பா.குமார் கவிதைகள்  (18.03.1976)

தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல், எம்ஃபில் ஆய்வில் “பச்சைத் தேவதைக் கவிதைகளில் கருவும் கட்டமைப்பும்” என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முனைவர் பட்ட ஆய்வில் “பின்நவீனத்துவ நோக்கில் மறுவாசிப்பு இலக்கியங்கள்” என்னும் தலைப்பில் கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தில் ஆய்வை முடித்து வாய்மொழித் தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

25க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தேசிய, மாநில, உலக அளவிலான கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டு, நூல்களில் வெளிவந்துள்ளன. புதுப்புனல், புன்னகை இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சொந்த ஊர் தேனி மாவட்டம், இராஜதானி. தற்போது பழனி, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் சுயநிதிப் பிரிவில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

1

பால்ய வாசம்

நினைவுகள் பின்னோக்கி நகர்ந்திட
வாகனங்கள் ஊர்ந்திடும் நகரவாழ்வின்
தடங்களில்
அணைந்து ஒளிரும் மண்வாசம்.
குழவி ஈன்ற எனது பின்னவளின்
பிரசவ வாசம் தொலைத்து - அவளின்
மழலையை முத்தமிடுகையில்
பால்வாசம் தொலைத்து,
உறங்குகையில் அம்மாவின்
சேலைக்குள் முகம்புதைத்த வாசம் தொலைத்து,
புத்தகப்பை சுமக்கையில் நுகர்ந்திட்ட
அப்பாவின் வாசனையை தொலைத்து,
பாட்டி கதைசொல்கையில் ஒட்டிக்கொண்ட
அவளின் வெற்றிலை வாசம் தொலைத்து,
விழாக்காலங்களின் அதிகாலையில்
அம்மா அவித்த இட்லியின் வாசம் தொலைத்து,
இன்று
மழைக்காலத்து வீசிடும் மண்வாசம்
நகரத்தின் தெருக்களின்
இறுக்கமான முகங்களிலும்
இயந்திர மனிதர்களிடமும்
புழுக்கங்கள் நிறைந்த வீதிகளிலும்
மணப்பதே இல்லை
தொலைந்துபோன அந்த வாசங்கள்.

2

கண்ணாடி

முகம் பார்த்தும்
உடல் அழகு பார்த்தும்
கேசம் தடவியும்
ஆடை சரிசெய்தும்
உடலின் நிர்வாணத்தைக் காட்டிடும்
கண்ணாடி.
அவர்களின் மனங்களை
அவர்களுக்கு காட்டுவதேயில்லை.


3
உயிர்ப்பு

தக்கையில் சிக்கித் தவித்த - மீன்
துடிப்பதில் ஒரு மகிழ்வு
துள்ளிக் குதிப்பதில் ஒரு மகிழ்வு.
நெட்டுயிர்ப்புக்களுடன்
அலைபாய்ந்த கண்கள் - அதன்
எடைகண்டு கனத்த
எனது திருப்திக்கு,
இரையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
எனதந்தக் கண்களில் உயிர்வந்திட
மூச்சுத் திணறலில் காற்றை உதிர்த்து
முடித்துக் கொண்டது ஒரு மீன்.


4

விலகிச் செல்லும் பயணம்

எனது பயணத்தில்
தொடர்ந்து வருகிறது பாதை.
முன்னோக்கிச் செல்ல - தார்ச்சாலை
வெப்பங்களின் தகிப்பில்
பின்னோக்கி நகர்கிறது.
உயிர் வாழ்தலின் நிமிடங்கள்
கழிந்து செல்கையில்
முடிவுக்கான காலங்களும்
பின்னோக்கியே நகர்கின்றன.
நான் பயணத்தைத் தொடர்ந்திட
நால்வர்
எனக்குப் பின்னே செல்கின்றனர்.
அவர்களை வீழ்த்தி
அடித்தலும் துரத்துலுமாகச் செல்கிறது
இருத்தலுக்கான பயணம்

5

வாகனங்கள் நீங்கி
வெறிச்சோடிக் கிடக்கும்
தெருக்களின் நிசப்தங்களுக்குள்
ஒளிந்து கொண்டிருக்கிறது
தார்ச்சாலைகளில் சிதறிக்கிடக்கும்
கருஞ்சிவப்புக்குருதி

6

இருளின் அறை

*
அறைக்குள் பாதம் தடவுகையில்
குரங்கொன்று குதித்து
கவ்விக்கொண்டு சென்றது
ஆறறிவை

*
உடலின் சாற்றைப் பிழிந்து
ஒட்டிக்கொண்ட உதடுகளுக்கு
தாகம் தீர்ப்பதைவிட்டு
வழிந்தோடின வியர்வைத் துளிகள்

*
மூச்சுக்காற்று
கரை ஒதுங்கப்போவதாய் நினைத்து
அதிகமாய் அடித்துக் கொண்டது
அடிபடாத இடத்திலிருக்கும் இதயம்...

*
கான்கிரீட் கட்டிட
மார்பிள் தரையில்
சில்லிட்ட முற்களின்மீது நடக்கின்றேன்
பெரும்கடல் பொங்கலின் ஓசைகளில்

*
பூனை துரத்தும் எலியின்
தடத்திலேயே தொடர - அது
ஒளிந்து கொண்ட பொந்திற்குள்ளே
எனதுயிரும் மறைத்து வைக்கப்படுகிறது

7

குளத்து அமைதி குலைத்து
வட்டம் போட்டுச் செல்லும் சுழியில்
புறப்பட்டுச் சென்ற
நாரைகளின் முகங்கள்
கோணல்களாக ஓடி மறைந்திட,
காற்றின் துரத்தலில் ஓடிய
மேகங்களும்
இரவைத் தொலைத்து எழுந்த
சூரியனும்
நீர்வரைந்திட்ட கோலங்களில்
உருவை மாற்றிக்கொண்டு
ஓய்வுகளுக்குப் பின்பு
நின்ற இடத்திற்கே திரும்பி வந்தன
அடுத்த மீள்பயணங்களுக்காக.

8

உலகும் உயிரும்

யுகங்கள் தோறும் பிறக்கும்
இறைகளெல்லாம் -இப்பொழுது
மறுபிறப்பெய்துவதே இல்லை.
*
அடைக்கலம் புகினும் -இன்று
ஞானமற்ற
தோட்டாக்கள்
தன்னைத் துறக்கின்றன.
*
ஓநாய்கள் குதறிச்சென்ற
தேவதைகளின்
உயிரற்ற நிர்வாணங்கள் அடிக்கடி
அவ்வப்போது
காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
*
தனதுடலைப் பார்த்து
அலைகின்ற ஆத்மாக்கள்
கழுகிடம் சொல்லி
கொத்தித் தின்கின்றன.
*
உலகப்பற்றுதலுக்காய்
உலகப்பற்று நீங்கிப்போய்
கலவிபெற்று துறவம்கொண்ட
உடல்கள் வேகின்றன
வேள்வித்தீயில்.

9

முதுமை

என் முதுமையினைக் களைத்துப்போட்ட காலத்தை
சாமத்தில் நாக்கைத்தொங்கவிட்டு
நின்றிட்ட நாயின்
இருவிழிகளில் ஆந்தை அமர்ந்துகொண்டு
தூங்காத முதியவளின்
ரேகைகளையே நோக்கிக் கொண்டிருந்தது.
கனன்று கொண்டிருந்த வெறிக்கு
கண்களின் ஆழங்களில்
மறைப்பதற்கேதுவாய் மலைமுகடுகளில்
திரைகட்டி நின்றிருந்தது கடல்நீர்
நிதானமாய் நின்றவரிடத்து - நாய்
அலைந்து கொண்டிருந்தது.
கனியிடத்துச் சென்ற வௌவால்
ஓரிடத்தும் நில்லாது
இருவருக்கும் ஏதும் சொல்லிடாது
அலைந்துகொண்டிருக்க,
தூரதேசத்துப் பயணத்தின் பொழுதைச்
சொல்லிட்ட கர்வத்துடன்
எதிரெதிர் கிளைகளில் இருவருமிருக்க
பெற்றவளிடத்தும் சொல்லாது
உதிர்ந்துபோனது பழுத்த கனிமட்டும்.


9

இறவாமை

என்னின் பாட்டிக்காக பிணையிருந்தால்
எனது தாய்.
என்னின் தாய்க்காக பிணையிருக்கின்றோம்
நானும் எனது குழந்தைகளும்,
கொத்து கொத்தாய் முன்னோர்கள்
உதிர்த்துவிட்டுச் சென்றவைகள்
எனது பிள்ளைகளின் சாயல்களில் தொடர்கிறது.
அவர்கள் சேர்த்துவைத்தவைகளிடத்து
உடல்மீது இன்னொரு உடல் இயங்குகிறது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள
முகத்தின் சாயல்களும்
சுயமற்ற அடையாளங்களும்
இப்பொழுது -என்னைக் குறித்து
எனது நண்பன் சொல்லிட்ட
'தற்சுயநல'அடையாளத்தையும்
இழந்தே வாழ்கின்றேன்.

10

உருமாற்றம்

நான் விழியற்று இருந்திருந்தால்
இந்த உலகம் எப்படியிருந்திருக்கும்?
செவிகள் இயக்கமற்று இருந்திருந்தால்
ஓசைகள் எப்படிக் கேட்டிருக்கும்?
ஊமையாக இருந்திருந்தால்
உள்ளும் புறமும்
எப்படி வெளிப்பட்டிருக்கும்?
கைகள் இல்லாதிருந்தால்
எனக்கான உணவை
எப்படி உண்டிருப்பேன்?
கால்கள் இல்லாதிருந்தால்
எனக்கான தூரங்களை
எப்படிக் கடந்திருப்பேன்?
இப்பொழுது
படைப்பின் முழுநிறைவில்
எல்லாம் இருந்தும்
உருவங்களற்றே வாழ்கின்றேன்.

11

சமிக்கை

முகங்களின் வரிகளில்
காலங்கள் கோடுகிழித்துச்செல்ல
வானம்பார்த்து வளர்ந்திட்ட
பயிரின் பூப்போடு
வளர்ந்து நின்றவளுக்கு
மாற்றில் சேர்ப்புக்கான ஒத்திகை.

சடங்குகளுக்குள் நுழைபவளுக்கு
யாரோ இழுத்துவிட்டுச் சென்ற
பாடங்கள் புத்தகங்களின்றி
குறிப்புக்கள் கொடுக்கப்படுகின்றன.

நயந்தும் நயவாமலும் தொடர்கிறது
அந்தப்பாடம்.
அப்பிக்கிடந்த கரைகளெல்லாம்
கழுவிடும் முயற்சியில்
பெருமூச்சை உகுக்கின்றன
வளர்ந்த இல்லும் புகுந்த இல்லும்.

வேற்றுப்புலம் வந்த
மருண்டமானுக்கு
உடுத்தியிருக்கும் பட்டுப்புடவையில்
அன்னை சொல்லிக்கொடுத்த
மடிப்புக்கள் விழமறுக்கின்றன.

அம்மா கொடுக்காத
வீட்டுச்சாவியைச் சுமக்கையில் விழுகின்றது
இதுவரை சுமந்திடாத
வீடெங்கும் நிறைந்திருக்கும்
சுகமான சுமைகள்.