோடு நின்றுவிடக் கூடாது. விஞ்ஞானப் புதுமைகளையும் சொல்லும் மொழியாக மாற வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ் பயிற்று மொழி ஆக வேண்டும் என்கிறோம்.

(தமிழகச் சட்டமன்ற விவாதங்கள் - 30.11.1970)

சட்டமன்றத் தீர்மானத்தோடு நின்றுவிடாமல், 1970 டிசம்பர் 17,18 ஆகிய நாள்களில் தி.மு.க. சார்பில் வேலூரில், தமிழ்ப்பயிற்றுமொழி ஆதரவு மாநாடு ஒன்றும் நடைபெற்றுள்ளது. 10.01.1971 அன்று, தமிழ்ப் பயிற்று மொழித் தீர்மானத்தை ஆதரித்துத் தமிழகம் எங்கும் தமிழர் பேரணி நடத்துமாறும் தி.மு.கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தச் சூழலில் 1970 டிசம்பர் 1 ஆம் நாள் விடுதலையில், தந்தை பெரியார், ‘நமது கடமை’ என்னும் தலைப்பில், தமிழ்ப்பயிற்று மொழியை ஆதரித்து தலையங்கம் ஒன்றும் எழுதியுள்ளார்.

அத்தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் :

பாட மொழிப் பயிற்சியைத் தங்களது யுத்த தளவாடமாக எடுத்துக் கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக் கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கக் காரணம் காட்டி மாணவர்களைத் தூண்டி விடுகின்றன. இதற்குப் பார்ப்பனர் அல்லாத விபீ­ணர்களும் ஆளாகிவிட்டிருக்கிறார்கள்.

தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தகறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு இல்லை. நான் பேசுவதும், எழுதுவதும் தமிழில்தான்.

பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்தோடு, தமிழ் மொழிப் பாடத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கருதுகிறேன்.

இவ்வாறு ஆதரவு, எதிர்ப்பு ஆகியவற் றிற்கு இடையே முன்மொழியப் பட்ட அச்சட்டம், 1971 தொடக்கத்தில் திடீரென்று வந்துவிட்ட தேர்தலால் நிறைவேறாமலேயே போய்விட்டது. உண்மைநிலை இவ்வாறிருக்க, நேர்மையானவர் என்று இப்போதும் நம்மால் கருதப்படும் தமிழருவிமணியன் போன்றவர் கள், தவறான தகவல்களை மக்களுக்குத்தருவது எவ்விதத்தில் நியாயமாகும்?

1970 ஆம் ஆண்டில் மணியன் எந்தக் கட்சியிலிருந்தார், தமிழ்ப் பயிற்று மொழித் தீர்மானத்திற்கு ஆதரவாக என்ன நட வடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்கு அவர் மனசாட்சி விடை சொல்லட்டும்.

- சுப.வீரபாண்டியன்

Pin It