கவிஞன் ஒரு கருவுக்காகத் தவமிருக்கிறான். கைப்பற்றியதும் அக்கருவைச் சுற்றி ஊட்டந்தரும் சொற்களை அடுக்குகிறான். நிறைவின்மை அவனை அலைக்கழிக்கும்போது சொல் வேண்டி மீண்டும் தவமிருக்கிறான். அதன் விளைவாய்ச் சக்கைகள் உருவுவதும், சத்துணவைச் செருகுவதும் நிகழ்கிறது. தன் சொற்களை வெல்லும் சொற்கள் இல்லையென அவன் தீர்மானித்ததும் கவிதை கருத்தரிக்கிறது. தன் படைப்பில் தன் சிந்தனை விழிதிறப்பதைக் கண்டதும் பெருமிதம் கொள்கிறான் கவிஞன். அதை ஆரத்தழுவி விழா எடுக்கிறான். அப்படைப்பைச் சமூகமும் கொண்டாடும்போதுதான் அது இறவாத இலக்கியம் என்பது அவன் அறிந்ததே. தன் படைப்பைத் தான் கொண்டாடுவதற்கும் சமூகத்தைக் கொண்டாட வைப்பதற்கும் இடையேதான் கவிஞனின் போராட்டம். இப்போராட்டத்தில் அவன் வாகை சூட வேண்டும்.

மென்மையான உணர்வுகளையும், சின்னச் சின்ன நிகழ்வு களையும் தற்காலக் கவிஞர் பலர் ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். அவை பெருவெள்ளத்தின் ஒரு துளி; எரிமலையின் ஒரு பொறி என்பதை உணர்ந்தவர்கள் குறைவு. இருப்பினும் சிறு சலனங்கள்கூட, பேரதிர்வை நோக்கி நகரும் என்பதே என் நம்பிக்கை.

கவிஞனின் மனவெளிக்குள் உலவுவது எளிதன்று. அதிலும் செந்திலரசுவின் ஆழ்மனதுக்குள் இறங்குவது சற்றுக் கடினம். காரணம் அவர் தலைப்பில் தெறிக்கிறது கவித்துவம்.

போதியனவன்
விளம்புவதில்லை
புத்தனென்று.

போதியானவன் யார்? ‘அருள் வீற்றிருந்த தருநிழல் போதி முழுதுணர்ந்த முனிவன்’ என்று வீர சோழியம் உரைக்கான மேற்கோள் பாடல் ஒன்றும் கூறும். அவன் ‘வாழ்வாங்கு வாழ்ந்து வான் புகழ் எய்தியவன்’. முழுதும் உணர்ந்து, வான்புகழ் எய்தியவன் மீண்டும் தன்னைப் புத்தனென்று விளம்ப வேண்டியதில்லை. பௌத்தம் இன்று மதமாகிவிட்டது. இலங்கையில் பிக்குகளும் புத்தனென்று சொல்லிக் கொள்வோரும் தமிழர்களின் வாழ்வுரிமையை மறுத்தனர். பீரங்கிச் சத்தங்களால் அமைதியைச் சாய்த்தனர்.

தமிழர்களைக் கொன்றொழிக்கவும் நாட்டைவிட்டுத் துரத்தவும் அவர்கள் தயங்கவில்லை. இந்தப் பௌத்த மனத்தைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார் செந்திலரசு.

என்னைக் கவர்ந்த முதல் கவிதை பீலி ஒதுக்கிய சமணன். 2500 ஆண்டுகளுக்கு முன்பே சமணம் அகிம்சையைப் போதித்தது. மண்ணை உடலாகவும், காற்றை உடலாகவும், நெருப்பை உடலாகவும், நீரை உடலாகவும், மரம், செடி கொடிகளை உடலாகவும் கொண்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்பது அவர்கள் கண்டறிந்த உண்மை. ஜெர்மனியில் நடந்த அறிவியல் மாநாட்டில் ஜெகதீச சந்திரபோசு மரம், செடி, கொடிகளுக்கு உணர்ச்சியுண்டு என மெய்ப்பித்தார். அப்போது அவர், ‘இந்த உண்மையைக் கண்டறிந்து உலகுக்குச் சொன்னவர்கள் ஜைனர்கள்’ எனப் பகிரங்கப்படுத்தினார். எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் சமணர் வாழ்வு இன்று எவ்வாறுள்ளது? செந்திலரசுவின் கவிதை சொல்கிறது.

சமணான பின்னும்
யாதொரு உயிரையும் ஒதுக்க முடிவதில்லை
பீலி கொண்டு

இந்நிலை சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் மட்டுமல்ல; இந்து, இசுலாம், கிறிஸ்தவம், சீக்கியம் யாவற்றும் பொருந்தும். எல்லா சமயங்களும் உயிரிரக்கம் அற்றுப் போனவைதான். சுரண்டல், துன்புறுத்தல், கொலைகள், அகதிகளாக்குதல் இல்லாமல் ஆளும் வர்க்கங்களின் பேராசைகள் நிறைவேறுவதில்லை. இக்கொடுஞ்செயல்கள் மீது எந்தச் சமயமும் குறுக்கிடுவதுமில்லை. அடுத்து அலைபேசி குறித்த ஒரு கவிதை கவனிப்புக்குரியது.

துளியிரவெனத் தொங்கும்
அச்செவ்வக வௌவால்
பகலினையுண்டு
எண் புழுக்கைகளைக் கிடத்துகின்றன.

அலைபேசியைச் செவ்வக வௌவாலாக்கிக் காட்டுகிறார் செந்திலரசு. அது படிமமாய் நம் விழிக்குளத்துள் குதிக்கிறது. எண்களைப் புழுக்கைகளாக உருவகிக்கும் அவர் கவித்திறன் சிகரத்தைத் தொட்டுவிடுகிறது. ‘காலச்சாரதி’ கவிதையில் ஒரு பெண்ணைப் பற்றிய வரிகள் குறிப்பிடத்தக்கவை.

மறைவாக நின்றழைத்த
கொடியாள் கொங்கையொரு
யானை மத்தகமென
கண்களில் மதர்த்திருந்ததையும்...

கொங்கைக்கு யானையின் தலையை (மத்தகம்) ஒப்புமையாக்குகிறார். பருத்த திரண்ட கொங்கையால் உண்டான செருக்கு, அவள் கண்களில் உருள்வதை உற்றுநோக்க வைப்பதில் இலக்கியத் தேன் சொட்டுகிறது. இன்னொரு கவிதையின் வரிகளும் நம்மை இன்புறுத்துகின்றன.

நுண்மணலைத்
தேய்ந்துதிர்ந்த உடலொரு பெருங்கூடாமோ?
துந்துபியாமோ?

நுண்மணலைப் போல் தசை தேய்ந்து உதிர்ந்த தேகம். அதைப் பெருங்கூடாக்குகிறார். அந்தக் கூட்டுக்கு ஒரு ஒப்புமை துந்துபி. துந்துபி என்றால் பேரிகை. அது தாளக் கருவி; உள்ளீடு அற்றது. அதனால் தசையற்ற கூட்டுக்கு அது உவமையாயிற்று.

இது போன்றதே ‘அகர்த்தக் கிடக்கிறது கனவின் நெடுவிரல்’ என்ற வரியும். அகர்-பகல். அகர்மணி, அகர்பதி, அகர்நாதன் என்பன கதிரவனைக் குறிப்பவை. அகர்த்தன் - செயலற்றவன். இவ்வரி, ‘செயலற்றுக் கிடக்கிறது கனவின் நெடுவிரல்’ எனப் பொருள் தரும்போது செந்திலரசுவின் சொல்லாட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. துந்துபி, அகர்த்தக் கிடக்கிறது போன்ற பதச் சேர்க்கைளை தொகுப்பின் பல இடங்களில் காண முடிகிறது. எளிதில் புரியாது. புரிந்துவிட்டால், பொருட்செறிவு கண்டு பூரிக்காமல் இருக்க இயலாது.

பிரக்ஞை, சிருஷ்டி, ஸர்ப்பகணம், பாஞ்ஜசன்னியம் போன்ற சமஸ்கிருதச் சொற்கள் சற்று உறுத்துகின்றன. சொற்களைத் தேர்வதும், வரிகளைக் கட்டமைப்பதும் கவிஞனின் தனியுரிமை எவரும் தடையாணை பிறப்பிக்க முடியாது. இருப்பினும் கவிஞர்கள், தம் வட்டாரத்துக்கே உரித்தான சொற்களையும் கவிதைக்குள் கொண்டுவர முயற்சிக்கலாம்.

இத்தொகுப்பு செந்திலரசுவின் மூன்றாம் படைப்பு. இதில் 42 கவிதைகள். பல காலச்சுவடு, உயிர்எழுத்து, அம்ருதா, கணையாழி, யுகமாயினி போன்ற முன்னணி இதழ்களில் வெளிவந்தவை. இந்த விதைநெல்களைத் தமிழ் மண்ணில் தூவினால் தலைமுறை தலைமுறையாய் நல்ல மகசூல் கிடைக்கும். அந்த மகசூல் கவிஞர் செந்திலரசுவை அடையாளம் காட்டும். இந்த நம்பிக்கையோடு அனைவரும் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

போதியானவன் விளம்புவதில்லை புத்தனென்று
வெளியீடு : புன்னகை, 68 - பொள்ளாச்சி சாலை, ஆனைமலை - 642 104. விலை : ரூ.50/-