வேலைக்குப் போக வேண்டாமென
அப்பாவிடம் சொன்னேன்
துரு பிடிக்கத் தொடங்கின
அவர் கண்களும்
உழவு செய்த கலப்பைகளும்...
அப்பொழுது
அரசாங்க வேலைக்கென ஆணை
என் கையில் இருந்தது...
கொஞ்சம் நாளில்
ஆடு மாடுகளை எல்லாம்
விற்கும்படி சொன்னேன்.
வெறிச்சோடிக் கிடந்தன
அவர் மனசும்
மாட்டுக் கொட்டகையும்.
குடும்பத்தோடு
நகரத்திற்கு குடிபெயர்ந்த பின்
அப்பாவைப் போல்
நடைபிணமாக வாழ்ந்து கெட்டது
அவர் பார்க்காத வயல்வெளி...

- பாரிமேகம்