'நல்லி'யின் 'மஞ்சரி கலெக்ஷ'னில் மலர்ந்தவள்
ரத்தினக் கம்பள உதட்டிலும்
மேலிமை வண்ணத்திலும்
நீள் நகப்பூச்சிலும்
கால் விரலிடுக்கிலும்
தேவதையின் காகித
வாசனையிழைந்த மேனியிலும்
திசைதின்னும் பார்வையிலுமென சில
சொற்களைப் பறித்து
பவளத்திலாடுமவள்
நெற்றிச்சுட்டியின் நளினத்தை ஒற்றியெடுத்து
இக்கவிதையைக் கட்டமைத்தேன்.

அவள் போலவே பல
பாவனைகள் காட்டும்
இவ்வரிகளுக்கு
உயிர்தருமொரு வார்த்தை
தேடிச் சலித்தோய்ந்த கணத்தில்
அத்தனை நரம்புகளும் அறுந்து வீழ
அழகை இசைத்தவள்
ஒற்றைப் புன்னகையிட்டு
உயிர்த்துகிறாள்
இன்று-

அவள் வனப்பையுடுத்திச் சிறகசைக்கும்
வண்ணத்துப்பூச்சியின் குதூகலமென
விமர்சிக்கிறான்
ஒருவன்.

அவள் வனப்பின் ஒரு 'டினையர்'
குறைய மொழிபெயர்த்துகிறான்
மற்றொருவன்.

இறுதிவரை முழுமையுறாமல்
வெறுப்பின் மீதொரு எறும்பினைப் போலூர்ந்து
இப்படியொரு முற்றுப்புள்ளியில்
நிறைவு செய்கிறேன்
நான்.

நாளை...
இக்கவிதையும்
நஞ்சினை உள்வைத்து மலர்தல் செய்யும்
விமர்சித்தவனுக்கும்,
மொழிபெயர்த்தவனுக்கும்,
எனக்கும்,

ஒரு துளி அதிகமாய்...
உங்களுக்கும்.

*டினையர் - பட்டு நூலினை அளக்கம் அலகு

- பொ.செந்திலரசு