விஜயகாந்த்... 

திருச்செந்தூர், வந்தவாசித் தேர்தல்களில் “டெபாசிட்” தொகையைக்கூட இழந்துவிட்டது விஜயகாந்த் கட்சி. காரணம் மக்கள்தான்! வேறு யார்? துடித்துப் போன விஜயகாந்த் சொல்கிறார் பாருங்கள் : 

“எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களின் முடிவு ஜனநாயக முறைக்குத் தீங்கு விளைவிப்பதாகும்.” 

பலே, விஜயகாந்த்! உங்கள் கட்சி டெபாசிட் இழந்தது உங்களுக்கு நடக்கக் கூடாத ஒன்றுதான் - நாட்டுக்கோ மக்களுக்கோ அல்ல! நீங்கள் டெபாசிட் இழந்தது உங்கள் ஜனநாயக முறைக்குத் தீமைதான் - மக்கள் ஜனநாயகத்திற்கு அல்ல! அது சரி விஜயகாந்த்! இந்தத் தோல்வி ஏழைகளின் தோல்வி, ஜனநாயகத்தின் தோல்வி என்றெல்லாம் புலம்பியிருக்கிறீர்களே; அந்த ஏழைகள் தானே உங்களைத் தோற்கடித்து டெபாசிட்டைப் பிடுங்கி இருக்கிறார்கள். இது அவர்களுடைய ஜனநாயகம் அல்லவா! இது கூடப் புரியாமல் என்னய்யா கட்சி நடத்துகிறீர்கள்? இதில் அறிக்கை என்று உளறல் வேறு! சரி... சரி! அடுத்த “முதலமைச்சர்” நீங்கள்தான் கொஞ்சம் சமாதானம் அடையுங்கள். 

....ஜெயலலிதா 

இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் -ஜெ. அறிக்கை  

அப்படியானால் திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் தி.மு.க வெற்றிபெறும், அதிமுக தோல்வியடையும் என்று முன்பே ஜெயலலிதாவுக்குத் தெரிந்திருக்கிறது என்றுதானே பொருள். பிறகு ஏன் இவர்கட்சி போட்டியிட்டதாம்? 

ஜெ. கட்சி வெற்றிபெற்றால் மட்டும் ஜனநாயகம். தி.மு.க. வெற்றி பெற்றால் பணநாயகம், அராஜகம். ஜெ.கட்சி தேர்தலைச் சந்திக்கும் போதெல்லாம் பணமே செலவு செய்யாமல் திருவோடு ஏந்தியா வாக்குக் கேட்கிறார்கள்! 

“எனது” வேண்டுகோளை ஏற்று அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. “நான்” “எனது” “என்னுடைய” என்ற ஆணவச் சொற்களின் அரசிக்கு மக்கள் - அரசு- கட்சி- நாம் என்ற சொற்களே பிடிக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். 

இருந்தாலும் ஜெயலலிதா ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலின் வெற்றி குறித்து முதல்வர் கலைஞர் சொன்ன கருத்து இது. 

“தி.மு.க அரசின் சாதனைகள், மக்கள் தொடர்பு, மக்கள் பிரச்சினைகளில் காட்டுகிற அக்கறை ஆகிய காரணங்களுக்காக, மக்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களித்திருக்கிறார்கள்” - இங்கே ஆணவம் இல்லை. 

ஜெ. வார்த்தையில் சொன்னால், “ஜெயலலிதாவின் இந்த அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்!”